தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததற்கும் மின்கட்டணம், சொத்து வரியை உயர்த்தியதற்கும் திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் அதிமுக அம்மா பேரவை சார்பில் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ தொடங்கி வைக்க, நத்தம் விசுவநாதன், ராஜன்செல்லப்பா ஆகியோர் முடித்து வைத்தனர். இந்த போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகளும், கூட்டணிக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இதில் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, "திமுக ஆட்சியின் மக்கள் விரோத ஆட்சியை, நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இன்றைக்கு சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் எடப்பாடி பழனிசாமி குரல் எழுப்பி வருகிறார். ஸ்டிக்கர் ஸ்டாலின் அரசை எதிர்த்து நெஞ்சுரத்துடன் போராடி வருகிறார்.
தமிழகத்தை தலைநிமிர செய்யும் வகையில் நாள்தோறும் போராட்டங்களை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். அந்த வகையில் கண்ணகி நீதி கேட்ட, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறிய மதுரையில் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க அம்மா பேரவை சார்பில் திமுகவின் அநீதியை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
மாணவர்களுக்கு 52 இலட்சம் கணினிகள் வழங்கி அதிமுக டிஜிட்டல் புரட்சி செய்துள்ளது, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க போராட்டங்கள் நடத்தி அதிமுக தொண்டர்கள் சிறைச்சாலையை நிரப்ப தயாராக இருக்கிறோம், அதிமுகவை கருணாநிதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது, நீட் தேர்வை திமுக அரசால் ரத்து செய்ய முடியவில்லை, 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அளித்து மாணவர்களை எடப்பாடி பழனிசாமி பாதுகாத்தார்,
திமுக அரசு 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவோம் என்று கூறியதை இன்றுவரை நிறைவேற்றவில்லை. ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம் என்றார்கள் அதையும் நிரப்பவில்லை. ஆனால், அதையெல்லாம் மறைக்க பக்கம், பக்கமாக விளம்பரம் செய்கிறார்கள். இதற்கு முடிவு கட்டும் வகையில்தான் இந்த உண்ணாவிரத போராட்டம்.
நாட்டு மக்களுக்கு பாதுகப்பற்ற அரசாக இந்த அரசு உள்ளது. நாட்டு மக்களை மறந்து விட்டு, தன் வீட்டு மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுத் தரும் அரசாக உள்ளது. சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மெஜாரிட்டியை வைத்துக்கொண்டு மக்கள் நலனில் அலட்சியமாக திமுக அரசு உள்ளது. திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றுவதற்கு இந்த போராட்டம் பிள்ளையார் சுழியாக அமையும்.
அக்டோபர் 17-இல் அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆர், திமுகவை எதிர்த்து மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினார். அதே அக்டோபரில் திமுகவை எதிர்த்து மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. மன்னராட்சி, குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சியை ஒழித்து மீண்டும் மக்களாட்சி மலரச் செய்ய வேண்டும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆகியோர் வழியில் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு ஆற்றிய திட்டங்களை யாரும் மறக்க மாட்டார்கள். அதிமுக தொடங்கிய 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்து மக்களுக்கு சேவை செய்தது, எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை ஐ.நா சபையே பாராட்டியது.
உதயநிதியை துணை முதலமைச்சராக்கிய நீங்கள் சமூக நீதி பற்றி பேசலாமா? தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக ஆக்கிய நீங்கள் சமூகநீதிப் பற்றி பேசலாமா? சமூக நீதிக்காக திமுக எதையும் செய்யவில்லை. சமூக நீதி, சமதர்ம, ஜனநாயகத்தின் அடையாளமாக அன்றும், இன்றும் என்றைக்கும் அதிமுக உள்ளது.
நீர் மேலாண்மையில் புரட்சி, குடிமரமாத்து திட்டத்தில் புரட்சி என பல புரட்சிகளை எடப்பாடி பழனிசாமி செய்தார். ஆனால், இன்றைக்கு நீர் நிலைகள் எல்லாம் காய்ந்து கருகிப்போயுள்ளன. அதேபோல் முல்லை பெரியாறு பிரச்சனையில் தீர்வு கண்டு அதன் மூலம் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தது ஜெயலலிதாவின் அரசாகும். மீண்டும் தமிழகம் சிறப்பாக வரவேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
வான்வெளி சாகச நிகழ்ச்சி ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் சிறப்பாக நடைபெற்றது. தற்போது அந்த நிகழ்ச்சியில் குடிக்க தண்ணீர் இல்லாமல் பாலைவன நாட்டில் நடந்தது போல இருந்தது. ஒரு லிட்டர் தண்ணீர் கிடைத்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்க முடியும்.
சிறப்பாக ஏற்பாடு செய்தாக கூறியிருக்கும் அமைச்சர் மா.சுவின் பெயரில் மாசு படிந்து விட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு காவலரை நியமிக்க முடியுமா என்று கேள்வி கேட்கிறார்.
இன்றைக்கு மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசாக உள்ளது. இதற்கு ஒரே தீர்வு எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு போகவேண்டும், ஸ்டாலின் வீட்டுக்கு போக வேண்டும்" என்றார்.