Doctor Vikatan: சமீபகாலமாக டீடாக்ஸ் ஜூஸ் என்ற பெயரில் எலுமிச்சை, புதினா, மூலிகைகள் சேர்த்த குடிநீர் டிரெண்டாகி வருகிறது. இதைக் குடித்தாலே போதும், உடல் எடை வேகமாகக் குறையும் என்று சொல்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
டீடாக்ஸ் என்ற விஷயத்தை முதலில் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். உடலிலுள்ள கழிவுகளை நீக்க அவ்வப்போது டீடாக்ஸ் செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில் விரதமிருப்பதும் ஒருவகையில் டீடாக்ஸ் போன்றதுதான்.
அதே சமயம், டீடாக்ஸ் மட்டுமே செய்துகொண்டிருந்தால் உடல் எடை குறைந்துவிடும் என்பது தவறான நம்பிக்கை. நிறைய பேர் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங் செய்தால் உடல் எடை குறையும் என நினைத்து, அதைத் தொடர்ந்து பின்பற்றுவார்கள். உடல் பருமனைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு, ஒரு கட்டத்தில் எடை குறைவது நின்றுவிடும். அதைத் தகர்ப்பதற்காக இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங் இருக்கச் சொல்லி என் கிளையன்ட்டுகளுக்கு அட்வைஸ் செய்வேன். அதையும் குறுகிய காலத்துக்குத்தான் அறிவுறுத்துவேன்.
இப்படி சில நாள்களுக்கு இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங் இருந்துவிட்டு மீண்டும் பழைய லைஃப்ஸ்டைலுக்கு திரும்பச் சொல்வேன். இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங் இருக்கும்போது எடை குறையும். அதை நிறுத்தியதும் 500 முதல் 700 கிராம் அல்லது 1 கிலோ வரை எடை கூடும். அந்த வகையில் எந்த டீடாக்ஸ் முறையையும் நீண்டகாலத்துக்குப் பின்பற்றக்கூடாது. விரதமிருப்பது என்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். அதற்கு ஒரு பிரேக் கொடுப்பது உடலுக்கு நல்லதுதான். அதே சமயம், நீங்கள் கேட்டுள்ளபடி, எலுமிச்சை, புதினா, மூலிகைகள் சேர்த்த டீடாக்ஸ் பானங்களைக் குடிப்பதால் வெயிட்லாஸ் ஆகும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கை.
எடைக்குறைப்பை பொறுத்தவரை அதற்கு குறுக்குவழி என எதுவுமே கிடையாது. சரியான உணவுப் பழக்கம் இருக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலுக்குப் போதுமான அளவு ஓய்வு கொடுக்க வேண்டும். இந்த மூன்றும்தான் எடைக்குறைப்புக்கு உதவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.