Doctor Vikatan: கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம்- இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து வறுத்துப் பொடித்து தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்படும், வேறெந்த நோய்களும் அண்டாது என பலரும் சொல்கிறார்கள். கருஞ்சீரகத்துக்கு மரணத்தையே வெல்லும் தன்மை உண்டு என்றும் சொல்கிறார்கள். இது உண்மையா? இந்தப் பொடியை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா... இதன் பலன் என்ன?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
நீங்கள் குறிப்பிட்டுள்ள கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றின் பொடிக் கலவையை நீரிழிவு பாதித்தவர்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இது மட்டுமே நீரிழிவைக் கட்டுப்படுத்திவிடும் என்று நம்பக்கூடாது.
நீரிழிவு உள்ளவர்கள், மற்ற சிகிச்சைகளோடு சேர்த்து இதையும் எடுத்துக்கொள்ளலாம். இதை எடுத்துக்கொள்வதால் சர்க்கரைநோய் தானாகக் குறைந்துவிடும் என அலட்சியமாக இருப்பதுதான் தவறு. ஆய்வுபூர்வமாகப் பார்த்தால், வெந்தயத்துக்கும் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. கருஞ்சீரகத்துக்கும் அந்தத் தன்மை உண்டு. நீரிழிவுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்கள், அவை சித்த மருந்துகளோ, ஆங்கில மருந்துகளோ... அவற்றுடன் சேர்த்து இந்தப் பொடியையும் துணை உணவுப்பொருளாக எடுத்துக்கொள்ளலாம்.
தினமும் சர்க்கரை சேர்த்து காபி, டீ அருந்துவோர், அதற்கு பதிலாக கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் சேர்த்து அரைத்த பொடியைச் சேர்த்துக் கொதிக்கவைத்த தேநீரைக் குடிக்கலாம்.
அஞ்சறைப் பெட்டியில் உள்ள மற்ற பொருள்களை எல்லாம்விடவும், கருஞ்சீரகத்தில் அளவுக்கதிகமான ஆன்டிக்ஸிடன்ட்ஸ் உள்ளது. குறிப்பாக, தைமோகுயினோன் என்ற வேதிப்பொருள், இதில் மிக அதிகம். கருஞ்சீரகத்துக்கு புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தன்மையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. செல்களைப் புதுப்பித்து, உடலின் கழிவுகளை விரைவாக வெளியேற்றி, செல்களைப் புதுப்பிக்கும் தன்மை கொண்டது கருஞ்சீரகம்.
தினமும் இதை கால் டீஸ்பூன் அளவுக்கு பொடியாக எடுத்துக்கொள்ளலாம். பருப்புப்பொடி தயாரிக்கும்போது கருஞ்சீரகத்தையும் சிறிது சேர்த்துக்கொள்ளலாம். வாரத்தில் இரண்டு நாள்கள் கருஞ்சீரகம் சேர்த்துக்கொதிக்கவைத்த டீ போன்று அருந்தலாம். குழந்தைகளுக்குத் தேவையில்லை. மற்றபடி பெரியவர்கள் அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.