பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் கோவை தொழில்துறை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில் அமைப்பினர், ஜிஎஸ்டி மற்றும் தொழில் பிரச்னைகள் தொடர்பாக அமைச்சரிடம் மனுக்களை அளித்தனர்.
அப்போது கோவையின் பிரபல அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசும் போது, ``உங்கள் அருகில் உள்ள எம்எல்ஏ வானதி எங்களின் ரெகுலர் கஸ்டமர். வரும்போது எல்லாம் சண்டை போடுகிறார்.
காரணம் இனிப்பு வகை உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி நிர்ணயித்துள்ளீர்கள். கார வகை உணவுகளுக்கு 12 % ஜிஎஸ்டி நிர்ணயித்துள்ளீர்கள். பேக்கரி உணவுகளில் பன், ரொட்டி தவிர மற்ற உணவுகளுக்கு 28% ஜிஎஸ்டி உள்ளது.
ஒரே பில்லில், ஒரு குடும்பத்துக்கு வித்தியாசமான ஜிஎஸ்டி போடுவதற்கு கஷ்டமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. பன்னுக்குள் க்ரீம் வைத்தால், அது 18% ஜிஎஸ்டி ஆகிவிடுகிறது.
அதனால் வாடிக்கையாளர்கள், ‘நீ கிரீமையும், ஜாமையும் கொண்டு வா.. நானே வைச்சுக்கிறேன்.’ என்று சொல்கின்றனர். கடை நடத்த முடியவில்லை. அதனால எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான வரியை அமல்படுத்துங்கள்.” என்று அவர் பேசும்போது மொத்த அரங்கமும் சிரித்தது.
அவர் தொடர்ந்து பேசுகையில், “எம்எல்ஏ தான் இதையெல்லாம் செய்கிறார். அவர் எங்கள் தொகுதியில் உள்ளார். வடநாட்டில் அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் 5% ஜிஎஸ்டியும், காரத்திற்கு 12% ஜிஎஸ்டியும் நிர்ணயித்துள்ளதாக கூறுகிறார்.
தமிழகத்தில் ஸ்வீட், காரம், காப்பி என்ற அடிப்படையில் தான் விற்பனையாகும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான வரி இருப்பதால் கம்ப்யூட்டரே திணறுகிறது. அதேபோல ஹோட்டலுக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும் திணறுகிறார்கள்.
ஹோட்டல்களில் தங்குவதற்கு கூட்டம் அதிகம் இருக்கும் போதும், கூட்டம் குறைவாக இருக்கும்போதும் ஒரே வரி தொகை நிர்ணயிக்கப்படுகிறது. சீசன் காலகட்டத்தில் தொகை அதிகமாக இருக்கும். மற்ற நாள்களில் அந்த தொகை இருக்காது. அதற்கு இந்த முறையில் வரி நிர்ணயிப்பது நியாயம் இல்லை. எனவே, எங்களின் கோரிக்கையை பரிசீலினை செய்யுங்கள்.” என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “நாங்கள் மாநிலம் வாரியாக எல்லாம் வரி நிர்ணயிக்கவில்லை. ஜிஎஸ்டி மற்றும் தொழில் துறை தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று விளக்கம் அளித்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.