திருமலை, திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலில், கடந்த 4-ம் தேதி தொடங்கிய வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வரும் 12-ம் தேதி வரை 9 நாள்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளின்போது, ஆந்திர மாநில அரசு சார்பில் எம்பெருமான் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கினார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
முதல் நாள் இரவு ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீமலையப்ப சுவாமி பெரிய சேஷ வாகனத்தில் திருமாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் காலை, சிறிய சேஷ வாகனத்தில் முரளி கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி தரிசனம் தந்தார். இரண்டாம் நாள் இரவின்போது, அன்ன வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, கையில் வீணையுடன் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் காட்சியளித்தார். பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை, சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, யோக நரசிம்மர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மூன்றாம் நாள் இரவு, முத்து பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, பகாசுர வதம் அலங்காரத்தில் காட்சி தந்தார்.
பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் காலை, கற்பக விருட்ச வாகனத்தில் வேணுகோபால் சுவாமி அலங்காரத்தில் எழுந்தருளினார். நான்காம் நாள் இரவின்போது, சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஐந்தாம் நாளான நேற்று (அக்டோபர் 8-ம் தேதி) காலை, மோகினி அவதாரத்தில் மாட வீதிகளில் உலா வந்தார் மலையப்ப சுவாமி. 14 மாநிலங்களைச் சேர்ந்த 490 கலைஞர்கள் மோகினி அவதாரம் முன்பு நடனமாடினார்கள். இதில் இடம்பெற்றிருந்த பஞ்சாப்பின் கிக்லி, திரிபுராவின் ஹோஜாகிரி மற்றும் குஜராத்தின் கர்பா உள்ளிட்ட வடக்குப் பகுதியின் அற்புதமான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன.
இதையடுத்து, பிரம்மோற்சவ விழாவின் மிக முக்கிய நிகழ்வான கருட உற்சவ சேவை நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. கருட வாகனத்தில் எழுந்தருளி வலம்வந்த ராஜாதி ராஜ ஸ்ரீமகா விஷ்ணுவைக் காண மாட வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தார்கள். பக்தர்களின் சிரமத்தைப் போக்குவதற்காக தேவஸ்தானம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. உடனுக்குடன் உணவு, காஃபி வழங்கப்பட்டன. நடைப்பாதையும் 24 மணிநேரமும் திறந்துவைக்கப்பட்டிருந்தது. மருத்துவ முகாம், மொபைல் க்ளினிக், ஆம்புலன்ஸ் வசதிகள் என தேவையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. திருமலையில் ஆங்காங்கே 32 இடங்களில் டிஜிட்டல் திரைகள் மூலமாகவும் கருட சேவை நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டன.
மாலை 6 மணிக்குத் தொடங்கிய கருட சேவை இரவு 11 மணி வரை நடைபெற்றது. பக்தர்கள் எந்தவொரு இன்னல்களும் இல்லாமல் `கோவிந்தா...’ கோஷத்துடன் கண்ணாரக் கண்டு தரிசனம் செய்தார்கள். கருட சேவையின்போது, ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், மணிப்பூர், திரிபுரா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட 15 மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் தனித்துவமான நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள். மொத்தமாக 28 அணிகளைச் சேர்ந்த 718 கலைஞர்கள் கலந்துகொண்டு கண்கவர் ஊர்வலத்தின் பிரமாண்டத்தை மேம்படுத்தினார்கள். பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் விழாவான இன்று காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்திலும், இன்று இரவு தங்கத் தேரிலும் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்கிறார் எம்பெருமான் ஏழுமலையான்.
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41