மழைக்காலம் வந்தால், மாடித்தோட்டங்கள் கொஞ்சம் சேதமாகும். மழைக்குப் பிறகு மாடித்தோட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த மாடித்தோட்ட ஆர்வலரும் தோட்டக்கலை வல்லுநருமான அனூப் குமார் சொல்கிறார்.
தண்ணீரை வடிக்க வேண்டும்!
மாடித்தோட்டத்தைச் சீர் செய்ய வேண்டுமென்றால் முதலில் மாடியின் தரையை சுத்தமாக்க வேண்டும். தரையில் பாசி படர்ந்திருந்தால நம்மால் உள்ளே நடமாட முடியாது. பின் தொட்டிகளில் உள்ள தண்ணீரை வடிக்க வேண்டும். தொட்டி மற்றும் பைகளில் தேங்கியுள்ள தண்ணீரை எவ்வளவு சீக்கிரத்தில் வடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் வடித்துவிடுவது நல்லது. தண்ணீர் சரிவர வடியவில்லையென்றால், தொட்டியிலுள்ள துளைகள் வழியாக கம்பியை நுழைத்து தண்ணீரை வெளியேற்றிவிட வேண்டும். தண்ணீரை எவ்வளவு விரைவாக வெளியேற்றுகிறோமோ அந்த அளவுக்கு வேரழுகல் நோய் ஏற்படாது.
ஈரப்பதத்தைக் குறைக்க வேண்டும்!
மண்ணானது ஈரப்பதத்தோடு கட்டியாக இருக்கும். அதனால் தொட்டிகளை வெயிலில் வைப்பதன் மூலம் மண்ணிலுள்ள ஈரப்பதத்தைக் குறைக்கலாம். அதற்காக செடிகள் வளரும் பைகளை வலுக்கொண்டு நகர்த்த வேண்டாம். ஏனென்றால், பைகள் கிழிந்துவிடுவதற்கு வாய்ப்புண்டு. பைகளை பாதுகாப்பான முறையில் நகர்த்த முடிந்தால் நகர்த்துங்கள். இல்லையென்றால் தண்ணீரை மட்டும் வடித்துவிடுங்கள்.
நேராக நிமிர்த்துங்கள்!
செடிகளின் கிளைகள் முறிந்துவிட்டிருந்தால் அவற்றை கத்தரிக்கோல் கொண்டு வெட்டிவிட வேண்டும். செடிகள் சாய்ந்துவிட்டிருந்தால் நேராக நிமிர்த்தி, செடிக்கு அருகில் ஒரு குச்சியை நட்டு செடியைக் கட்டிவிட வேண்டும். செடிகள் முழுவதுமாகப் பட்டுப்போய்விடும் நிலையில் இருந்தால், அப்புறப்படுத்திவிட்டு புதிதாக நடுவது நல்லது. அதேபோல் தொட்டிக்குள் களைகள் இருந்தால் தற்போதைக்கு அதைப் பறிக்க வேண்டாம்.
வேர்களுக்கு ஊட்டம் தர வேண்டும்!
தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு, மண் லேசாகக் காய்ந்த பிறகு சாணம், கடலைப் புண்ணாக்கு, கடையில் கிடைக்கும் எலும்புத்தூள் (Bone meal) ஆகியவற்றை 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து செடியைச் சுற்றிப் போட்டால் வேர்களுக்கான ஊட்டம் கிடைத்து செடிகள் நன்றாகவே வளரும். மழைக்காலத்தில் பூஞ்சணத் தாக்குதல் இருக்கும். இதற்கு டிரைக்கோ டெர்மா விரிடி என்ற உயிர் உரத்தை 20 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்துத் தெளிக்கவும்.
கவாத்து செய்ய வேண்டும்!
செடிகளைக் கவாத்து செய்துவிட வேண்டும். கவாத்து செய்த இடங்களில் பூஞ்சணத் தாக்குதல் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. இதைத் தடுக்க, 20 கிராம் சூடோமோனஸை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, கவாத்து செய்த இடங்களில் தெளிக்கவும். கிளைகள் முறிந்த செடிகளிலும் இதைப் பயன்படுத்தலாம். பூச்சிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். பூச்சிகள் தென்பட்டால் முடிந்த அளவு கைகளால் எடுத்து அப்புறப்படுத்திவிடலாம். அதிகமாக இருந்தால், மீன் அமிலத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மி.லி என்ற அளவில் கலந்து தெளித்தால், பூச்சிகளைக் கட்டுப்படுத்திவிடலாம்.’’