இது ஐம்பதாவது எபிசோடு. வாழ்த்துகள் (அதாவது எனக்கு!). கோடு கலைக்கப்பட்ட பிறகு வந்து முதல் நாள் சற்று சுவாரசியமாகவே சென்றது. தீபக்கின் கேப்டன்சியை பிக் பாஸே பாராட்டி விட்டார். விஷால் - தர்ஷிகா ‘லவ் டிராக்’ கிளுகிளுப்பிற்குப் பதிலாக எரிச்சலையூட்டுகிறது. ஷாப்பிங் டாஸ்க்கில் வழக்கம்போல் சண்டை. அருணிற்கும் முத்துவிற்கும் இடையே முதற்கட்ட நேரடி சண்டை ஆரம்பித்திருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் -50
“ஒரு மாதிரி இங்க செட் ஆயிடுச்சு. இனிமே பிக்கப் பண்ணிப்பேன்” என்று தர்ஷிகாவிடம் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் ராணவ். “உன்னை மண்டைல தட்டி முன்னுக்குக்கொண்டு வரப் போறது நான்தான்” என்றார் தர்ஷிகா. ‘காதல் கொண்டேன்’ தனுஷ்- சோனியா அகர்வாலைப் பார்ப்பது போலவே இருக்கிறது. தர்ஷிகாதான் ராணவ்வின் friend, philosopher and guide போல.
“பவித்ராகிட்ட கூட பேசிப் பார்த்தேன். ராணவ் ரொம்ப நல்ல பையன்னு” என்று தர்ஷிகா சொல்ல “ஓ.. கூட ஆள் சேர்த்துக்கறியா. நாளைக்குப் பிரச்னைன்னு வந்தா தனியா மாட்ட வேணாமேன்னு” என்று முத்து கிண்டல் செய்ய “அப்படில்லாம் ஒண்ணுமில்ல” என்று சமாளித்தார் தர்ஷிகா. “எதுவா இருந்தாலும் கேமை பாதிக்காத அளவிற்கு பார்த்துக்க” என்று முத்து அட்வைஸ் செய்ய, ‘அதேதான்’ என்று தர்ஷிகாவும் வழிமொழிந்தார்.
நாள் 50. ‘ கோயில் கொஞ்சம் போரடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு’ என்கிற வரிகளைக் கொண்ட பாடலைப் போட்டார்கள். எது பிக் பாஸ் வீடா? நல்லவேளையாக தெய்வத்தின் காதில் விழாமல் இருக்க வேண்டும்.
சூப்பர் வைசர் சவுந்தர்யா - திருடனின் கையில் சாவி
புதிய கேப்டனாக தீபக் பதவியேற்றார். தன்னம்பிக்கையான குரலில் அவர் அணிகளைப் பிரித்தார். கிச்சன் இன்சார்ஜ் அருண். ஸ்டோர் இன்சார்ஜ் ரஞ்சித். இப்படி பலருக்கும் பொறுப்புகளைப் பிரித்துத் தந்த தீபக், சவுந்தர்யாவிற்கு மிக மிக பொறுப்பான பதவியைத் தந்தார். அது சூப்பர்வைசர் வேலை. எல்லோருடைய பணிகளையும் கண்காணிக்க வேண்டும். இதுவொரு நல்ல ஐடியா. திருடனின் கையிலேயே சாவியைக் கொடுப்பது போன்ற டெக்னிக். வேலையே செய்யாமல் டபாய்க்கும் சவுந்தர்யாவின் கையில் முக்கியமான பொறுப்பைக் கொடுத்து விட்டால் தன்னிச்சையாக சுறுசுறுப்பாகி விடுவார்.
பிறகு அப்படித்தான் நடந்தது. ‘ஒரு பிட் குப்பைகூட இருக்கக் கூடாது’ என்று ரயானிடம் கறாராகச் சொல்லி வேலை வாங்கினார் சவுந்தர்யா. “ச்சே.. மேக்கப் போடக் கூட டைம் கிடைக்கலை’ என்று புலம்பும் அளவிற்கு அம்மணி பிஸி.
தர்ஷிகாவும் விஷாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களின் லவ் டிராக் விசாரணையை நடத்தத் தொடங்கி விடுகிறார்கள். ‘இருக்கு.. ஆனா இல்லை’ என்பது போலவே டெட்டால் போட்ட வார்த்தைகளால் நிகழும் இவர்களின் உரையாடல் சளசளவென்று போகிறது. ஒன்றும் சுவாரசியமாக இல்லை. ‘சுட்டால் தொடும்’ என்பதால் இருவருமே கவனமாக இருக்கிறார்கள். அதே சமயத்தில் தொட்டுத்தான் பார்ப்போமே என்கிற ஆசையும் அலைக்கழிக்கிறது.
மக்களின் கருத்துக் கணிப்பின் படி, ஆண்கள் அனைவரும் பெண்களை ரேங்கிங் வரிசையில் சொல்ல வேண்டும். ‘நம்பிக்கைக்கு உரிய நபர்’ என்னும் நோக்கில் முதல் இடத்தைப் பிடித்தார் அன்ஷிதா. கொஞ்சமாகப் பேசினாலும் மனதில் பட்டதை நேர்மையாகச் சொல்லி விடுவாராம். பவித்ரா 2வது இடம். தர்ஷிகா 3-வது இடம் என்று போன இந்தப் பட்டியலின் கடைசி இடத்திற்கு வந்தவர் மஞ்சரி. இந்த விஷயம் நாமினேஷனிலும் பிறகு எதிரொலித்தது. டாமினேட்டிங்காக இருக்கும் பெண்களை ஹவுஸ்மேட் ஆண்கள் உள்ளூற ரசிக்கவில்லை என்பதுதான் இதன் காரணம்.
தீபக்கின் திறமையான கேப்டன்சி
பிக் பாஸாக வந்து டாஸ்க் தரும் வரை காத்திருக்காமல் கேப்டனே அந்தப் பொறுப்பை சமயங்களில் எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை சுவாரசியமாக்கினால், சம்பந்தப்பட்ட கேப்டனை பிக் பாஸிற்கு பிடித்து விடும். (என் இனமடா நீ) தீபக் விஷயத்தில் அப்படித்தான் ஆயிற்று. “வந்து இத்தனை நாள் ஆகியும் இவங்க கூட என்னால கனெக்ட் ஆக முடியலைன்னு நெனச்சா.. அவங்க கூட அவ்வப்போது பேசுங்க.. வாரக் கடைசியில அது பத்தி எனக்கு ரிப்போர்ட் கொடுங்க” என்று புதிய டாஸ்க்கை கேப்டன் தீபக் அறிவித்தார்.
தீபக் சொன்ன இந்த டாஸ்க், சாச்சனா சொன்ன கமெண்ட்டின் எதிரொலியாக இருக்கலாம். Truth or dare டாஸ்க்கில் ‘எனக்கு தீபக் அண்ணாவைப் பிடிக்காது’ என்று சாச்சனா சட்டென்று சொல்லி விட்டார். போலவே சிவக்குமாரும் தீபக் குறித்த மனஉளைச்சலில் இருக்கிறார். தன்னுடைய ஆதிக்க மனப்பான்மை குறித்து பலரும் உள்ளூற எரிச்சலில் இருக்கிறார்கள் என்பதை தீபக் அறிந்திருக்கிறார். எனவே அவர் மனதிலிருந்து இந்த டாஸ்க் வந்திருக்கும்.
‘சக ஹவுஸ்மேட்ஸ்களைப் பத்தி கருத்து சொல்லுங்க’ என்று தீபக் இன்னொரு புதிய டாஸ்க்கை தந்திருப்பார் போல. இனிமேலாவது தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆவேசத்தில் இருக்கிற ராணவ், ஒவ்வொருவருக்கும் அடைமொழி தந்து அசத்தினார். அன்பான அன்ஷிதா, சங்கு சக்கரம் சாச்சனா என்று ரைமிங்கில் டைமிங்காக அவர் சொன்னதைப் பார்த்து ‘ஹே.. சூப்பர்பா.. இப்படில்லாம் நீ பேசி நாங்க பார்த்ததேயில்ல” என்று மக்கள் மகிழ்ந்து போனார்கள். இறுதியில் ‘ராக்கிங் ராணவ்’ என்று பவித்ராவும் பதிலுக்கு ஒரு அடைமொழி தர “ஓஹோ.. அப்படியா.. ரைட்டு.. நடக்கட்டும்.. நடக்கட்டும்’ என்கிற மாதிரி மக்கள் கிண்டலடித்தார்கள்.
அடுத்ததாக நாமினேஷன் பிராசஸஸை ஆரம்பித்தார் பிக் பாஸ். நாமினேட் செய்யப்படவிருக்கிறவரின் புகைப்படத்தின் மீது சிவப்பு நிறத்தால் பெயிண்ட் அடித்து பிறகு அதை கசக்கிப் போட்டு மெயின் டோரின் வாசலுக்கு வெளியே தூக்கிப் போட வேண்டும். இப்படி போட்டியாளர்களை அவமானப்படுத்தும் டாஸ்க் ஒவ்வொரு சீசனிலும் நடக்கும். இந்தப் பாணி இப்படியே வளர்ந்தால் அடுத்தடுத்த சீசன்களில் என்ன நடக்கும்? நாமினேட் செய்ய விரும்பும் நபரை தலையில் ஓங்கி தட்டி, உதைத்து வெளியே தள்ளி விடும் கோக்குமாக்கான வேலையை பிக் பாஸ் தருவாரோ, என்னமோ?!
சவுந்தர்யாவைப் போட்டுக் கொடுத்த பிக் பாஸ்
நாமினேஷன் பிராசஸ் துவங்கப்படாமல் தாமதம் ஆகியது. காரணம், ‘பாத்ரூம் போயிட்டு வரேன்’ என்று சொல்லி புறப்பட்ட சவுந்தர்யா, நாமினேஷனின் போது ‘அழகாகத் தோன்ற வேண்டும்’ என்பதால் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். இதை பிக் பாஸ் போட்டுக் கொடுத்த விதம் சுவாரசியமானது. ‘தீபக்.. உங்க சார்ஜெண்ட் மேக்கப் போட்டுக்கிட்டிருக்காங்க.. அவங்க வந்ததும் ஆரம்பிக்கலாம். அதுவரைக்கும் வெயிட் பண்றேன்” என்று பிக் பாஸ் சர்காஸம் செய்ய “அடிப்பாவி.. பாத்ரூம்தானே காரணமா சொன்னா?” என்று தலையில் அடித்துக் கொண்டார் தீபக். சவுண்டின் ஸ்கூல் பழக்கம் இன்னமும் தொடர்கிறது போல.
அணி மாறிச் சென்ற சத்யாவிற்கும் ஆனந்திக்கும் நேரடி நாமினேஷன் பவர் இருந்தது. அதை வைத்துக் கொண்டு சத்யா ஜாக்குலினை நாமினேட் செய்தார். ‘ரொம்ப ஜட்ஜ்மென்ட்டலா இருக்காங்க.. அதனால நான் பர்சனலா பாதிக்கப்பட்டேன்’ என்பது சத்யா சொன்ன காரணம். இதைக் கேட்டு ஜாக்குலின் தலையாட்டினாலும் பிறகு கண் கலங்கினார். ‘நான் ஸாரி சொன்னப்பறமும் இப்படி பண்ணா என்ன அர்த்தம்?’ என்பது அவரது வருத்தம்.
மாரல் கிளாஸ் டீச்சராக சத்யாவின் செயலின்மையை கிண்டல் செய்தது, விசாரணை நாட்களில் சத்யாவின் பெயரை அநாவசியமாக இழுப்பது போன்ற காரணங்களால் சத்யா எரிச்சல் அடைந்திருக்கலாம். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் வருவதற்காகவும் ஜாக்குலின் அழுதிருக்கலாம்.
ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் நாமினேட் செய்ய வேண்டும் என்பது போன்ற எந்தவிதக் கட்டுப்பாடும் அற்ற நாமினேஷன் இது. யார் யாரை வேண்டுமானாலும் குத்தலாம். மற்றவர்களின் பெயர்கள் எதிர்பார்த்ததுதான். ஆனால் மஞ்சரிக்கு வந்த எட்டு குத்துக்கள் ஓவர்தான்.
ரஞ்சித்தும் ஜாக்குலினும் டைரக்ட் நாமினேஷன் ஆகியிருக்கும் சூழலில் மற்றவர்களின் பட்டியல் இது. சாச்சனா, சிவா, சத்யா, ஆனந்தி, விஷால், அன்ஷிதா, ரயான் மற்றும் மஞ்சரி.
ஹாஃப் பாயிலில் துவங்கிய ஷாப்பிங்
தர்ஷிகாவுடனான உரையாடல் பற்றி அன்ஷிதாவிடம் பேசிக் கொண்டிருந்தார் விஷால். “யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லைன்னா நல்லதுதான்’ என்பது அன்ஷிதாவின் கருத்து. ஷாப்பிங் டாஸ்க் துவங்கியது. பொருட்களை வாங்குவதற்கான மதிப்புகளை எப்படிப் பெறுவது? யார் முட்டையின் கரு உடையாமல் ஹாஃப் பாயில் போடுகிறார்களோ அவர்களுக்கு 500 மதிப்பு தரப்படும்.
அணியாக அல்லாமல் ஒட்டுமொத்த வீட்டின் சாப்பாட்டுப் பிரச்னை என்பதால் அனைவருமே மதிப்பெண் எடுத்தாக வேண்டும். முதலில் வந்த அன்ஷிதா சமையல் அனுபவம் உள்ளவர் என்பதால் எளிதாக போட்டு விட்டார். ஒவ்வொருவரும் போடும் போது பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தீபக்கிடம் “எமோஷனைக் குறைங்க” என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். விஷால் வரும் போது ஸ்டைலாக பெப்பர் பொடியைத் தூவ, அதைப் பார்த்து ஜெப்ரியும் ஓவர் அலப்பறை செய்ய “டேய்.. பார்த்துடா. விளையாடாத. ஒவ்வொரு பாயிண்டும் முக்கியம்” என்று எச்சரித்தார் தீபக். என்றாலும் ஜெப்ரியின் அலப்பறை அடங்கவில்லை.
இப்படியாக ஒவ்வொருவரும் தங்களின் ஹாஃப் பாயில் மிஷனை வெற்றிகரமாக முடித்து விட ஒரேயொருவர் மட்டும் சொதப்பினார். யெஸ். அது நம்ம ‘புல்சே’ சவுந்தர்யாதான்.
இந்த டாஸ்க் முடிந்ததும் தீபக்கிற்கு பிரத்யேகமான பாராட்டு பிக் பாஸிடமிருந்து கிடைத்தது. “எந்த சீசன்லயும் நான் இதைச் சாென்னதில்லை. குட் கேப்டன்ஸி.. மைக் அனவுன்ஸ்மெண்ட் இல்ல. நாய் குரைக்கலை.. வீடு வைப்பா இருந்தது.. குட்” என்று பிக் பாஸ் பாராட்ட அகம் மகிழ்ந்து நன்றி சொன்னார் தீபக். “ஆனா.. இது முதல் நாள்தான். ஏழு நாளையும் இப்படியே கொண்டு போனா மக்கள் சந்தோஷப்படுவாங்க” என்று இக்கு வைத்து பாராட்டினார் பிக் பாஸ்.
ஷாப்பிங் டாஸ்க் - வழக்கம் போல் சர்ச்சை
8500 புள்ளிகள் பெற்ற நிலையில் ஷாப்பிங் துவங்கியது. பழைய சீசன்களில் காட்டப்பட்ட அதே ஃபார்மட். லிவ்விங் ஏரியாவில் ஷாப்பிங் போர்டு இருக்க, பொருட்களின் மதிப்புகள் பிளாஸ்மா டிவியில் காட்டப்படும். முத்து கணக்குப் போடும் வேலையை எடுத்துக் கொள்ள பொருட்களை தேர்ந்தெடுக்கும் பணியை ஜாக்குலினும் விஷாலும் மேற்கொண்டார்கள்.
ஷாப்பிங் முடிந்ததும் வழக்கம் போல் சர்ச்சைகள் ஆரம்பமாகின. அடிப்படையான பொருட்கள் முடிந்த பிறகு காஃபி பவுடரை தேர்வு செய்தார் ஜாக்குலின். “அதான் டீ இருக்கே.. அதுக்குப் பதிலா தோசை மாவு எடுத்திருக்கலாம்.
சில வேளைகளுக்கான உணவா இருந்திருக்கும்” என்று சாச்சனா அதை ஆட்சேபிக்க, விஷாலும் அதை வழிமொழிந்தார். “இப்ப இப்படிச் சொல்லுவாங்க. அப்புறம் காஃபி கேட்பாங்க.. டிபன் இல்லைன்னா கூட காஃபி சாப்பிட்டு சமாளிக்கலாம்’ என்பது ஜாக்குலின் கருத்து.
“எல்லாத்துலயும் நொய்நொய்ன்னு வரா” என்று சாச்சனா குறித்து மஞ்சரியிடம் அனத்திக் கொண்டிருந்தார் ஜாக். “தோசை மாவு லக்ஸரி அயிட்டமாம். ஜாக்குலின் சொல்றாங்க.. “ என்று முத்துவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் சாச்சனா. தேர்வு செய்யும் பொறுப்பில் இருப்பவர்களின் தனிப்பட்ட ரசனை மற்றும் தேவை ஆகிய விஷயங்கள் தன்னாலேயே உள்ளே வந்து விடும் என்பது உலகநடைமுறை. ஜாக்குலின் ஒருவேளை காஃபி பிரியராக இருக்கலாம்.
குழம்பு பிரச்னையில் ஒரு ஈகோ சண்டை
கிச்சன் ஏரியாதான் எப்போதுமே பிக் பாஸில் சண்டைகள் நிகழும் ஹாட் ஸ்பாட். இந்த சீசனில் அது குறைவு. வீடு ஒன்றிணைந்திருக்கும் நிலையில் ஒரு கிச்சன் சண்டை மங்கலகரமாக ஆரம்பித்தது. மஞ்சரிக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த குழம்பை அவருடைய தட்டில் ஊற்றினார் அருண். “நான் கொஞ்சம்தான் எடுத்துப்பேன். கேட்டு ஊத்தியிருக்கலாம். இப்ப வீணாப் போச்சு” என்பது மஞ்சரியின் தரப்பு. “ஏன் இப்படி வேஸ்ட் பண்றே?” என்பது போல் முத்து இதில் உள்ளே வர “இது எனக்கும் மஞ்சரிக்கும் இடையில் நடக்கிற கான்வர்சேஷன். நீ ஏன் எப்பப்பாரு மூக்கை நுழைக்கறே?” என்று அருண் கோபப்பட பகைமையின் புகை கிளம்பியது.
“ஒருத்தர் வேலை செய்யும் போது பஞ்சாயத்து வேணாம். அப்புறமா பேசிப்போம்” என்று தற்காலிக சமாதானம் செய்தார் தீபக். இது பொருள் வீணாவது பற்றிய பிரச்சினையில்லை. முத்துவின் டாமினேஷன் அருணிற்குள் எப்போதோ எரிச்சலை ஏற்படுத்தி விட்டது. அவ்வப்போது அதைப் பற்றி புகைந்து கொண்டே இருக்கிறார். முத்துவிற்கும் இது புரிந்திருக்கிறது. எனவே மஞ்சரி பிரச்சினையை வைத்துக் கொண்டு உள்ளே வந்து விட்டார். ஆக இது ஈகோ பிரச்சினை. குழம்பின் வடிவில் வந்து விட்டது. இனி மேலும் குழம்புகள் அதிகமாகும்.
ஆக.. கோடு கலைக்கப்பட்ட முதல் நாளின் ‘ஓகே’ என்கிற அளவில் ஆரம்பித்திருக்கிறது. ‘சூப்பர்’ என்று சொல்லுமளவிற்கு இது மாறுமா?