பிக்பாஸ் சீசன் 8 தொடங்கிய முதல் நாளே சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார் சச்சனா.
சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்ற 'மகாராஜா' படத்தில் விஜய்சேதுபதிக்கு மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் 'சச்சனா'. இதையடுத்து பிக்பாஸில் அடியெடுத்து வைத்தார். இந்த பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்களில் இளம் போட்டியாளர் இவர்தான். பிக்பாஸில் வீட்டில் முதல் நாளே துறுதுறுவென எல்லா போட்டியாளர்களிடமும் பேசி, ஆர்வத்துடன் எல்லா கலந்துரையாடல்களிலும் பங்கேற்றார். குழுவாக செயல்பட்டு எல்லோரையும் கேட்டு, இணைந்து முடிவுகள் எடுப்பது, கன்ஃபெஷன் ரூமில் அணிக்காகப் பேசியது என தைரியத்தையும், கள்ளம் கபடமில்லா மனதையும் முதல் நாளே வெளிப்படுத்தி தன் பெயரை பிக்பாஸ் வீட்டில் அதிகமாக எதிரொலிக்கச் செய்தார். ஆனால், ரவீந்தர் விரித்த வலையில் மாட்டிக் கொண்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
ரவீந்தர், "24 மணிநேர்த்தில் நீங்கள் ஏன் வெளியே போகக் கூடாது, ஏன் நீங்கள் பிக்பாஸில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதற்கானக் காரணத்தை ஒவ்வொருத்தரும் சொல்லுங்கள்" என தனது முதல் வியூகத்தை வகுத்தார். அதில் பலரும் பல்வேறு காரணங்கள் கூற, சச்சனா வெள்ளந்தியாக, "ஒருவேளை யாராவது வெளியேறியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டால், நானே வெளியேறிக் கொள்கிறேன். யாரையும் வெளியேற்ற எனக்கு மனதில்லை" என்று பேசியிருந்தார்.
சச்சனாவின் விளையாட்டுத்தனமான இந்தப் பேச்சை, சீரியஸாக எடுத்துக் கொண்ட போட்டியாளர்கள், 'கிடைத்த வாய்ப்பை சச்சனா அலட்சியப்படுத்துகிறார், அதன் மதிப்புத் தெரியவில்லை' என்று பேசத்தொடங்கினர்.
இதையடுத்து பிக்பாஸ், 'நீங்கள் வெளியேற்ற விரும்பும் போட்டியாளர்களை நாமினேட் செய்து, அதற்கானக் காரணத்தையும் கூறுங்கள்' என போட்டியாளர்களிடம் சொல்ல, எல்லோரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, பலரையும் நாமினேட் செய்தனர். தொடக்கத்தில் அதில் அதிகமாக ரவீந்தரின் பெயர்தான் அடிபட்டது.
இதை மடைமாற்ற, 'கிடைத்த வாய்ப்பை சச்சனா அலட்சியப்படுத்துகிறார். அதனால் நான் அவரை நாமினேட் செய்கிறேன்" என அழுத்தமாகச் சொல்லிவிட்டு, சச்சனாவை நாமினேட் செய்தார் ரவீந்தர். இதையடுத்து வந்தவர்கள், அதே காரணத்தைக் கூறி சச்சனாவை நாமினேட் செய்தனர். அதிகமாக நாமினேட் செய்யப்பட்ட சச்சனா பிக்பாஸ் ட்ராஃபியை உடைத்துவிட்டு வெளியேறியிருக்கிறார். மறுபுறம் அவர் சீக்ரெட் ரூமில் வைக்கப்படலாம் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. எனினும் ட்ராஃபியை உடைக்க சொல்லிவிட்டதால் அவர் ஆட்டத்தில் நீடிக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX