அண்மை செய்திகள்
முக்கிய செய்திகள்
சினிமா
உடல்நலம்
Friday, 14 February 2025
Kamal Haasan: "தங்க மகள்களுக்குக் காதல்... கவிதை..." - சினேகனின் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டிய கமல்
சினேகன் - கன்னிகா தாம்பதிக்கு 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
கடந்த மாதம் 25-ம் தேதி இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. இச்செய்தியைத் தங்களின் சமூக வலைத்தளப் பக்கத்தின் மூலமாக அறிவித்திருந்தனர். தற்போது இந்த தம்பதி தங்களின் இரு குழந்தைகளுடன் நேற்று நடிகர் கமல் ஹாசனைச் சந்தித்திருக்கிறார்கள். கமல் இவர்களின் இரு குழந்தைகளுக்குத் தங்க வளையல்களைப் பரிசளித்து 'காதல்', 'கவிதை' எனக் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டியிருக்கிறார்.

இது குறித்துப் பேசிய தம்பதி, ''காதலர் தினத்தில் ... எங்கள் தங்க மகள்களுக்குத் தங்க வளையல்களோடு, காதல் என்ற பெயரையும் கவிதை என்ற பெயரையும் அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்புத் தலைவர் பத்ம பூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள். நீங்களும் வாழ்த்துங்கள் காதல் - கவிதை-யை..." எனச் சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்கள்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
Thursday, 13 February 2025
Modi US Visit: `இந்தியாவுக்கு F-35 போர் விமானம் விற்பனை; ராணுவ வர்த்தகம் அதிகரிப்பு!' - ட்ரம்ப்
பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக பாரீஸில் உள்ள கிராண்ட் பாலசில் நடந்த செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு தலைநகர் வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையில், அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்டையும், தொழிலதிபர் எலான் மஸ்க்கையும் சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி சந்திக்கும் முதல் சந்திப்பு இது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது பேசிய ட்ரம்ப், ``பிரதமர் மோடியுடனும், இந்தியாவுடனும் ஒரு சிறப்பு பிணைப்பை காண்கிறேன். இந்தியப் பிரதமர் மோடி மிகவும் கடுமையான பேச்சுவார்த்தையாளர். வளர்ந்து வரும் சீனாவை எதிர்கொள்ளும்போது ஒத்த எண்ணம் கொண்ட முக்கிய பங்காளியாக இந்தியாவைக் காண்கிறேன்.
அமெரிக்காவின் சிறந்த ராணுவ பரிசுகளில் ஒன்றான F-35 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்கத் தயாராக இருக்கிறேன். இந்த ஆண்டு முதல், இந்தியாவுக்கான ராணுவ விற்பனையை பல பில்லியன் டாலராக அதிகரிப்போம். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் கவனம் செலுத்துவோம்." என்றார்.
Wednesday, 12 February 2025
"செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வேன் எனச் சொன்னால்..!" - உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன?
செந்தில் பாலாஜி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றதில் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், அமைச்சராக தொடர்வேன் என செந்தில் பாலாஜி சொன்னால், வழக்கின் விசாரணையை விரைவுப்படுத்துவோம் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்தனர். பிறகு கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு கடந்த ஆண்டு பிணை வழங்கியது.

அடுத்த நாளே அவர் அமைச்சராகவும் பதவி ஏற்றார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அப்படி வித்தியா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.
"செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள், அது குறித்து அமலாக்கத்துறை தெரிவித்து இருக்க கூடிய தகவல்கள் எல்லாம் மிகவும் தீவிரமானது. இதில் இன்னும் வழக்கு விசாரணை கூட முடியவில்லை. ஆனால் அவ்வளவு அவசரமாக செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்?" என கேள்வி எழுப்பியதோடு வழக்கில் தொடர்புடைய நபர் அமைச்சராக வந்தால், சாட்சியங்கள் அச்சப்பட மாட்டார்களா? பிறகு எப்படி வழக்கு விசாரணை நியாயமாக நடக்கும் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.
"ஏற்கனவே இது குறித்த எங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தோம். அதை செந்தில் பாலாஜி தரப்பு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. எனவே செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சராக தான் நீடிப்பேன் என்று சொன்னால் இந்த வழக்கை நாங்கள் விரைவாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டி இருக்கும்" என கூறினர்.
எனவே முடிவெடுக்க வேண்டியது செந்தில் பாலாஜி தான் என திட்டவட்டமாக கூறினர். அமலாக்க துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தடையியல் நிபுணர் உள்ளிட்ட பல சாட்சியங்கள் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தவரை வழக்கிற்காக நேரில் ஆஜர் ஆகி கொண்டிருந்தார்கள். அவர் பிணையிலிருந்து வெளிவந்து அடுத்த நாளை அமைச்சரான உடன், பயந்து போய் யாரும் தற்போது நீதிமன்றத்திற்கு வருவதில்லை என தெரிவித்தார்
இதனை அடுத்து செந்தில் பாலாஜி தரப்பு, அவர் அமைச்சராக தொடர்வாரா இல்லையா என்பதை நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி வழக்கின் விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Kerala Ragging: அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை; கல்லூரியில் கொடூர ராகிங்
கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் அரசு நர்ஸிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நர்ஸிங் கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடூரமாக ராகிங் செய்த சம்பவம் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்கள் 3 பேரை கூர்மையான பொருள்கள் மூலம் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளனர். காயத்திலும் லோசன் ஊற்றி கொடுமைப்படுத்தி உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டும் ராகிங் செய்துள்ளனர்.

தம்பிள்ஸ் கட்டி தொங்கவிடும்போது மாணவர்கள் கத்தினால் அவர்களின் வாயில் லோசன் ஊற்றி குரூரமாக ரசித்துள்ளனர். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மது குடிக்க முதலாம் ஆண்டு மாணவர்கள் வாரம் ஒருமுறை சுழற்சி முறையில் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டி பணம் வாங்கியுள்ளனர். சீனியரான மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பயந்து ராகிங் கொடுமை பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்ததாக பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் தெரிவித்தனர்.
ராகிங் எல்லைமீறி சென்றதை அடுத்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்ததாகவும் முதலாம் ஆண்டு மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ராகிங் தடுப்புச் சட்டப்படி கல்லூரி முதல்வர் விசாரணை நடத்தினார். அதில் ராகிங் செய்யப்பட்டது உண்மை என தெரியவந்ததை அடுத்து ராக்கிங்கில் ஈடுபட்ட மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்தார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், கோட்டயம் முந்நிலவு பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ஜாண்சன், வயநாடு நடவயல் பகுதியைச் சேர்ந்த ஜீவா, மலப்புறம் வண்டூரைச்சேர்ந்த ராகுல்ராஜ், மலப்புறம் மஞ்சேரியைச் சேர்ந்த ரிஜின் ஜித்து, கோட்டயம் கோருத்தோடு பகுதியைச் சேர்ந்த விவேக் ஆகியோர் ராகிங் செய்தது உறுதியானது. இதையடுத்து 5 மாணவர்களையும் போலீஸார் போலீஸார் கைது செய்தனர்.
RCB: `மீண்டும் கேப்டன் ஆகிறாரா கோலி?' - நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐ.பி.எல் இல் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணியின் நிர்வாகம் நாளை அறிவிக்கவிருக்கிறது.

பெங்களூரு அணியை பல ஆண்டுகளாக கோலிதான் கேப்டனாக வழிநடத்தி வந்தார். 2021 டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் இந்திய அணிக்கான டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகினார். அப்போதே பெங்களூரு அணிக்கான கேப்டன் பதவியையும் துறந்தார். கடந்த சில சீசன்களாக பாப் டூ ப்ளெஸ்சிஸ்தான் அந்த அணியை வழிநடத்தி வந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் டூப்ளெஸ்சிஸை டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. பெங்களூரு அணியும் புதிய கேப்டனாக பார்க்கும் வகையில் யாரையும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஏலத்திற்கு முன்பாகவே கோலி, ரஜத் பட்டிதர், யாஷ் தயாள் ஆகியோரை பெங்களூரு அணி தக்கவைத்திருந்தது.
ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு நிர்வாகம் எடுக்கவில்லை.
ஆக, கோலி மற்றும் ரஜத் பட்டிதர் இருவரில் ஒருவரைத்தான் பெங்களூரு அணி கேப்டனாக தேர்ந்தெடுக்கும் நிலையில் இருக்கிறது. ரஜத் பட்டிதர் உள்ளூர் அளவில் சிறப்பாக ஆடியிருக்கிறார். மத்திய பிரதேச அணியை வழிநடத்தி சையத் முஷ்தாக் அலி தொடரின் இறுதிப்போட்டி வரை அழைத்து வந்திருக்கிறார். பெங்களுரு அணியின் கேப்டன் பதவி கிடைத்தால் மகிழ்ச்சிதான் என வெளிப்படையாகவும் பேசியிருக்கிறார். அதேநேரத்தில், ரஜத் பட்டிதர் ஸ்டார் வீரர் இல்லை. அந்தவிதத்தில் பார்த்தால் கோலி பெங்களூரு அணியின் சாய்ஸாக இருக்கக்கூடும். ஆனால், கோலி இதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டும்தான் பிரச்சனை.

நாளை காலை 11:30 மணிக்கு பெங்களுரு அணி தங்களின் புதிய கேப்டனை அறிமுகம் செய்யவிருக்கிறது.
பெங்களுரு அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்பட வேண்டும் என்பதை பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்