பிக் பாஸ் சீசன் 8 நடந்துக் கொண்டிருக்கிறது. `ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு' என தன்னுடைய பாணியில் களத்தை அழகாக நகர்த்தி கொண்டுபோகிறார், விஜய் சேதுபதி.
முதல் வாரத்தில் சத்தமில்லாமல் அமைதியாகவே இருந்த ரஞ்சித் இரண்டாவது வாரத்தில் தன்னுடைய அசல் விளையாட்டை தொடங்கிவிட்டார். ரஞ்சித் குறித்து அவரின் மனைவியும் நடிகையுமான ப்ரியா ராமனிடம் பேசினோம்.
பேச தொடங்கிய அவர், "பிக் பாஸ்ல டாஸ்க் விளையாடும்போதும் ரஞ்சித் ரொம்பவே அமைதியாகதான் இருப்பாரு. சில சமயங்கள்ல பாடவும் செய்வார். சொல்லப்போனால், அவர் ரொம்பவே நல்லா பாடுவார். அவர் பாடினதை ரெக்கார்ட் பண்ணிலாம் வச்சிருந்தோம். அப்படியே மனோ சார் மாதிரி பாடுவார். அவர் காலேஜ்ல படிக்கும்போது லைட் மியூசிக்ல பாடியிருக்கார். பிக் பாஸ் வீட்டுல யார் இப்போ தந்திரமாக விளையாடுறாங்கனு பார்க்கும்போது.... எனக்கு தெரிஞ்சு எல்லோரும் என்ன மாதிரியான பந்து வரும்னு தெரியாமல்தான் பேட்டிங் பண்றாங்க.
சில நேரம் அது ஹெலிகாப்டர் ஷாட்டாகவும் மாறிடும். சில சமயத்துல அது டக் அவுட்டாகவும் மாறிடும். எல்லோருக்கும் அவங்க திறமையை வெளிய காட்டுறதுக்கு நேரம் வேணும். ஆனா ஒரு விஷயம், பிக் பாஸ் இங்க ரொம்ப நல்லா விளையாடுறாரு." என்றவர், "இப்போ பிக் பாஸ் வீட்டுல இருக்கிற விஷாலுக்கும் ரஞ்சித்துக்கும் நல்ல பந்தம் இருக்கு. அவங்க ரெண்டு பேரும் இதுக்கு முன்னாடி பாக்கியலட்சுமி தொடர்ல இணைந்து நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு இடையில பரஸ்பரம் நல்ல ஒரு புரிதல் இருக்கு. விஷாலும் ரஞ்சித்கிட்ட முதலிலேயே நேர்மறையான விஷயங்களை சொல்லியிருந்தார்.
அதே மாதிரி அருணும் நல்லா விளையாடிட்டு இருக்காரு. அவரும் ரஞ்சித்கிட்ட உண்மையான அன்போட இருக்கார். நாளடைவில் தன்னை தக்கவைக்கிறதுக்காக மற்ற போட்டியாளர்கள் எப்படி இருப்பாங்கனு தெரியாது. அந்த சமயத்துல அவங்கள விமர்சிக்க்கவும் கூடாது. `அப்போ பாசமாக இருந்துட்டு இப்போ இப்படி பண்ற'னு கேள்வியும் கேட்க முடியாது. அதெல்லாம் சூழல்களை பொறுத்தது. பிக் பாஸ் வீட்டிலிருக்கிற எல்லோரும் ரஞ்சித்தை புரிஞ்சுகிட்டாங்க. இத்தனை நாட்கள்ல அவர் நேர்மையான மனிதன் என்பதையும் புரிஞ்சுகிட்டாங்க." என்றவர் தாய் மீது எந்தளவிற்கு ரஞ்சித் பாசமானவர் என விவரிக்க தொடங்கினார்.
அவர், " ரஞ்சித் ஒரு அம்மா பைத்தியம். அம்மாமேல அத்தனை ப்ரியமாக இருப்பார். அவங்களுக்கு இடையில அப்படியொரு பந்தம் இருக்கும். அம்மாவுக்காக ரஞ்சித் அவ்வளவு விஷயங்களை பண்ணுவார். அவங்க ரெண்டு பேரும் சண்டை போடுவாங்க. சண்டைக்குப் பிறகு ரஞ்சித்தோட அம்மா சாப்பிடலைனா ரஞ்சித்தும் சாப்பிடமாட்டார். அந்தளவுக்கு அம்மாவை அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க அம்மாவோட இழப்புல இருந்து அவர் இன்னும் மீண்டு வரலைனுதான் சொல்லணும். அவங்களோட பிரிவுக்குப் பிறகு என் ரஞ்சித் சிரிக்கவே இல்ல. அவர் சந்தோஷமாகதான் இருப்பாரு, திடீர்னு அவங்க அம்மாவோட ஞாபகம் வந்திடுச்சுனா ரஞ்சித் சோகமாகிடுவார். "என்றார்.
மேலும் பேசிய அவர், "ரஞ்சித் ஆர்வகோளாறு கிடையாது. எந்த நேரத்துல அடிக்கணும்னு அவருக்கு தெரியும். அந்த சமயத்துல அவர் ஜொலிப்பாரு. இப்போகூட சமீபத்துல ஜாக்குலினும் அவரும் பன்ணின தந்தை மகள் பெர்பாமென்ஸ் பார்த்திருப்பீங்க. அவ்வளவு அழகாக ரஞ்சித் பண்ணியிருந்தார். " என ரஞ்சித் தொடர்பாக பேசி முடித்தார். அதன் பிறகு `ஏன்நடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டதற்கான காரணம் என்ன' என கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், " செம்பருத்தி சீரியல் 5 வருஷம் நான் பண்ணினேன். அந்த சீரியல் அந்தளவுக்கு ஹிட்டாகும்னு நான் நினைக்கவே இல்ல. அந்த சீரியல் தொடங்கும்போது சிறுவர்களாக இருந்த என்னுடைய குழந்தைங்கள் அந்த தொடர் முடியும்போது நல்லா வளர்ந்துட்டாங்க.
குழந்தைகளோட அந்த நேரத்துல உடன் இருந்தாகணும்னு ஒரு வருடம் பிரேக் எடுத்துகிட்டேன். அதுக்குப் பிறகு ரஞ்சித் படத்தோட வேலைகள் தொடங்குச்சு. அதுல அவர் ஒன்றரை வருடம்கிட்ட செலவழிச்சார். அந்த சமயத்துல நானும் நடிக்கிறதுக்குப் போயிட்டா குழந்தைகளை யார் பார்த்துக்கிறது. நம்ம குழந்தைகளை இந்த உலகத்துக்கு கூடிட்டு வந்ததுக்குப் பிறகு அவர்களுக்காக நம்ம இருந்தே ஆகணும். அதுவும் டீனேஜ்ல முக்கியமாக அவங்ககூட நேரத்தை செலவழிக்கணும். இப்போ கதைகள் கேட்டுட்டுதான் இருக்கேன்." எனக் கூறி முடித்துக் கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX