அமெரிக்காவின் ஹம்போல்ட் கவுண்டி, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி கடலில் வியாழக்கிழமை காலை 10:44 மணியளவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும், அமெரிக்காவின் மேற்கு - கிழக்குப் பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்தனர். சுனாமி எச்சரிக்கையைத் தொடந்து, அங்குப் பொருத்தப்படும் எச்சரிக்கை சைரன்கள், பலகைகள் அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. கலிபோர்னியாவின் வடக்குப் பகுதியில் உள்ள மக்களுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன.
அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி காலை 11:10 மணிக்கு ஃபோர்ட் பிராக் அருகே தொடங்கி, வடக்கு கலிபோர்னியா, தெற்கு ஓரிகானில் உள்ள கடற்கரையைக் கடந்து 12:10 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவுக்கு சுனாமி வர வாய்ப்பிருப்பதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால், அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். அதனால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த நிலையில், பெரிய அளவில் கடல் கொந்தளிப்பு இல்லாத நிலையில், சிறிது நேரத்துக்கு முன்னர் சுனாமி முன்னெச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. 1850 - 2004 க்கு இடையில், மொத்தம் 51 சுனாமிகள் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2004 ஆம் ஆண்டு கால் பாலி ஹம்போல்ட் பேராசிரியரான லோரி டெங்லர் தலைமையிலான ஆராய்ச்சியின் படி இத்தனை சுனாமிகளில் இரண்டு மட்டுமே பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனக் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.