இந்தியாவின் தலைசிறந்த சட்டமேதை, சமத்துவம், சமூக நீதி வெற்றிப்பெற போராடியவர், எந்த எல்லைக்கும் சென்று மக்களின் விடுதலைக்காக, அடக்குமுறைக்கு எதிராக தீர்க்கமாகக் குரலெழுப்பியவர், இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கு வடிவம் கொடுத்தவர், இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சர் எனப் பல்வேறு முகங்களில் இன்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறார் பாபா சாகேப் அம்பேத்கர்.
இந்த மகத்தான ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பு நூல், `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்'. விகடன் பிரசுரமும், Voice of Common நிறுவனமும் இணைந்து, வெளியிடும் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா, அம்பேத்கரின் நினைவு தினமான இன்று, சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, நீதியரசர் கே.சந்துரு, அம்பேத்கரின் பேரனும், சமூகச் செயல்பாட்டாளர் ஆனந்த் டெம்டும்டேவும் இந்த புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்கள். ஏற்கெனவே இந்தப் புத்தகத்தின் முன்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், அறிமுகச் சலுகையாக, ரூ. 999-க்கு புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது.