மும்பையில் நேற்று இரவு தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், வயது மூப்பு காரணமாக காலமானார்.
86 வயதாகும் ரத்தன் டாடாவின் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியாவே இரங்கல் தெரிவித்துள்ளது. ரத்தன் டாடாவின் உடல் இன்று பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக மும்பை நரிமன் பாயிண்டில் உள்ள என்.சி.பி.ஏ அரங்கில் வைக்கப்பட்டு இருக்கும்.
காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை பொதுமக்கள் ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தலாம். அதனை தொடர்ந்து மாலையில் அவரது உடல் இறுதிச்சடங்கிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. ரத்தன் டாடாவின் மறைவையொட்டி மகாராஷ்டிரா அரசு இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என்றும், தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கும் என்றும் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"இன்று மாலையில் மும்பை ஒர்லியில் ரத்தன் டாடாவின் உடல் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும். எதிர்கால தொழில்முனைவோருக்கு ரத்தன் டாடா முன்மாதிரி என்றும், இந்திய தொழில் துறையின் அடையாளம். 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு அவர் காட்டிய உறுதியை அனைவரும் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். அவரது உறுதியான முடிவுகள், துணிச்சலான அணுகுமுறை மற்றும் சமூக அர்ப்பணிப்பு ஆகியவை எப்போதும் நினைவுகூரப்படும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழிலதிபர் கெளதம் அதானி, ஆனந்த் மகேந்திரா, சுந்தர் பிச்சை ஆகியோர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரத்தன் டாடா நேற்று முன் தினம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீஜ் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதுவும் வழக்கமான சோதனைதான் என்று ரத்தன் டாடாவும் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் அவரது மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.