தனது பாடல்வரிகளைக் கேட்டு ரசிகையாகி, பட வாய்ப்புக் கேட்டு வந்த கன்னிகாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் பாடலாசிரியர் சினேகன்.
சினேகன் பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் இருக்கும் போது தான் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலித்து வருவதாக சொல்லி இருந்தார். 'பிக்பாஸ் வீட்டில், என்னைப்பத்தி யார்கிட்டயும் சொல்லக் கூடாதுனு' கன்னிகா, சினேகனிடம் சொல்லியிருக்கிறார். அதனால், அவரின் பெயரை சொல்லாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தார் சினேகன். அப்போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்த சினேகனின் தந்தை, சினேகனின் திருமணம் குறித்து மிகவும் வேதனைப்பட்டு கண்ணீருடன் பேசியிருந்தார். விரைவில் சினேகன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.
இதைப் பார்த்த கன்னிகா, திருமணத்திற்கு உடனே ஓகே சொல்ல, சினேகனின் திருமணத்தைப் பார்த்துவிட வேண்டும் என உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த இருந்த சினேகன் தந்தையின் முன் கன்னிகாவை நிறுத்திய சினேகன் ' ஐயா, இவங்க தான் உன் மருமக, இவங்கள கட்டிக்கத்தான், நீ பார்த்த பொண்ணுகளை யெல்லாம் வேணாம்னு இருந்தேன்’ என்று தனது காதலை வீட்டில் கூறி சம்மதம் வாங்கினார்.
பிறகு இருவீட்டாரின் வாழ்த்துகளுடன் ஜூலை 29ம் தேதி 2021ம் ஆண்டு காதலித்தப் பெண்ணையே கரம் பிடித்தார் சினேகன். இதையடுத்து ஜாலியாக இன்ஸ்டாகிராம், யூடியூப் சமூகவலைதளங்களில் காணொலிகள் பதிவிட்டு க்யூட் காதல் ஜோடிகளாக வளம் வந்தனர் இருவரும்.
இந்நிலையில் தற்போது, "நாங்க அப்பா அம்மா ஆகப்போறோம்.. உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும்" என்ற நற்செய்தியை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். பிரபலங்கள், நெட்டிசன்கள் எனப் பலரும் இவர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
சினேகன் - கன்னிகா இருவருக்கும் வாழ்த்துகள்.