வெளியானது ஜெயிலர் படம்


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம்  இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை  நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 


களைகட்டிய கொண்டாட்டம் 


ஒட்டுமொத்த திரையுலகமும் ஜெயிலர் பட ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், முன்னதாக வெளியான பாடல்கள், இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களை முழு அளவில் திருப்திபடுத்தி விட்டது என்றே சொல்லலாம்.ரஜினி கடைசியாக நடித்த அண்ணாத்த படம் சரியாக ஓடவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த ரசிகர்களை இப்படம் பெரிய அளவில் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி பார்த்த ரஜினி பெரிய அளவில் மன மகிழ்ச்சியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதனால் வழக்கத்தை விட ரசிகர்கள் அதிக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அன்னதானம், இரத்ததானம் என வேற லெவலில் ஜெயிலர் ரிலீஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தியேட்டர் வளாகங்கள் திருவிழா நடக்கும் இடங்கள் போல தோரணங்கள், கட் அவுட்டுகள், பேனர்கள் என களைக்கட்டியுள்ளது. விடிய விடிய ரசிகர்கள் தியேட்டர்களில் குவியத் தொடங்கியுள்ளனர். 


சமூக வலைத்தளங்களில் விமர்சனம்


இதனிடையே ஜெயிலர் படத்தின் விமர்சனம் என சமூக வலைத்தளங்களில் ஒரு சில பதிவுகள் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பதிவில், “சிவாஜி தி பாஸ்” படத்துக்கு பிறகு ஜெயிலர் தான். நான் சிவாஜி படத்தை 50 முறைக்கு மேல் தியேட்டரில் பார்த்துவிட்டேன். அப்படி தான் ஜெயிலர் படமும் இருக்கிறது” என கூறப்பட்டுள்ளது.அதில் ஜெயிலர் படம் பிற மொழிகளில் டப் செய்ய உபயோகப்படுத்தப்பட்ட ஸ்டூடியோவில் இருந்து வெளியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  ரஜினி கம்பேக் கொடுத்த பேட்ட படம், அவரது ரசிகர் கார்த்திக் சுப்புராஜின் ஃபேன் பாய் படமாக இருந்தது. ஆனால் ஜெயிலர் படம் அப்படியல்ல, வேற லெவல்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேபோல் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ‘மிர்னா’ தரமான சம்பவம் இன்று காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார். எது எப்படியோ ஜெயிலர் படம் தங்களை மகிழ்விக்கும் என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.