Doctor Vikatan: 37 வயது ஆண் நான். குடிப்பழக்கம் கிடையாது. சமீப நாள்களாக காரில் பயணம் செய்யும்போதும் (ஏசி மற்றும் ஏசி இல்லாத கார்), சில பெரிய துணிக்கடைகளுக்குச் செல்லும்போது மட்டும் வாந்தி உணர்வு , குமட்டல் ஏற்படுகிறது. பதற்றமாகவும் மூச்சு விடுவதில் லேசாக சிரமமும் இருக்கிறது. வாந்தி வரும் உணர்வு ஏற்படும். ஆனால், வாந்தி வராது. ஏப்பம் மட்டும் வந்து கொண்டே இருக்கும். இதுவரை மலைப்பகுதிகளில் வாந்தி இல்லாமல் பயணம் செய்த நான், தற்போது காரில் சிறிய தூரம் செல்லவே அசௌகர்யமாக உணர்கிறேன். இது மனம் அல்லது உடல் சார்ந்த பிரச்னையா.... எந்த மருத்துவரை அணுக வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா.
நீங்கள் குறிப்பிட்டுள்ள வாந்தி உணர்வு, குமட்டல், ஏப்பம் என எல்லாமே கேஸ்ட்ரைட்டிஸ் (Gastritis) எனப்படும் பாதிப்பின் அறிகுறிகளாகவே தெரிகின்றன. உங்களுக்குக் குடிப்பழக்கம் இல்லாவிட்டாலும் கேஸ்ட்ரைட்டிஸ் பாதிப்பின் விளைவாக இந்த அறிகுறிகள் ஏற்படலாம்.
இந்தப் பிரச்னைக்கான தீர்வு பற்றி தெரிந்துகொள்வதற்கு முன், கேஸ்ட்ரைட்டிஸ் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். கேஸ்ட்ரைட்டிஸ் என்றால் நமது வயிற்றிலும் சிறு குடலிலும் அடிக்கடி அமிலம் சுரப்பதாக அர்த்தம். பித்தப்பையிலிருந்து பித்தநீர் என்பது சுரக்கும். அது பித்தப்பையிலிருந்து சிறுகுடலிலும் வயிற்றிலும் சுரக்கப்பட்டு, செரிமானத்துக்கு உதவும். அந்தச் செயலானது எப்போதும் நடந்துகொண்டே இருக்கும். ஒருவேளை நாம் எதுவுமே சாப்பிடவில்லை என்றாலும் விரதம் இருந்தாலுமே இந்த அமிலச் சுரப்பானது சுரந்துகொண்டே இருக்கும்.
அமிலம் அதிகம் சுரக்கும்போது நம் வயிறு மற்றும் சிறுகுடலின் லைனிங்கானது மெதுவாக சிதையத் தொடங்கும். அதனால்தான் அடிக்கடி ஏப்பம், வாந்தி, அஜீரண கோளாறு போன்றவை வரும். எப்போதுமே ஒரு வேளை உணவுக்கும் அடுத்த வேளை உணவுக்கும் இடையில் 2 முதல் 3 மணி நேரம் இடைவேளை இருக்க வேண்டும். இடையில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சர்க்கரைநோயாளிகளுக்கு இரண்டு மணிநேரத்துக்கொரு முறை சிறிது சிறிதாக உணவு எடுத்துக்கொள்ளச் சொல்லி அறிவுறுத்துவோம். கேஸ்ட்ரைட்டிஸ் பாதிப்புக்கும் அதைப் பின்பற்றலாம்.
கேஸ்ட்ரைட்டிஸ் பாதிப்பைத் தீவிரப்படுத்தும் சிட்ரஸ் பழங்கள், எண்ணெய் உணவுகள், புளித்த தயிர், புளித்த மாவில் இட்லி, தோசை, பூண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றை எல்லாம் பின்பற்றியும் உங்கள் பிரச்னை சரியாகவில்லை என்றால் குடல்-இரைப்பை மருத்துவரைச் சந்தியுங்கள்.
அவர் உங்களது அமிலச் சுரப்பைக் குறைக்கும் ஆன்டாசிட் மருந்துகளைப் பரிந்துரைப்பார். அதை எடுத்துக்கொள்வதால் உங்கள் பிரச்னை சரியாகிறதா என்று பார்ப்பார்கள். அதிலும் குணம் தெரியாவிட்டால் எண்டாஸ்கோப்பி முறையில் குடல் எப்படியிருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.