இயக்குநர் பயல் கபாடியா இயக்கத்தில் உருவான 'All we imagine as light' திரைப்படம் ஆஸ்கர் ரேஸில் இணையவிருக்கிறது!
இத்திரைப்படம் இந்தாண்டு கான் திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டது. கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதையும் வென்றது. 30 வருடங்களுக்குப் பிறகு இந்த விருதை வெல்லும் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையும் இத்திரைப்படத்திற்கு கிடைத்தது.
இத்திரைப்படத்தில் மலையாள நடிகை கனி குஸ்ருதி, திவ்ய பிரபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தை பிரான்ஸ் தயாரிப்பு நிறுவனமான பெடிஸ் கயாஸ் (Petis Chaos) , சால்க் & சீஸ் என்ற இந்திய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது. ஒரு இந்திய படத்தை முதன்மையாக ஒரு பிரான்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்ததைக் கண்டித்து இத்திரைப்படம் கான் திரைப்படம் விழாவில் வெளியிடப்பட்ட சமயத்தில் தனது வருத்தங்களை கூறியிருந்தார் இயக்குநர் அனுராக் காஷ்யப். அப்போது அவர், " 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' போன்ற படைப்புகளை இந்தியா ஆதரிப்பதில்லை.
ஆனால் அப்படியான படைப்புகள்தான் கான் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இந்த படம் பிரான்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிதியினால்தான் உருவானது. ஆனால் அஸ்ந்துடைய திரைப்பட விழாக்களில் இது போன்ற படைப்புகள் திரையிடப்படும்போது மட்டும் 'அது இந்திய திரைப்படம்' என கிரெடிட் எடுத்துக் கொள்கிறார்கள்" எனக் கூறியிருந்தார். தற்போது பிரான்ஸ் ஆஸ்கர் கமிட்டி 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உட்பட நான்கு படைப்புகளை பிரான்ஸின் அதிகாரப்பூர்வ என்ட்ரியாக சிறந்த திரைப்படத்திற்கான பிரிவிற்கு அனுப்புவதற்கு தேர்வு செய்திருக்கிறது.