இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மெகா ஏலத்தில், ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை யாரும் போகாத விலையாக ரூ. 27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் போனார்.
இந்நிலையில், ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் அன்சோல்ட் ஆன குஜராத்தைச் சேர்த்த 26 வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அடுத்த இரண்டே நாளில் ரிஷப் பண்ட்டின் அரிய சாதனையைத் தகர்த்து புதிய சாதனைப் படைத்திருக்கிறார். அதாவது, குஜராத்தைச் சேர்ந்த இளம் விக்கெட் உர்வில் படேல், 28 பந்துகளில் சதம் அடித்திருக்கிறார்.
இந்தச் சாதனையானது, நடப்பு சையது முஷ்டாக் அலி தொடரில், திரிபுரா, குஜராத் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் அரங்கேறியிருக்கிறது. இந்த ஆட்டத்தில், உர்வில் படேல் மொத்தமாக 35 பந்துகளில், 12 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக குஜராத் அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம், டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். அதோடு, உலக அளவில் டி20 போட்டிகளில் அதிவேக சதமடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்திருக்கிறார்.
முதலிடத்தில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சைப்ரஸ் நாட்டுக்கெதிரான டி20 போட்டியில் 27 பந்துகளில் சதமடித்த எஸ்டோனியா பேட்ஸ்மேன் சாஹில் சௌஹா இருக்கிறார். இந்திய வீரரைப் பொறுத்தவரையில், 2018-ல் சையது முஷ்டாக் அலி தொடரில் ஹிமாச்சலப்பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 32 பந்துகளில் சதமடித்ததே, டி20 போட்டிகளில் இந்திய வீரரின் அதிவேக சாதமாகப் பதிவாகியிருந்தது. கடந்த ஐ.பி.எல் சீசனில் குஜராத் அணியால் வாங்கப்பட்ட உர்வில் படேல் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...