தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மனநல காப்பகத்தில் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா திடீரென ஆய்வு செய்தார். அந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் உள்ளனர். வாழ்க்கையில் நடந்த சில சந்தர்ப்ப சூழல்கள் இவர்களை எங்கு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தீர்களானு காப்பகத்தில் இருந்தவர்களை நினைத்து உருகினார் மாவட்ட ஆட்சியர்.
"இதில் இருக்கும் பலரை பார்க்கும் போது பாதிக்கப்பட்டவர்கள் என்பதே தெரியாது. ஒரு சில சமயத்தில் மட்டும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் போது மட்டும் கூச்சல் போடுவார்கள். புலம்புவார்கள் மற்ற சமயங்களில் சக மனிதனை போல் ரொம்ப சகஜமாக இருப்பார்கள்" என்றனர் காப்பக நிர்வாகத்தினர்.
பலரும் கைவிட்ட பிறகு குழந்தை மனசோடு இருப்பது இவர்களுக்கான ப்ளஸ். இங்கு இருக்குற யாருக்கும் எப்பவும் சின்னதா கூட எந்த கஷ்டமும் கொடுக்காம பார்த்து கொள்ளுங்கள் என அக்கறையை வார்த்தைகளாக வெளிப்படுத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா. பின்னர், அவர்கள் அருகில் சென்று, எல்லோரும் நல்லா இருக்கீங்களா, நேரத்துக்கு சாப்பாடு தராங்களா, குறைகள் எதுவும் இருக்கானு சிரித்தபடி கேட்டுள்ளார்.
காப்பகத்தில் இருந்தவர்கள் வெளி உலகத்தை பார்த்து நாளாச்சும்மா, நாலு சுவத்துக்குள்ளயே ஒவ்வொரு நாளும் ஓடுது, எங்களுக்கும், கோயில், பூங்கா, சினிமா போகணும்னு ஆசையாக இருக்கு. எங்களுக்கு எல்லாம் கிடைத்தாலும் மனசு நிறையவில்லை. ஒரு நாள் எல்லோரையும் மாதிரி நாங்களும் பறவைகளாக சுற்றித்திரியணும், அதுக்கு வாய்ப்பிருக்காமானு ஆட்சியரிடம் குழந்தை போல் கேட்டுள்ளனர். உடனே சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் மூலம் அதற்கான ஏற்பாட்டை செய்வதற்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து உலக மனநல தினத்தில் காப்பகத்தில் உள்ளவர்களை வெளியே அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி காப்பகத்தின் பணியாளர்கள் உதவியுடன் அதில் இருந்த 25 பேரையும் சுற்றுலா வளர்ச்சி குழுமத்தினர் நேற்று சுற்றுலா அழைத்துச் சென்றனர். தஞ்சாவூர் பெரிய கோவில், அரண்மனை வளாகம், ராஜாளி பறவைகள் பூங்கா, தஞ்சாவூர் அருங்காட்சியகம், 7D திரையரங்கம் மற்றும் சிறுவர் தொடர்வண்டி பயணம் என பல இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றாக ராஜாளி பறவைகள் பூங்கா மாறிவிட்ட நிலையில் காப்பகத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று கைகளை நீட்டியுள்ளனர். அவர்களது கைகளில் ராஜாளி பறவைகள் வந்து உட்கார அவர்களது முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. புதிதாக பிறந்தவர்கள் போல் மாறியதுடன் புதிய உலகத்தில் இருப்பதை போல் மகிழ்ந்தனர். 7D கண்ணாடி அணிந்து சோழர்களின் வாழ்வியல் குறித்த படத்தை கூதுகலமாய் பார்த்து ரசித்தனர். பெரியகோயிலுக்குள் சென்றதும் எல்லோருக்காகவும் வேண்டிக்கொண்டனர் அது தான் அவர்களோட மனசு.
இது குறித்து சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், ``குறையேதும் இல்லாமல் இருப்பவர்களே, வாரம் ஒரு முறை பார்க், பீச், சினிமானு டிப்ரஷனை குறைக்க வெளியில் போறதை வழக்கமாக வைத்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு வெளியில் சுற்றுலா செல்வது ரொம்ப முக்கியம். அவர்களுடைய நிலையை உணர்ந்திருந்ததால் ஆட்சியர் பிரியங்கா மேடத்திற்கு இந்த யோசனை தோன்றியுள்ளது. என்ன கேட்டாலும் வாங்கி கொடுங்க, எங்கு வேணாலும் அழைச்சிட்டு போங்கனு சொன்னார் மாவட்ட ஆட்சியர். மேடம் இப்படி சொல்றாங்க, ஆனாலும் இது ரிஸ்க் ஆக எங்களுக்குத் தோன்றியது. ஆனால் வெளியில் பறவைகளை போல் மகிழ்ந்ததில் அவர்கள் முகத்தில் இருந்த கவலைகள் மறைந்து விட்டன. கலெக்டர் மேடம் இதுக்குத்தான் அவங்களோட ஆசையை நிறைவேத்த சொல்லியிருக்கிறார் என்பது எங்களுக்கு புரிந்தது" என்றார்.
இதில் மகிழ்ந்த காப்பகத்தில் உள்ளவர்கள், "எங்களை சிரிக்க வச்சி அழகு பார்த்த கலெக்டருக்கு நன்றி. இந்த நாள் எங்களுக்கான மறுஜென்மம் மாதிரி இருந்துச்சி. ஒவ்வொரு நாளும் இப்படி இருக்க கூடாதுனு மனசு ஏங்குது. மாசத்துல ஒரு நாளாவது நாங்கள் இதுபோல் சுற்றுலா சென்றால் மனசு லேசாகிடும். மருந்து மாத்திரை தேவையிருக்காது" என்றனர்.