கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் ஆகும். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் அவர்களது குலதெய்வமாக வழிபட்டு வந்த ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில், மூலவர் சுமார் 18 அடி நீளத்தில் பள்ளி கொண்ட நிலையில் காட்சி தருகிறார்.
மூன்று வாயில்கள் வழியாகச் சுவாமியின் பாதம், இடைப்பகுதி, முகம் எனத் தனித்தனியாகத் தரிசிக்க முடியும். இந்த கோயிலில் உள்ள ரகசிய அறைகளில் விலை மதிக்க முடியாத ஆபரணங்கள் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து இக்கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். பக்தர்கள் கோவிலுக்குள் மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதியில்லை. பக்தர்கள் கோயிலுக்குள் செல்லும்போது மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை செய்தே காவல்துறையினர் உள்ளே அனுப்புகின்றனர். ஆண் பக்தர்கள் வேட்டி அணிந்தும், மேலாடை அணியாமலும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பெண் பக்தர்கள் பாரம்பரிய உடை அணிந்தும் இக்கோயிலுக்குச் செல்கின்றனர்.
இந்த நிலையில் கோயிலில் சுவாமி பூஜைக்குப் பயன்படுத்தக்கூடிய சிறிய உருளி (வெண்கல பாத்திரம்) ஒன்று காணாமல் போனதாகக் கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. சி.சி.டி.வி கேமரா கண்காணிக்காத பகுதியிலிருந்து அந்த ஊருளி திருடப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தியதில் பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற மருத்துவர் கணேஷ் ஜா அந்த உருளியை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. கணேஷ் ஜா, அவரின் மனைவி, சகோதரி மற்றும் மற்றொரு பெண்ணுடன் கோயிலுக்குச் சென்றுள்ளார். கணேஷ் ஜா-வின் மனைவியும் மருத்துவர்தான். சகோதரி செவிலியராக உள்ளார்.
இதையடுத்து கணேஷ் ஜா-வின் மொபைல் போனை ட்ரேஸ் செய்ததில் அவர் திருச்சி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்றுவிட்டு ஹரியானா சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளா காவல்துறை ஹரியானா காவல்துறையைத் தொடர்புகொண்டு அவர்கள் உதவியுடன் கணேஷ் ஜா-வை கைது செய்து திருவனந்தபுரம் கொண்டுவந்தனர். பின்னர் அவர்மீது திருட்டு பிரிவில் வழக்குப் பதிவு செய்யாமல் சாதாரண பிரிவில் வழக்குப் பதிவு செய்து ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தனர்.
இதுகுறித்து போர்ட் காவல்துறை கூறுகையில், "கடந்த மாதம் 13-ம் தேதி கோயிலில் பூஜை பாத்திரம் ஒன்று காணாமல் போனதாகக் கோயில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கோயிலில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் கடந்த 15-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் கணேஷ் ஜா அந்த பாத்திரத்தை எடுத்துச் சென்றதைக் கண்டறிந்து அவரைக் கைது செய்தோம்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் தந்தையின் மறைவுக்குப் பின் பல புண்ணிய தலங்களுக்கும் சென்று வழிபட்டு வருவதாகத் தெரிவித்தார். அவருடன் அவரது மனைவி, தங்கை, மற்றொரு பெண் ஆகியோரும் வந்துள்ளனர். காலையில் 8 மணிக்குக் கோயிலுக்குத் தரிசனத்திற்காகச் சென்றுள்ளனர். ஒற்றைக்கல் மண்டபத்தில் முன்பு பூஜைக்கான பொருட்களுடன் அவர் நின்று கொண்டிருந்தபோது, சர்க்கரை நோயாளியான அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது அவரைத் தாங்கிப் பிடித்த சிலர் முதலுதவி செய்துள்ளனர்.
அந்த சமயத்தில் அவரது கையிலிருந்த பூஜைப் பொருட்கள் கீழே விழுந்துள்ளன. அவற்றைச் சிலர் எடுத்து பூஜைக்குப் பயன்படுத்தும் உருளி பாத்திரத்தில் வைத்துக் கொடுத்துள்ளனர். பூஜை முடித்து வரும்போது அது தன்னுடைய பாத்திரம் இல்லை என்பதும், கோயிலில் பூஜைக்குப் பயன்படுத்தும் பாத்திரம் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனாலும் கோயிலில் உள்ள பாத்திரம் என்பதால் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டில் பூஜை அறையில் வைத்து அதைப் பூஜை செய்யலாம் என நினைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். அவர் திட்டமிட்டுத் திருடவில்லை என்பதால் அவர் மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். கணேஷ் ஜா-வின் மனைவி, சகோதரி உள்ளிட்டவர்களுக்கு இந்த வழக்கில் சம்பந்தம் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88