தொழிற்சங்கம் அமைக்கும் கோரிக்கைக்கு உடன்படவில்லை
‘தொழிற்சங்கம் அமைக்க சட்டப்பூர்வ அங்கீகாரம், 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 30 நாள்களுக்கு மேலாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை, ஶ்ரீபெரும்புதூர் ‘சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தொழிலாளர்கள்.
16 ஆண்டுகளாகத் தொழிற்சங்கம் அமைக்காமல், நிறுவனத்திற்குக் கட்டுப்பட்டு வேலை செய்து வந்த சாம்சங் தொழிலாளர்கள், "சாம்சங் நிறுவனத்தின் உழைப்புச் சுரண்டலையும், அடக்குமுறைகளையும் இனியும் தாங்கிக் கொள்ள முடியாது" என்று கூறி, தொழிற்சங்கம் அமைத்து உரிமைகளைப் பெற காலவரையற்றப் போராட்டத்தை உறுதியுடன் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு தலையிட்டு இதுவரை ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரில் தொழிற்சங்கம் அமைக்கும் கோரிக்கைக்கு உடன்படவில்லை சாம்சங் நிறுவனம். தொழிற்சங்கம் இல்லை என்றால் தங்களுக்கான உரிமைகளைப் பெற முடியாது என்ற நிலைப்பாட்டில் தொழிற்சங்கத்தை அமைப்பதையே ஒரே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர் சாம்சங் தொழிலாளர்கள்.
போராடும் தொழிலாளர்கள் வேதனை..
"போராடும் சாம்சங் தொழிலார்களுக்கு ஆதரவாக ‘சிஐடியு’ அமைப்பு களத்தில் நிற்கிறது. ‘சிஐடியு’ அமைப்பு சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதவராக நிற்பதால் ‘சிஐடியு’ அமைப்பைத் திட்டமிட்டு இதிலிருந்து விலகச் செய்துவிட்டு, சாம்சங் தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தி மிரட்டிவிடலாம் என்று பல சதிச் செயல்களைச் செய்துவருகிறது சாம்சங் நிறுவனம்.
தொழிலாளர்களின் நியாயமானக் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அமைதியாக சட்டப்படி நடந்துவரும் போராட்டத்தில், ‘தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்டுகள் நுழைந்துவிட்டார்கள்’ என்ற வதந்தியைக் கிளப்பிவிட்டுப் போராட்டத்தைக் கலைக்கத் திட்டமிட்டு வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் சதிச் செயல்களுக்கு தமிழ்நாடு அரசும் துணை போகிறது." என்று போராடும் தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
முக்கிய நிர்வாகிகள் இரவோடு இரவாக, கைது
மேலும், "ஒருமாதமாகப் போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சிபிஐ (எம்), சிபிஐ (எம். எல்), விசிக, தமுமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இந்த வாரம் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தன. இப்போராட்டம் மாநிலம் முழுவதும் பரவி தீவிரமடைந்துவிடும் என்ற அச்சத்தில் இப்போராட்டத்தைக் கலைக்க சாம்சங் நிறுவனம் பல சதித்திட்டங்கள் செய்து, இடையூறு கொடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசின் காவல்துறையும் எங்களுக்கு பல்வேறு இடையூறுகளைக் கொடுத்து வந்திருக்கிறது." என்று சாம்சங் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இந்தப் போராட்டச் சூழலில் நேற்று இரவு, 20 க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து, அதில் பாதிக்கப்பட்டவர்கள் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் அவர்களையும் கைது செய்திருக்கின்றனர்.
இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறுகையில், "இந்த விபத்து சாம்சங் நிறுவனத்தின் சதி. போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் 10 பேரை இரவோடு இரவாக, அவர்கள் வீட்டிற்குச் சென்று கைது செய்துள்ளது காஞ்சிபுரம் காவல்துறை. சாம்சங் இந்தியா சங்கத்தின் பொதுச்செயலாளர் எல்லன், துணைப்பொதுச் செயலாளர் பாலாஜி, சிவகனேசன் மற்றும் துணைத் தலைவர்கள் ஆசிக், மோகன்ராஜ், பொருளாளர் மாதேசு உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலை வரை கைது செய்தவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்றுகூட சொல்லாமல் அவர்கள் குடும்பத்திற்குப் பதற்றத்தை ஏற்படுத்தி அச்சுறுத்தியிருக்கிறது காவல்துறை. பிறகு, சிஐடியு அமைப்பின் வழக்கறிஞர் குழு அவர்களைக் கண்டுப்பிடித்து ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வாதடியிருக்கிறார்கள்." என்று தெரிவித்தனர்.
500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது
இதற்கிடையில் 31வது நாளாக (அக்டோபர் 9) எப்போதும் போல போராட்டக் களத்திற்குத் (எச்சூர்) திரும்பியுள்ளனர் 500க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள். ஆனால், காவல்துறை இரவே போராடும் இடத்தில் இருக்கும் பந்தல்களை அகற்றி, அங்கிருப்பவர்களை மிரட்டியிருக்கிறது. நேற்று காலை ஒன்றுகூடி கொட்டும் மழையில் போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கைது செய்து, அருகே இருக்கும் தனியார் மண்டபத்தில் சிறை வைத்தது. 'போராடுவது ஜனநாயக உரிமைதானே' என்று சாம்சங் தொழிலாளர்கள் காவல்துறையிடம் கேள்வி எழுப்ப, “இது வேறொருவர் இடம், இங்குப் போராட அனுமதியில்லை” என்று அடாவடித்தனமாகப் காவல்துறை பேசியதாக வேதனையுடன் கூறினார்கள் கைதான சாம்சங் தொழிலாளர்கள்
தனியார் மண்டபத்தில் சிறை
‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க’ தலைவர் முத்துக்குமாரை கைது செய்து மிரட்டிவிட்டால் இப்போராட்டத்தை நிறுத்திவிடலாம் என்று கடந்த ஒருமாத காலமாக காவல்துறை திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அவர் காவல்துறைக்குப் போக்குக் காட்டிப் போராட்டக் களத்திற்கு தினமும் வந்திருக்கிறார். சாம்சங் தொழிலாளர்கள் அனைவரும் கைது என்பதால், அவர்களுக்குப் பாதுகாப்பாக முத்துக்குமார் காவல்துறையிடம் தற்போது கைதாக, முத்துக்குமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் ஶ்ரீபெரும்புதூர் சுங்குவார் சாவடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த மண்டபத்தில் இருக்கும் அனைத்து மின்விசிறிகளின் இறக்கைகள்கூட கழற்றப்பட்டிருக்கிறது. போராடும் தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் உளவியல் ரீதியாக தாக்குவதற்கான முயற்சிகளை காவல்துறை செய்து வருவதாகக் கூறுகின்றனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திப்பு
“காஞ்சிபுரம் காவல்துறையின் இந்த அராஜகமான செயல் சாம்சங் நிறுவனத்தின் கட்டளையா? தமிழ்நாடு அரசின் கட்டளையா? என்று தெரியவில்லை. இரண்டுபேரும் சேர்ந்து எங்களுக்கு அநீதி இழைக்கிறார்கள்” என்று வேதனையுடன் நம்மிடம் பேசினார்கள் சிறை வைக்கப்பட்டிருந்த சாம்சங் தொழிலாளர்கள்.
மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சாம்சங் தொழிலாளர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ (எம்) கே.பாலகிருஷ்ணன், சிபிஐ முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, தமிழ்நாடு மனதநேயக் கட்சினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நேரில் வந்து ஆதரவுத் தெரிவித்தனர்.
அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ‘சாம்சங் தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப்பெற வேண்டும். சாம்சங் நிறுவனம் தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்காதது அடக்குமுறையே. நாங்கள் திமுக கூட்டணியுடன் தேர்தல் அரசியலில் நின்றாலும், மக்கள் பக்கமே என்றும் நிற்போம். நாங்கள் நாளை தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்து இதுகுறித்துப் பேசுகிறோம். எங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்கிறோம்” என்றார்.
சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “நியமாக, சட்டப்படி, அமைதியாகப் போராடும் தொழிலாளர்கள் மீது காவல்துறை நடத்தும் இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகப்பூர்வமானதல்ல. தமிழ்நாடு அரசுக்கு இது நல்லதல்ல. நாளை முதல்வரைச் சந்தித்துப் பேசவுள்ளோம்” என்றார். இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதவராகக் குரல் கொடுத்து வருகின்றன.
"சாம்சங் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் அமைக்கும் கோரிக்கை சட்டப்பூர்வமானது. அது இந்திய அரசியல் சட்டம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. ஆனால், இந்தியச் சட்டத்தை மதிக்காமல் தொழிற்சங்கம் அமைக்க மறுப்புத் தெரிவித்து வருகிறது ஶ்ரீபெரும்புதூர் சாம்சங் நிறுவனம். இந்தியச் சட்டத்தை ஏற்க மறுத்து, தொழிலாளர்களுக்கு அநீதி இழைத்துவரும் சாம்சங் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல், சட்டத்தின் பக்கம் நிற்கும் சாம்சங் தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் போக்குக் கண்டிக்கத்தக்கது" என்பதே பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களின் கருத்தாகவும் இருக்கிறது.
என்ன நடந்தாலும் `சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தை' அமைப்பது ஒன்றே போராடும் சாம்சங் தொழிலாளர்களின் உறுதியானக் கோரிக்கையாக இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...