மனிதச்சங்கிலி போராட்டம்
திமுக அரசை எதிர்த்து மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் தலைமை வகித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, " திமுக அரசை எதிர்த்து நடத்தப்படும் இந்த மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு வந்திருக்கும் மக்களை பார்த்து மகிழ்ச்சி எற்படுகிறது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியை மக்கள் மீண்டும் முதல்வராக்க போகிறார்கள் என்பது தெரிகிறது. உங்கள் மூலம் இந்த தகவல் எடப்பாடியாருக்கு சென்றடையும்.
வரிச்சுமை
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் மீது வரிச்சுமையை தொடர்ந்து ஏற்றிக்கொண்டே வருகிறது. இப்போது சொத்துவரியை 6 சதவிகிதம் ஏற்றியுள்ளது. இதுமட்டுமல்ல, மின்கட்டணம் உள்பட அனைத்து விலைவாசியும் உயர்ந்துவிட்டது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் இதைப்பற்றி கவலைப்படாமல் தன் தந்தை பெயரில் பூங்கா திறப்பதை சாதனையாக கூறிக் கொண்டிருக்கிறார். மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக்கி அழகு பார்க்கிறார். ஆனால், திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு வரிக்குமேல் வரியை போட்டு வருகிறார். வரிக்குதிரை உடம்பு மீதுள்ள வரியைவிட தமிழக மக்கள் மீது சுமத்தப்பட்ட வரிகள் அதிகம்.
போதைப்பொருள்
திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. அதைத்தான் ஆளுநர் ரவியும் தெளிவாக கூறியிருக்கிறார். முன்பெல்லாம் பள்ளி கல்லூரிகள் முன்பு இனிப்பு மிட்டாய் விற்பார்கள். இப்போது போதை மாத்திரைகள் விற்கிறது. இதனால் பிள்ளைகளை விடுதியில் சேர்த்து படிக்க வைக்கவே பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள்.
விஜய் கட்சி
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மக்களால் மறக்கப்பட்டவர். இவரைப்பற்றி இப்போது பேசுவது பொருத்தம் அல்ல. நடிகர் விஜய் இப்போதுதான் கட்சியை தொடங்கியுள்ளார். மாநாட்டின் போதுதான் அவர் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் தெரியும். அப்போது அவரது கட்சியை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று மக்கள் முடிவெடுப்பார்கள். விஜய்யின் கட்சியால் அதிமுகவுக்கு எந்த பாதிப்புமில்லை.
சென்னை விமான சாகச நிகழ்ச்சி
சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் 5 பேர் உயிர் பறிபோகாமல் தடுத்திருக்க முடியும். ஆங்காங்கு பாதுகாப்பு வேலிகள் அமைத்து அளவோடு மக்களை அனுமதித்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. கூட்டத்தை கட்டுபடுத்த எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை." என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...