`பாஸிகர்... ஓ பாஸிகர்...' என ஷாருக்கானுக்கு ஜோடியா கஜோல் டூயட் பாடின அதே படத்துலதான் இந்த நடிகையும் அறிமுகமானங்க. ஆனா, ஆரம்ப காலத்துல கஜோலோட ஸ்கிரீன் பிரசன்ஸ் முன்னாடி இவங்க அந்தளவுக்கு எடுபடலைன்னுதான் சொல்லணும்.
அதுக்கு அடுத்த பத்து வருடங்கள்லயும்கூட சில ஹிட் படங்கள், சிறந்த துணை நடிகை அவார்ட் வாங்கியிருந்தாலும், இந்த நடிகையோட சினிமா கிராஃப் தொடர்ந்து உச்சத்துல இருக்கலைங்கிறதுதான் யதார்த்தம். போட்டோஜெனிக் முகம், பாலிவுட் திரையுலகம் எதிர்பார்க்குற ஸ்லிம்மான உடல்வாகு, அக்ஷய் குமார்கூடவும், பிரபுதேவா கூடவும் டான்ஸ்ல பின்னி பெடல் எடுத்திருந்தும்கூட, தொடர் வெற்றிங்கிற மேஜிக் அந்த நடிகையோட கரியர்ல நடக்கவே இல்ல. ஆனா, அந்த மேஜிக் மொமன்ட் 2007 லண்டன்ல நடந்த `பிக் பிரதர் ரியாலிட்டி ஷோ'வுல அவங்க கலந்துக்கிட்டப்போ நடந்தது.
அவங்ககூட இருந்த ஹவுஸ் மேட்ஸ், அந்த நடிகையோட நிறத்தை வைத்து கேலி, கிண்டல் செய்ய, அந்த நடிகை அழ, உலக அளவில் பல முன்னணி மீடியாக்கள் அதை பேசுபெருளாக்க... ஓவர் நைட்டில் உலகமே அந்த நடிகையைப்பற்றி பேச ஆரம்பிச்சிது. 'அட... நம்ம பிரபுதேவா கூட 'மிஸ்டர் ரோமியோ'வுல சூப்பரா டான்ஸ் ஆடின ஷில்பா ஷெட்டிதானே இந்த நடிகை'ன்னு தமிழ் ஆடியன்ஸும் பிக் பிரதர் ஷோவைப்பற்றி பேச ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம், ஷில்பா நின்னா, நடந்தா, ஜிம்முக்குப் போனா எல்லாமே பரபர நியூஸாச்சு. ஸ்வச் பாரத்ல ஆரம்பிச்சு ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் டீமோ ஓனர்ங்கிற வரைக்கும் ஷில்பாவோட வளர்ச்சியை இந்தியாவே பார்த்துச்சு.
இந்தக் கதையெல்லாம் இப்போ எதுக்குன்னு கேட்டீங்கன்னா, நம்ம பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கு முன்னோடி இந்த பிக் பிரதர் தான் அப்படிங்கிற சின்ன நினைவூட்டல். அப்புறம், இந்த ரியாலிட்டி ஷோ, அதுல கலந்துக்கிட்டவங்களோட வாழ்க்கையை எந்தளவுக்கு மாத்திப்போடும் அப்படிங்கிறதை சொல்றதுக்காகவும்தான்.
2008-ல இந்தி மொழியில பிக் பாஸ் இந்தியாவுக்குள்ள காலடி எடுத்து வெச்சது. தமிழ்ல 2017-ல். சினிமாவுல பெரிய கதாநாயகியா ஜொலிக்காத நடிகை ஓவியாவை இன்னிக்கு வரைக்கும் பலரும் ஆர்மி ஆரம்பிச்சுக் கொண்டாடிக்கிட்டிருக்கிறதுக்கு காரணம் பிக் பாஸ்தான். ரைசா, சாக்ஷி அகர்வால், தர்ஷன், கவின் மாதிரி இளைஞர்களுக்கு சினிமா கதவுகளைத் திறந்துவிட்டது பிக்பாஸ் தான். தன்னம்பிக்கைப் பேச்சாளர், இயற்கை விவசாயம், சின்னத்திரைன்னு இப்போ தூள் கிளப்பிக்கிட்டிருக்கார் நடிகர் ஆரி.
மேடை நாடக நடிகர் தாமரைச்செல்வியின் வாழ்க்கையை மாத்தி அமைச்சது, அமீர்-பாவனி நடுவுல அழகான காதல் உருவாக காரணமா இருந்தது, கிளாமர் நடிகைன்னு முத்திரைக் குத்தப்பட்ட நடிகை விசித்ராவை 'விச்சு மம்மீ'ன்னு நெட்டிசன்ஸை கூப்பிட வெச்சதுன்னு பிக் பாஸால் நடந்த பாசிட்டிவ் விஷயங்கள் இன்னும் எக்கச்சக்கம் இருக்கு. ஸோ, பலரும் பிக் பாஸுக்குள்ள போக விரும்ப, கோடிக்கணக்கான பேர் அத பார்க்கிறதுக்கு வெயிட்டிங்.
திரையில பார்க்கிற ஹீரோ, ஹீரோயின் கேரக்டர்ல தன்னையே பார்க்கிறதுதான் மனித உளவியல். பெரும்பான்மை மனுஷங்க வாழ விரும்புற ஒரு கேரக்டர்ல ஒரு ஹீரோவோ, அல்லது ஒரு ஹீரோயினோ நடிக்கிறப்போ பெரும்பாலும் அந்தப்படமோ, இல்ல சீரியலோ பெரியளவுல வெற்றியடையும். இது பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கும் பொருந்தும். உதாரணத்துக்கு ஓவியாவை எடுத்துப்போம். 'ஓவியா' இடத்துல தன்னைப் பொருத்திக்கிட்டவங்க, அவங்களுக்கு பிக் பாஸுக்குள்ள சக ஹவுஸ்மேட்ஸால நடந்த பிரச்னைகளை தங்களுக்கே நடந்ததா நினைச்சாங்க. ஓவியாவுக்கு பிரச்னை செஞ்சவங்களை தங்களுக்கே பிரச்னை செஞ்சவங்களா நினைச்சாங்க. இந்த மாதிரி இடங்கள்ல, பிக் பாஸ் மேடையில ஒரு நடுநிலைமையாளரா நின்னே ஆக வேண்டிய விஜய் சேதுபதி, அதே நேரம் பொதுவெளியில மக்களோட விருப்பு, வெறுப்பு என்னன்னும் தெளிவா தெரிஞ்சிக்கணும்.
சோஷியல் மீடியா பெருகிட்ட இந்தக் காலத்துல, இது என்ன பெரிய விஷயமான்னு தோணலாம். ஆனா, இது கெஸ் பண்ண கொஞ்சம் கடினமான விஷயமே. உதாரணத்துக்கு, மறுபடியும் ஓவியாவையே எடுத்துப்போம். ஓட்டுப்போட்டு ஆரவை ஜெயிக்க வைச்சவங்க, இப்போ வரைக்கும் டார்லிங்கா கொண்டாடிக்கிட்டு இருக்கிறது ஓவியாவைத்தான். ஜெயிச்ச ஆரவை மக்கள் ஏன் கொண்டாடல. அப்படிங்கிற கேள்விக்குள்ள ஒளிஞ்சிருக்கு மக்களோட உளவியல் ரகசியம். மக்களைப் பொறுத்தவரைக்கும் நியாயமானதையும் செய்யணும்; அவங்களுக்குப் பிடிச்சதையும் செய்யணும். மனசுக்குப் பட்டத வெளிப்படையா பேசணும். இது ரெண்டும் சேர்ற அந்தப் புள்ளியை நீங்க கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, இந்த பிக் பாஸ் சீசனோட நிஜமான வின்னர் நீங்கதான் வி.ஜே.
நேத்து வெளியான புரோமோ, கிட்டத்தட்ட மேல சொன்ன விஷயங்களைத்தான் பிரதிபலிச்சிருந்தது. அதுல வந்த வசனங்களை, பொதுமக்கள் சார்பா மொழிப்பெயர்த்தா எப்படியிருக்கும் தெரியுமா?
'கார் வலம் போனா போதாது. ஊர்வலம் போகணும்'கிறதுக்கு அர்த்தம், பிக் பாஸ் பார்க்கிற எல்லாரோட கருத்தையும் கேளுங்க. ஓட்டுப்போடறவங்களோட ஓப்பீனியன் மட்டுமே பத்தாதுங்கிறதுதான். 'குரூப்பிஸம் பண்றவங்கள, டாமினேட் பண்றவங்கள சும்மா ஓட விடணும்'கிறதுக்கு, தப்புப் பண்றவங்களை விரல் நீட்டி நேரடியா, கோபமா கண்டியுங்க.
அப்போ தான் பார்க்கிற எங்களுக்கு மனசுக்கு ஆறுதலா இருக்கும்னு அர்த்தம். 'வாழைக்கா பஜ்ஜி மாதிரி வழவழன்னு இருக்காம மிளகாய் பஜ்ஜி மாதிரி சுருக்குன்னு கேட்கணும்'கிறதுக்கும் இதே அர்த்தம்தான். 'காய்கறிகள்ல நல்லது எது, கெட்டது எதுன்னு பார்த்தாலே தெரியும். ஆனா, மனுஷங்கள்ல' அப்படிங்கிறதுக்கு, கன்டஸ்ட்டன்ட் உங்க கிட்ட காட்ற பவ்யத்தை நம்பிடாதீங்க வி.ஜே.ன்னு அர்த்தம். 'இளகின மனசு ஷோவுல வேண்டாம்'கிறதுக்கு, பிக் பாஸ்ங்கிறது ஒரு கேம்னு நாங்க 7 முறை தெரிஞ்சுக்கிட்டோம். நீங்க உணர்ச்சிவசப்பட்டா கண்ணுக்கு உண்மை தெரியாம போயிடும்னு அர்த்தம்.
கோடிக்கணக்கான பேர் பார்த்துக்கொண்டிருக்கிற பிக் பாஸ் ஷோவுல, நீங்க தன்னையறியாம மயிரிழை அளவு நியாயத்துல இருந்து விலகினாலும், ஆயிரக்கணக்கான தீர்ப்புகள் சோஷியல் மீடியாவுல எழுதப்படும். பூதங்களாலகூட ஒரு மயிரிழையை ஆயிரக்கணக்கா கிழிக்க முடியாதுன்னு சின்ன வயசுல ஒரு கதை படிச்சிருப்போம். ஆனா, சோஷியல் மீடியாவால அதையும் இன்னிக்கு செய்ய முடியும் வி.ஜே.
கடைசியா ஒரு விஷயம்.
அப்பா ரகுராம் மாஸ்டர் தனக்கு நெருங்கிய நண்பர் என்றாலும், காயத்ரி ரகுராம் சொன்ன ‘சேரி பிஹேவியர்’ங்கிற வார்த்தையை முகதாட்சண்யம் பார்க்காம கண்டித்தவர் கமல்.
'சின்ன வயசுல பஸ்ஸுல பொண்ணுங்கள உரசியிருக்கேன்'னு சொன்ன நடிகர் சரவணனை, அந்தவொரு வார்த்தைக்காகவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினவர் கமல்.
ஷூட்டிங்கில் தனக்கு நடந்த பிரச்னையை நடிகை விசித்ரா பிக் பாஸ் ஷோவில் வெளிப்படையாக சொல்ல, அதை வெறும் ஒரு நிகழ்ச்சியாக மட்டும் கடந்துவிடாமல், விசித்ராவின் கணவரை பர்சனலாக போனில் பாராட்டியவர் கமல்.
கடந்த 7 சீசன்களில், கமல் குறித்து இப்படி எத்தனை எத்தனையோ தகவல்களை இங்கே பகிர முடியும். அவை அத்தனையும் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
கமல் மாதிரி ஒரு லெஜண்ட் தொகுத்து வழங்கின நிகழ்ச்சியை, 'நான் செய்றேன்'னு முன்வந்த உங்க தன்னம்பிக்கைக்கு வாழ்த்துகள். அதே நேரம், பள்ளிக்கூட தலைமையாசிரியர் எடுக்க வேண்டிய வகுப்பை ஒரு கிளாஸ் லீடர் எடுக்கிற சூழல்லதான் நீங்க இருக்கீங்க. சிலர் இத அட்வான்டேஜா எடுத்துட்டு, சளசளன்னு பேசி வகுப்பை நடக்க விடாம தடுக்கலாம். சிலர், 'எங்க அண்ணன்'னு உங்க மென் பக்கத்தை மிஸ் யூஸ் செய்யலாம். 'அவரைவிட நான்தான் சீனியர்'னு சிலர் வகுப்பையே கவனிக்காம இருக்கலாம். உங்க வலது பக்கம் இருக்கிற மாணவனை நீங்க கவனிக்கிற நேரத்துல இடதுபக்கம் இருக்கிற மாணவன் ஏதோவொரு சேட்டை செய்வான். கண்ணிமைக்கிற நொடியில இது உங்க கண்ல தப்பலாம். ஆனா, இதுக்காகவே கண் விழிச்சுப் பார்த்துட்டிருக்கிற மக்களோட பார்வையில இருந்து தப்பிக்கவே முடியாது. இந்த முறை 'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாதுங்கிறது பிக் பாஸ் உள்ள இருக்கிறவங்களுக்கு மட்டுமல்ல, உங்களோட வெளிப்படைத்தன்மைக்கும் சேர்த்துதான். மற்றபடி, நிறைய நிறைய வாழ்த்துகள் வி.ஜே.
விஜய் சேதுபதிக்கு பிக் பாஸ் தொடர்பா நீங்க ஏதாவது அட்வைஸ் சொல்லணும்னா என்ன சொல்லுவீங்க கமென்ட் பண்ணுங்க!