கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதைத்தொடர்ந்து, தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் வெவ்வேறு அலங்காரங்களில் பெருமாள் புறப்பாடு மற்றும் வீதிஉலா நடைபெறுகிறது. அந்த வகையில், பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இதில், காலையில் நடந்த புறப்பாட்டில் உற்சவர் மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில், ஸ்ரீகோதண்ட ராமர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து, நேற்று மாலை 4 மணிக்கு தங்க தேரோட்டம் நடைபெற்றது. திருமாட வீதிகளில் பவனிவந்த தங்க ரதத்தை பெண்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தங்க தேரோட்டத்தைத் தொடர்ந்து, இரவு 7 மணியளவில் கஜ வாகனத்தில் எழுந்தருளி காட்சி தந்தார் மலையப்ப சுவாமி. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மலையப்ப சுவாமியை வணங்கினார்கள். பிரம்மோற்சவத்தின் 7-ம் நாள் நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. காலை புறப்பாட்டில் சூரியபிரபை வாகனத்திலும், இரவு புறப்பாட்டில் சந்திரபிரபை வாகனத்திலும் பாலகிருஷ்ணன் வெண்ணெய் சாப்பிடும் அலங்காரத்தில் எழுந்தருளி காட்சித் தரவிருக்கிறார் எம்பெருமான் ஏழுமலையான்.