கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன், உமா தம்பதி ரப்பர் லேபிள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களின் மகன் சரத், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
மகள் ஸ்ருதிக்கு கடந்த 22ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அவர்கள் வீட்டில் சஞ்சு என்ற நாயை கடந்த 11 ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சி காரணமான அந்த நாயை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சஞ்சு விலங்குகள் நல மருத்துவமனையில் விட்டுள்ளனர். இதற்காக ரூ.1,739 கட்டணம் செலுத்தியுள்ளனர். சரத் மற்றும் குடும்பத்தினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
அன்று மாலையே மருத்துவமனையில் இருந்து செல்போனில் அழைத்து, “உங்கள் நாய்க்கு உடல்நலம் சரியில்லை. உடனடியாக வரவும்.” என்று கூறியுள்ளனர். சரத் மற்றும் குடும்பத்தினர் அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்களின் நாய் இறந்து போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். நாயின் உடலை பார்த்து கதறி அழுது, சம்மந்தப்பட்ட மருத்துவமனையில் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு மருத்துவமனை உரிய விளக்கமளிக்கவில்லை. இதுகுறித்து சரத் சாய்பாபா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சரத் குடும்பத்தினர் தங்களின் வளர்ப்பு நாயை பார்த்து கதறி அழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.