ஜம்மு - கஷ்மீரின் சிறப்பு சட்டம் 370 நீக்கப்பட்டதற்குப் பிறகு முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதற்கிடையில், ஜம்மு - காஷ்மீர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவில், ஜம்மு - காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமையும் எனக் கூறப்பட்டது. அதில், காங்கிரஸ் - என்சிபி கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்ற முடிவுகளும் வெளியானது. பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுயேட்ச்சைகள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதால், காங்கிரஸ் அவர்களை தங்கள் பக்கம் இழுத்து மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 46 தொகுதிகளைப் பிடித்துவிடக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநருக்கு, சமீபத்தில் மத்திய அமைச்சகத்தால் வழங்கப்பட்ட, கூடுதல் அதிகாரங்கள் தொடர்பான விமர்சனங்கள் கவனத்துக்குள்ளாகியிருக்கிறது. காஷ்மீரில் துணை நிலை ஆளுநருக்கு, மத்திய அமைச்சகத்தால் வழங்கப்பட்ட, கூடுதல் அதிகாரங்களின்படி, இரண்டு பெண்கள், இரண்டு காஷ்மீரி பண்டிட்டுகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து (POK) இடம்பெயர்ந்த ஒருவர் என 5 எம்.எல்.ஏ.க்களை நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்க முடியும். அதாவது மக்கள் பிரதிநிதிகளாக இந்த மேற்சொன்ன பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என ஆளுநர் நினைக்கும் பட்சத்தில், இந்த நியமன எம்.எல்.ஏக்கள் எனும் விஷயத்தை செயல்படுத்த முடியும்.
இந்த 5 எம்.எல்.ஏ-களுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நிகரான அதிகாரம், அதாவது, சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களிக்கும் உரிமை, புதிதாக இயற்றப்படும் மசோதாக்களுக்கு வாக்களிக்கும் உரிமை போன்றவை வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அந்த சூழலை பயன்படுத்தி துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நியமிக்கும் இந்த 5 எம்.எல் -க்களை கைவசம் வைத்துக்கொண்டு, ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என பா.ஜ.க நம்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த ஆளுநரின் அதிகாரம் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் மீதான தாக்குதல் என அப்போதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரித்தது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY