மலையாள சினிமா உலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து நடிகைகள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகார் அளித்தனர்.
பிரபல சினிமா நடிகர் சித்திக் தன்னை பாலியல் புகார் தொல்லை செய்ததாக இளம் நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த நடிகை அப்போது கூறுகையில், "பெரிய கனவுடன் திரைப்படத் துறைக்கு வந்தேன். ஒரு திரைப்படம் பற்றி விவாதிப்பதற்காக ஒரு ஹோட்டல் அறைக்கு நடிகர் சித்திக் என்னை அழைத்தார். தொழில்முறை அணுகுமுறையாக மட்டுமே அந்த சந்திப்பை கருதினேன். ஆனால் நான் சிக்கிக் கொண்டேன். அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அது பாலியல் வன்கொடுமைதான். என்னிடம் அவர் அத்துமீறியதால் நான் அங்கிருந்து தப்பி ஓடும் நிலை ஏற்பட்டது. என் நண்பர்கள் சிலருக்கும் அவருடன் இது போன்ற அனுபவங்கள் இருந்திருக்கிறது. அந்த சம்பவத்துக்குப் பிறகு நான் சினிமா தொழில்துறையிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டேன்" எனக் கூறியிருந்தார்.
குற்றசாட்டுகளைத் தொடர்ந்து மலையாள நடிகர் சித்திக் மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கமான அம்மா அமைப்பின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அம்மா அமைப்பின் அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
நடிகை புகாரின் அடிப்படையில் கேரளா அரசு நியமித்த ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கொண்ட போலீஸ் குழு ஆகஸ்ட் 27-ம் தேதி சித்திக் மீது வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து சித்திக் கேரளா ஐகோர்டில் முன் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஐகோர்ட் ஜாமீன் வழங்கவில்லை. இதை அடுத்து சித்திக் தலைமறைவானார். போலீஸார் அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் சித்திக் முன் ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 2 வாரங்களுக்கு நடிகர் சித்திக்கை கைது செய்ய தடைவிதித்து முன் ஜாமின் வழங்கியது. மேலும், இரண்டு வாரங்களுக்குப்பின் இதுகுறித்து மீண்டும் சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்த உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் மாநில அரசு என்னச்செய்தது எனவும் சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியது.
ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியானதைத் தொடர்ந்தே இப்போது புகார் அளித்ததாக நடிகை தரப்பும், மாநில அரசும் தெரிவித்தது. இதையடுத்து நடிகர் சித்திக் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும், இதுபோன்று நடப்பது சினிமாவில் மட்டும் அல்ல எனவும் எனவும் ஐகோர்ட் சுட்டிக்காட்டியது. முன் ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து நடிகர் சித்திக் விரைவில் விசாரணைக்குழு முன்பு ஆஜராக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...