நமது உணவு முறையில் 2011 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் எத்தகைய மாற்றங்கள் நடந்துள்ளன என்பது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (EAC - PM).
இதன்படி, உணவுக்காக ஒரு குடும்பம் செலவு செய்யும் தொகை முதல்முறையாகக் குறிப்பிடத்தகுந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது.
கிராமப்புறங்களில் 2011-12 காலத்தில் ஒரு குடும்பத்தில் உணவு செலவு 55.7 சதவிகிதமாக இருந்தது, 2022-23 காலத்தில் 48.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் 2011-12 காலத்தில் 48 சதவிகிதமாக இருந்தது, 41.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
பொதுவாக, ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து, மக்களின் வருமானம் அதிகரிக்கும்வேளையில், உணவுக்காகச் செலவு செய்வது குறைவது என்பது உலக அளவிலான ஒன்றாகவே இருக்கிறது.
அதே சமயம், திரும்பிய பக்கமெல்லாம் புதுப்புது உணவகங்கள், வீடு தேடி வந்து உணவு தரும் ஆப்கள், நகர்ப்புறங்கள் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் உணவு விடுதிகளில் ‘ஜேஜே’வென எல்லா நாள்களிலும் திருவிழா கணக்காகக் கூட்டம் கூடி நிற்கும் சூழலில், இந்த ஆய்வறிக்கை சொல்வது நூற்றுக்கு நூறு சரியா என்கிற கேள்வி இயல்பாகவே எழச் செய்கிறது.
என்றாலும், நமது உணவுப் பழக்கத்தில் தாறுமாறாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து இந்த ஆய்வறிக்கை பேசியிருப்பது, யோசனைக்குரியதே. புகையிலை மற்றும் மதுபானங்களுக்காகச் செலவு செய்வது இந்தக் காலகட்டத்தில் 2.7 சதவிகிதத்தில் இருந்து 3.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நகரப்புறங்களைவிட கிராமப்புறங்களில் இந்தச் செலவு கூடுதலாக அதிகரித்திருப்பது கவலை அளிக்கும் தகவலாகவே இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சி நல்ல பல விஷயங்களை நமக்குத் தரும் அதேவேளையில், சில மோசமான விஷயங்களையும் தரத் தவறாது.
கையில் பணம் இருக்கிறது என்பதை நாம் உட்கொள்ளும் உணவு உள்ளிட்ட வற்றில் காட்டினால், அதனால் ஏற்படும் பாதகங்களை நம் உடலானது உடனே காட்டவில்லை என்றாலும், பல ஆண்டுகள் கழித்தாவது நிச்சயம் காட்டவே செய்யும்.
உணவை மருந்துபோல நினைத்து சாப்பிடுகிற அளவுக்கு நாம் கடுமை காட்ட வேண்டாம். ஆனால், விஷத்தை ரசித்துக் குடிக்கிற தவற்றையும் நாம் செய்யக் கூடாது என்பதைக் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்!
- ஆசிரியர்