Doctor Vikatan: என் வயது 37. வாழ்க்கையில் முதல்முறையாக உடற்பயிற்சி மையத்தில் சேர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக உடற்பயிற்சி செய்து வருகிறேன். அதன் பிறகு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இது உடற்பயிற்சியின் பக்க விளைவா... இதை எப்படிச் சரி செய்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
உடற்பயிற்சி செய்வதற்கும் வயிறு சரியில்லாமல் போவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உங்களுடைய உணவுப்பழக்கம் எப்படியிருக்கிறது, எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்ற விவரங்களை எல்லாம் முதலில் கவனியுங்கள்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல், உடல் வறண்டு, சூடானாலும் வயிறு தொடர்பான பிரச்னைகள் வரலாம். நீங்கள் அடிக்கடி வெளி உணவுகளைச் சாப்பிடுபவராக இருந்தாலும் வயிற்றுக் கோளாறுகள் வரலாம். ஒவ்வொரு வேளை உணவுக்கும் எவ்வளவு இடைவெளி விடுகிறீர்கள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். வொர்க் அவுட் செய்த பிறகு அடுத்த வேளை உணவை செரிமானம் செய்யும் அளவுக்கு இடைவெளி விடுகிறீர்களா என்று பாருங்கள்.
வொர்க் அவுட் முடித்ததும் நீங்கள் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு 45 நிமிடங்கள் கழித்து உங்கள் உணவை எடுத்துக்கொள்ளலாம். இது போஸ்ட் வொர்க் அவுட் எனப்படும் உடற்பயிற்சிக்குப் பிறகான அட்வைஸ். ப்ரீ வொர்க்அவுட் என்பதில் வொர்க் அவுட்டுக்கு 40 நிமிடங்களுக்கு முன்பு மிதமாக ஏதேனும் சாப்பிடலாம். அப்போதுதான் அது எளிதில் செரிமானமாகும். வொர்க் அவுட் செய்வதற்கு முன் வயிறு நிறைய எதையும் சாப்பிடக்கூடாது.
சாதாரணமாக நீங்கள் காலை 9 மணிக்கு பிரேக் ஃபாஸ்ட் எடுப்பவர் என்றால், 12.30 மணிக்கு மதிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கிடையில் 11 மணி வாக்கில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளலாம். மீண்டும் 4 மணி வாக்கில் ஏதேனும் சாப்பிட்டால், 7 மணிக்கு இரவு உணவை முடித்துவிட வேண்டும். உங்களுக்கு எவ்வளவு பசிக்கிறதோ, அந்த அளவு மட்டும் சாப்பிட்டால் போதும். வொர்க் அவுட்டுக்கு 40 நிமிடங்களுக்கு முன்பும், வொர்க் அவுட் செய்த உடனேயும் புரோட்டீன் உணவுகள் சாப்பிடலாம். அந்த இடைவெளி சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
இவற்றையெல்லாம் சரியாகப் பின்பற்றிப் பாருங்கள். நீங்கள் நினைக்கிறபடி, உடற்பயிற்சியால் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பில்லை. மேற்குறிப்பிட்ட விஷயங்களை எல்லாம் பின்பற்றிய பிறகும் வயிற்றுக் கோளாறுகள் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.