தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) `முதல் மாநாடு’ வரும் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கிறது.
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய்யின் அரசியல் அத்தியாயத்துக்கான முதல் படி என்பதால், இந்த மாநாட்டை வெற்றிக் கொள்கைத் திருவிழாவைப்போல கொண்டாடத் திட்டம் வகுக்கப்பட்டு, அதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்கள் முதற்கொண்டு கிராமங்கள்தோறும் த.வெ.க மாநாட்டுக்கான போஸ்டர்களும், பேனர்களும் அலங்கரித்து வைக்கப்பட்டு வருகின்றன. கொடியேற்று நிகழ்ச்சியையும் ஊருக்கு ஊர் த.வெ.க நிர்வாகிகள் அணித்திரண்டு செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்திலும், த.வெ.க மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.வேல்முருகன் மேற்பார்வையில் மாநாட்டுப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குடியாத்தத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் இரவோடு இரவாகக் கிழித்தெறியப்பட்டிருக்கின்றன. இது குறித்து விசாரித்தபோது, குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதான சுற்றுச்சுவரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததாகவும், பள்ளி தலைமையாசிரியர் தரப்பில் குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதால் போஸ்டர்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே சமயம், இந்த விளையாட்டுத் திடலின் வெளிப்புறச் சுற்றுச் சுவரில்தான் இதுநாள் வரையிலும் சினிமா திரைப்பட போஸ்டர்களும், ஆளும் தி.மு.க அரசின் கட்சி நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வந்திருக்கின்றன. வழக்கமாக போஸ்டர் ஒட்டக்கூடிய இடம்தானே என்பதால் த.வெ.க-வினரும் மாநாட்டுப் போஸ்டர்களை ஒட்டியிருக்கின்றனர்.
இது குறித்துப் பேசுகிற குடியாத்தம் த.வெ.க நிர்வாகிகள் சிலர் ``விளையாட்டுத் திடலின் வெளிப்புறச் சுவற்றில் போஸ்டர் ஒட்டுவது தவறன்றே வைத்துக்கொள்வோம். அதே சமயம், இத்தனை நாள்களாக மற்ற அரசியல் கட்சியினரும் இங்குத்தானே போஸ்டர்களை ஒட்டினார்கள். அப்போது ஏன் தடுக்கவில்லை; அவர்களின் போஸ்டர்களை ஏன் கிழித்தெறியவில்லை; அவர்கள் மீது ஏன் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை?
சில மோசமான விளம்பரங்களும், சினிமா போஸ்டர்களும்கூட ஒட்டப்பட்டபோது, பள்ளித் தரப்பு கண்டும் காணாமல் இருந்தது. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் போஸ்டர்கள் மட்டும் இவர்களின் கண்களை உறுத்தியிருக்கிறது என்றால், அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம். சாதாரண போஸ்டருக்குப்போய் பள்ளி நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் பதறியடித்துக்கொண்டு போலீஸில் புகாரளித்து இரவோடு இரவாகப் போஸ்டர்களைக் கிழித்திருக்கின்றனர். வரும் காலங்களில், தி.மு.க உட்பட மற்றக் கட்சியினரின் போஸ்டர்களையும் இங்கே ஒட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது’’ என்கின்றனர் கொதிப்போடு.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX