டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க
“ஒரு கொண்டாட்டமான, பெருமிதமான நிகழ்வைத் தன்னுடைய அலட்சியத்தால் சோக நிகழ்வாக மாற்றிவிட்டது விடியா தி.மு.க அரசு. முதல்வரும், அவருடைய குடும்பத்தினரும் அமர்ந்திருந்த மேடையில் ஏ.சி தொடங்கி அனைத்து வசதிகளையும் செய்திருந்த அரசுத் தரப்பு, உச்சி வெயிலில் கால்கடுக்க நின்ற லட்சக்கணக்கான மக்களுக்கு ஒதுங்குவதற்குப் பந்தல்கூட அமைத்துத் தரவில்லை. குடிக்க ஒரு வாய் தண்ணீர்கூடக் கிடைக்காமலும், முதலுதவி செய்ய ஆளில்லாமலும்தான் ஐந்து பேர் பரிதாபமாக இறந்திருக்கிறார்கள். ஆனால், எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்ததாக அமைச்சரும், மேயரும் வாய் கூசாமல் பேசுகிறார்கள். செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளத் திராணியில்லாத தொடை நடுங்கி தி.மு.க அரசு, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் வகையில் ஊடகங்களில் பேசிவருவது ஆணவத்தின் உச்சம். கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாக உதயநிதி நடத்திய கார் ரேஸில் ஓர் அசம்பாவிதம் நடந்திருந்தால், இப்படியொரு விளக்கத்தைக் கொடுத்துத் தப்பிக்க முடியுமா... கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களைக் காண ஓடோடிச் சென்ற முதல்வருக்கு, மெரினாவில் இறந்த ஐந்து பேரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்கவே ஒரு முழுநாள் தேவைப்பட்டிருப்பது வேதனையின் உச்சம். இந்த அலட்சிய அரசை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்!”
பொள்ளாச்சி சித்திக், செய்தித் தொடர்பு துணைச் செயலாளர், தி.மு.க
“எல்லாப் பிரச்னைகளிலும் கீழ்த்தரமான அரசியலை மட்டுமே அ.தி.மு.க செய்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். வான் சாகச நிகழ்ச்சி குறித்து விமானப் படை அறிவித்தபோதே, அதற்கான ஏற்பாடுகளை அரசுத் துறைகள் செய்யத் தொடங்கிவிட்டன. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதிகள் அனைத்தும் அரசுத் தரப்பில் செய்து கொடுக்கப்பட்டன. பதினைந்து லட்சம் மக்கள் பங்கேற்கக்கூடும் என்று சொல்லப்பட்ட நிலையில், அதற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றார்கள். ஆனாலும்கூட, கூட்ட நெரிசலில் சிக்கி யாரும் உயிரிழக்கவில்லை. அதீத வெப்பம்தான் நிலைமையை மோசமாக்கிவிட்டது. அரசு எத்தகைய ஏற்பாடுகளையெல்லாம் செய்திருந்தது, அதையும் மீறி உயிரிழப்பு ஏற்படக் காரணம் என்ன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் முழு விளக்கம் அளித்திருக்கிறார். விமானப்படை அதிகாரிகளே, தமிழக அரசு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்ததாகத்தான் சொல்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க மட்டும் அரசியல் பிழைப்புவாதத்துக்காக, தரம் தாழ்ந்த அரசியலைச் செய்துகொண்டிருக்கிறது. மதுரையில் நடந்த அ.தி.மு.க எழுச்சி மாநாட்டில், சொந்தக் கட்சித் தொண்டர்களையே `அம்போ’வெனவிட்டு எட்டுப் பேர் பலியாகக் காரணமாக இருந்தவர்களெல்லாம் தி.மு.க அரசைக் குறைகூறுவதை என்னவென்று சொல்வது?”