ஏமனில் உள்ள ஹௌதி படையை இஸ்ரேல் படைகள் தாக்கியதில் 4 பேர் மரணமடைந்தனர். இதனைத் தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், "எங்கள் படைகளுக்கு எந்த இடமும் வெகு தூரமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
ஏமனில் உள்ள ரஸ் இஸ்ஸா, ஹொடெய்டா துறைமுகங்கள் மீதும் மின் உற்பத்தி நிலையங்கள் மீதும் போர்விமானங்கள், ஜெட்கள் மூலம் வான் வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் பவர் பிளான்ட்கள், துறைமுகங்களை ஐடிஎஃப் தாக்கியுள்ளது. ஹௌதி இரானிய ஆயுதங்கள், எண்ணெய் உள்பட இராணுவத்துக்கு தேவையான பொருள்களை இறக்குமதி செய்ய அந்த தளங்களைப் பயன்படுத்தி வந்தது" என ஐடிஎஃப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏமனில் ஹௌதி சுகாதாரத்துறையும் 4 பேர் மரணத்தை உறுதிபடுத்தியிருக்கிறது. மேலும் 29 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறது.
ஈரான் ஆதரவில் இருக்கும் ஆயுதப்படைகள் மீது ஆக்ரோஷமான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது இஸ்ரேல். அந்த வகையில் லெபனானின் ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து ஏமனில் ஹௌதி அமைப்புக் குறிவைக்கப்பட்டிருக்கிறது.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவழிப்பதற்காக கடந்த இரண்டு நாள்களாக இஸ்ரேலைக் குறிவைத்து ஏமனைச் சேர்ந்த ஆயுத அமைப்பு (ஹௌதி) ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அதேநேரம் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்துக்குப் பிறகு ஹௌதியின் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாகவே இஸ்ரேல் ஏமன் துறைமுகங்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
ஹசன் நஸ்ரல்லா மரணத்துக்கு பழிவாங்கல் நடவடிக்கையாக வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது ஹிஸ்புல்லா. 35 ஏவுகணைகள் தாக்கியதாகவும், அதில் 25 வெட்டவெளியில் விழுந்ததாகவும் ஐடிஎஃப் கூறுகிறது. மேலும் ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் உயிரிழப்பு எதுவுமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் இஸ்ரேலின் ஆக்ரோஷத்தைக் குறைக்க ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது லெபனான் அரசு.
கடந்த இரண்டு வார காலமாக லெபனான் மீது தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இஸ்ரேல். இதில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெற்கு லெபனானைச் சேர்ந்த லட்சக்கணக்கான நபர்கள் வீடுகளை விட்டுவிட்டு புலம்பெயர்ந்துள்ளனர். பலரும் எல்லையைக் கடந்து சிரியாவிற்குள் நுழைந்துள்ளனர்.
போர் நிறுத்தம் குறித்து முடிவெடுப்பதற்காக நெதன்யாகு ஐ.நா.பொதுச்சபைக்கு (நியூ யார்க்) சென்றிருந்த நேரத்தில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதால், போர் நிறுத்தம் சாத்தியாமா என்ற கவலை மேலெழுந்துள்ளது.
அமெரிக்கா ஈரான் மீது முழுமையான போரை அதரிக்கவில்லை என்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் தேவை என்றும் வெள்ளை மாளிகைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb