BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 9 October 2024

Rajini: கோடிகளில் நஷ்டம்; 3 வருடத்தில் மீண்டும் `ராஜா’வான அமிதாப் - ரஜினி சொன்ன நெகிழ்ச்சிக் கதை!

த.செ. ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் வேட்டையன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், சாபுமோன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன் 33 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார். அமிதாப் குறித்து நிறைய விஷயங்களை 'வேட்டையன்' பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பகிர்ந்திருந்தார்.

ரஜினி

அமிதாப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியத் தொடங்கிய ரஜினி, " 'அந்தா கானூன்' படத்தில் நான் நடித்ததற்கு காரணமே அமிதாப் பச்சன்தான். சட்டம் ஒரு இருட்டறை படத்தின் இந்தி ரீமேக் அது. தெலுங்கில் ரீமேக் செய்து ஹிட்டான பிறகு இந்தியில் எடுத்தார்கள். அதில் நான் நடித்தால் நல்லா இருக்கும் என அமிதாப் பச்சன்தான் படக்குழுவிடம் சொல்லி இருக்கிறார். அதுக்குப் பிறகுதான் தயாரிப்பாளர் வந்து என்னை புக் செய்தார். அதில் அமிதாப் கெஸ்ட் ரோலில் நடித்தார். அந்தப் படத்திற்குப் பிறகு எனக்கு அவரை ரொம்ப புடிச்சு இருந்தது. அவருக்கும் என்னை ரொம்ப புடிச்சு இருந்தது. அதன் பிறகு அவர் நடித்த படத்தில் நான் கெஸ்ட் ரோலில் நடித்தேன். அதன் பிறகு 'ஹம்' படத்தில் இருவரும் இணைந்து நடித்தோம். மூன்று படமுமே மிகப்பெரிய ஹிட்.

அமிதாப் பச்சன் என்கிற மாமனிதன் பற்றி இப்ப இருக்கிற 2k கிட்ஸுக்கு தெரியாது. எப்போதுமே இந்தி நடிகர்கள் 11.30க்குதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாங்க. இவர் உச்சத்தில் இருக்கும் போதே 7 மணிக்கு டப்பிங் போய்டுவார். 8 மணிக்கு மேக்கப் போட ரெடி ஆகிடுவார். அந்தளவு கரெக்டா இருப்பார். அவர் செட்டுக்கு வந்துட்டார்-னா பசியில் இருக்குறவன் எப்படி சாப்பாடு சாப்பாடு என கேட்பானோ அந்த மாதிரி சீன் எங்கே, சீன் எங்கே-ன்னுதான் கேட்பார். சீன் பேப்பரை படிச்சு பார்த்துட்டு நிறைய டவுட் கேட்பார். எல்லா லாஜிக்கும் கேட்டு தெரிஞ்சுப்பார். காமெடி சீன் என்றால் செட் ஃபுல்லாவே கலகலப்பாக இருக்கும். அதுவே சீரியஸ் சீன் என்றால் செட்டே சீரியஸாக இருக்கும். அவர் கிட்ட இருந்து நிறைய விஷயங்களை நான் கத்துகிட்டேன்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சனுடைய அப்பா மிகப்பெரிய கவிஞர், எழுத்தாளர். அவருடைய அம்மா இந்திரா காந்தியோட நெருங்கிய நண்பர். அமிதாப் பச்சனும் ராஜீவ் காந்தியும் ஒரே ஸ்கூல்ல சேர்ந்து படிச்சவுங்க. அந்தளவிற்கு நெருக்கிய நட்பு. இந்த விஷயங்கள் யாருக்குமே தெரியாது. இந்த மாதிரியான ஒரு குடும்ப பின்னணியில் இருந்துகொண்டு நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அமிதாப். அவருக்கு இருக்குற செல்வாக்குக்கு என்ன வேண்டுமானாலும் பண்ணியிருக்கலாம். ஆனால் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டபோது அதை அவருடைய அப்பா அம்மாவிடம் சொல்லியிருக்கிறார்.

அவர்கள் இருவரும் கலந்துபேசி அடுத்த நாள் அமிதாப் பச்சனை கூப்புடுறாங்க. அமிதா பச்சனுக்கு ஒரே டென்ஷன். உனக்கு விருப்பம்னு சொன்னால் நாங்கள் எதுவும் பண்ண முடியாது. அதனால் நடிக்க போ... ஆனால் எங்க போனாலும் நம்ம பேரை கெடுத்துரக் கூடாது, இவருடைய பையன் என எங்கையும் சொல்லக்கூடாது என கண்டிஷன் போட்டனர். அதோடு பாம்பே போனால் கூட ஜாஸ்தி பணம் கொடுக்க மாட்டோம். 200 அல்லது 300 கொடுப்போம் என்றனர். அமிதாப் பச்சனும் அதைக் கேட்டு வெறும் 300 ரூபாயுடன் பாம்பேவுக்கு சென்று ஒரு சின்ன லாட்ஜில் தங்கி, பட வாய்ப்பு இல்லாமல் ரேடியோவில் எல்லாம் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அப்புறம் சொந்த முயற்சியில் பெரிய நடிகராக மாறியிருக்கிறார்.

அமிதாப் பச்சன்

இப்போது இருக்கிற பணக்கார அப்பா அம்மாக்கள் எலாம் அவர்களுடைய பிள்ளைகளை பிரிட்ஜில் வச்சி ப்ரஷ்ஷா வளக்குகிறாங்க. பையன் கேட்டதெல்லாம் பண்ணுறாங்க. பணம் கொடுக்க வேண்டாம். நல்ல குணத்தை கொடுங்க. நல்ல குணம் இருந்தால் பணம் தானாக வரும். அது போல அமிதாப் பச்சன் தான் யாரென சொல்லாமல் நடிப்பில் சாதித்து இருக்கிறார். இது எப்ப வெளியில் தெரிய வந்தது என்றால், அவர் பிஸியான காலகட்டத்தில் ஆக்ஸிடண்ட் ஆகி ஹாஸ்பிட்டலில் சாகின்ற ஸ்டேஜில் இருந்தார். ஒட்டு மொத்த இந்தியாவும் அவருக்காக ப்ரேயர் பண்ணுச்சு. அப்போது இந்திரா காந்தி வெளிநாட்டில் இருந்தார். அங்கிருந்து இன்னொரு வெளிநாட்டுக்கு செல்ல இருந்த பயணத்தை கேன்சல் பண்ணி ட்டு அமிதாப் பச்சனைப் பார்க்க இந்தியாவுக்கு வந்தார். அதுக்குப் பிறகுதான் அவருடைய குடும்ப பின்னணி வெளியில் எல்லாருக்கும் தெரியும்.

ஒரு கட்டத்தில் அமிதாப் பச்சனுக்கு 58 வயசு இருக்கும், நடிப்பது போர் அடித்துவிட்டது என சுவிட்சர்லாந்தில் ஒரு வீடு வாங்கி அங்கேயே ஒரு வருடம் தனியே தங்கியிருந்தார். அவரை பார்த்து நானும் பெங்களூருவில் வீடு வாங்கி தனியே இருந்தேன். பின்பு அவர் திரும்பி வந்தார். ஒரு கம்பெனி தொடங்கினார். நிறைய மொழிகளில் படம் பண்ணினார். எல்லாமே தோல்வி. கோடிக்கணக்கில் நஷ்டம். அவரது வீடு கூட ஏலத்தில் வந்துவிட்டது. உடனே அமிதாப்பை பார்த்து, ‘என்ன பச்சன் வீடு தெருவுக்கு வந்துடுச்சா’ என பேசினர். பெரிய உயரத்துக்கு போனா எப்படா விழுவான்னு காத்திட்டு இருப்பாங்க. விழ கூட வேண்டாம். கொஞ்சம் சறுக்குனா போதும் விழுந்துட்டாண்டா-ன்னு சொல்வாங்க.

ரஜினி

அப்போது அமிதாப்புக்கு வீட்டு வேலைக்காரவங்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை. பக்கத்தில் இருக்கும் டைரக்டர் யாஷ் சோப்ரா வீட்டுக்கு நடந்தே போனார். அவரிடம் வேலை கேட்டார். அவர் செக் கொடுத்தவுடன் அதை வாங்காமல் வேலை கொடுத்தால்தான் செக் வாங்குவேன் என சொன்னார். பின்பு அவர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டு அந்த செக் மூலம் வேலைக்காரவங்களுக்கு பணம் கொடுத்தார். அதை முடித்துவிட்டு 'Crorepati' என்ற கேம் ஷோவில் தானாக போய் கலந்துகொண்டார். பிறகு டிவில பல்பொடி, ஷூ பாலிஸ், அப்பளம், ஊர்கா, ஃபேன் என அனைத்து விளம்பரங்களிலும் நடித்தார். அப்போதெல்லாம் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அமிதாப் நடிப்பதாக விளம்பரம் வந்தது. அதை பார்த்து எல்லாம் அப்படி சிரிச்சாங்க. அதுக்குப் பிறகு மூணு வருஷம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம். கடுமையா உழைச்சிட்டு கடனை எல்லாம் அடைச்சி இழந்த வீட்டை வாங்கினார். பின்பு அதே ரோட்டில் இன்னும் மூணு வீடு பெரிசாக வாங்கினார். அதுதான் அமிதாப் பச்சன். இதுக்காகத் தான் அவருக்கு அவ்ளோ மரியாதை.

இப்போது அவருக்கு 82வயது. ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்கிறார். சுறுசுறுப்பாக இருக்கிறார். 64 வயதில் கீழ விழுந்து மேல வர வேண்டும் என்றால் எவ்வளவு பெரிய விஷயம். அதாங்க வாழ்கை. சேலஞ் வேண்டும். நம்மளை மிதிக்கனும்னு சொல்றவங்க மேல தலைமிதிச்சு நாம மேல போணும். காசும் சாமிதான்.

ரஜினி, அமிதாப் பச்சன்

காசு இருந்தால் எல்லா ஆசாமியும் ஆமா சாமிதான். காசு ஆக்சிஜன் மாதிரி. கண்டிப்பா வேண்டும். அது இல்லைனா வாழ முடியாது. நேரம் ஒரே நாளில் மேல உட்கார வைக்கும். அதே நாளில் கீழே இறக்கிவிடும். எல்லாமே கைவிட்டு போய்விடும். ரொம்ப ஆட்டம் ஆடக்கூடாது. ஜாக்கிரதையாக இருக்கனும். பணத்தையும் ஒரே இடத்தில் வைத்தால் கெட்டு போய்விடும். அதை யூஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும். அந்த மாதிரி அமிதாப் பச்சன் எனக்கு ஒரு ரோல் மாடல்” என்று அவ்வளவு நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார் ரஜினி. இந்த கதையைக் கேட்டால் ரஜினிக்கு மட்டுமின்றி இனி பலருக்கும் அமிதாப் ரோல் மாடலாக ஆகிவிடுவார். வேட்டையன் படத்தில் ரஜினி, அமிதாப் கூட்டணி வெற்றி அடைய வாழ்த்துக்கள்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies