லஞ்ச விவகாரம்...
இந்திய கோடீஸ்வரரும், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவருமான கௌதம் அதானி தரப்பு ஒப்பந்தம் ஒன்றை பெறுவதற்காக 250 மில்லியன் டாலர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாகவும், அதை மறைக்க பல்வேறு திட்டங்களை தீட்டியதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்காவில் பதியப்பட்டிருக்கும் வழக்கில், 'இந்தியாவில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் சில ஒப்பந்தங்களை கைப்பற்ற இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 2 பில்லியன் டாலர்கள் லாபம் மட்டும் கிடைக்கும். ஆனால், லஞ்ச விவகாரத்தை மறைத்து அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் பத்திரங்கள் மற்றும் கடன் மூலம் சுமார் 3 பில்லியன் டாலர்கள் திரட்டியுள்ளனர்" என கூறப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
அந்தவகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு எவ்வளவு கையூட்டு கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் அதில் இடம் பெறவில்லை என்றாலும் கூட கையூட்டு பெற்றதில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, கையூட்டு வழங்கப் பட்டதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால கட்டத்தில் தான், அதாவது 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்ததில் தமிழ்நாடு மின்சார வாரியமும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமும் கையெழுத்திட்டுள்ளன. சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததால் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.
மு.க.ஸ்டாலின் - கவுதம் அதானி சந்திப்பு
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.40,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்சார வாரியம் இலாபத்தில் இயங்கவில்லை. இதற்கு அதானி போன்ற நிறுவனங்களிடமிருந்து கையூட்டு வாங்கிக் கொண்டு அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதுதான் காரணம். கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன?. அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்..!
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில், "ராமதாஸுக்கு வேலை இல்லை. அதனால் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்; அவருக்கெல்லாம் நான் பதில் கூறிக் கொண்டிருக்க முடியாது" என்றார்.
மூத்த அரசியல் தலைவரை ஸ்டாலின் அவமதித்துவிட்டார் என தலைவர்கள் கொதித்தனர். பா.ஜ.க-வில் பெரும்பாலான தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பா.ஜ.க தமிழிசை கண்டனம்..
இதுதொடர்பாக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, "மரியாதைக்குறிய முதல்வர் அவர்களே.. மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம். மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துகள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துகள் தானா... ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்.
அதுவும் பா.ம.க தலைவர் பெரியவர் ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர எனக்கும் வேலை வேலையில்லாமல் இதை சொல்லவில்லை. 2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும். யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை. யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை" எனக் கொதித்தார்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்...
இதேபோல் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, "தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த தி.மு.க, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பா.ம.க நிறுவனருமான ராமதாஸ் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. தி.மு.க ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் ஸ்டாலின் மறந்து விட்டார் போலும். ராமதாஸ் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?.
அரசியலில் தி.மு.க-வின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ராமதாஸ் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்" என வெடித்தார்.
தமிழிசை, அண்ணாமலை இதைச் செய்வார்களா?
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "ராமதாஸ் அறிக்கை குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தை தவறுதான். அதேநேரத்தில் கொடிய தவறு கிடையாது. இதைவிட அவதூறான வார்த்தைகளை அனைத்து கட்சிகளும் பேசியிருக்கிறார்கள். சமூக நீதி போராளிகளுக்கான மணி மண்டபம் திறக்க திமுக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை செய்தால் திமுகவுக்கு மைலேஜ் கிடைக்கும். அதை தடுப்பதற்குத்தான் ராமதாஸ் அரசியல் செய்கிறார். ஆனால் முதல்வர், அதானி ரகசியஸ் சந்திப்பு குறித்துதான் ராமதாஸ் கேள்வியெழுப்பினார். அதற்கு தி.மு.க பதிலளித்திருந்தால் பிரச்னை இல்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க அரசியல் செய்து வருகிறது. அதானி, ஸ்டாலின் சந்திப்பு குறித்தும், அதானி விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்தும் சிபிஐ விசாரணை வேண்டும் என தமிழிசை, அண்ணாமலை கேட்கலாமே?. ஏன் அவர்கள் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் மோடிக்கு எதிராக இருவரும் போராடுவார்களா?" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook