`உங்களுடைய கனவுகள்தான் உங்களுடைய தனித்தன்மையைத் தீர்மானிக்கும். உங்களுக்கு சிறகுகள் தந்து, உங்களை உயரே பறக்கவைக்கும் ஆற்றல் அவற்றுக்கு உண்டு.’ - இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து.
வரலாற்றில், `உலகின் முதல் பெண் திரைப்பட இயக்குநர்’ என்று குறிப்பிடப்படுபவர், ஆலிஸ் கி பிளாஷே (Alice Guy Blache). உலக சினிமாவின் முன்னோடிகளில் ஒருவர் அவர் என்று அடித்துச் சொல்லலாம். அந்த இடத்தை அவ்வளவு சுலபமாக அவர் அடைந்துவிடவில்லை. எல்லாத் துறைகளிலும் ஆண்களே முன்னிறுத்தப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. அந்தக் காலத்திலேயே தன் முயற்சியால், தனித்துவத்தால், பேரார்வத்தால் திரைத்துறைக்குள் நுழைந்து தான் யார் என்பதையும் நிரூபித்துக் காட்டியவர் ஆலிஸ்.
லியோ கௌமான்ட் செக்ரட்டரி
1911-ல் `தி மூவிங் பிக்சர் நியூஸ்’ என்ற ஆங்கிலப் பத்திரிகை இப்படிக் குறிப்பிட்டது... `வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் ஆலிஸ் கி பிளாஷே!’ இந்த செய்தி வெளியானபோது, ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை அமெரிக்காவில் ஆரம்பித்திருந்தார் ஆலிஸ். ஒரு ஸ்டூடியோவையும் கட்டிக்கொண்டிருந்தார். சினிமாவின் மேல் அவருக்குப் பெருங்காதல். `சினிமாதான் என்னை மீட்க வந்த இளவரசன்’ (Prince Charming) என்று குறிப்பிடுவார் ஆலிஸ். அது முழுநீளத் திரைப்படங்கள் வராத காலம். குட்டிக் குட்டிப் படங்கள்தான் வெளிவந்துகொண்டிருந்தன. பெரும்பாலும் அன்றாட நிகழ்வுகளே படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தன. ஸ்டேஷனில் ஒரு ரயில் வந்து நிற்பது; அதிலிருந்து பயணிகள் இறங்கிச் செல்வது... ஒரு ஃபேக்டரியிலிருந்து தொழிலாளர்கள் வேலை முடிந்து வெளியே வருவது... இவைதான் முதன்முதலில் வெளிவந்த திரைப்படக் காட்சிகளாக இருந்தன. அப்போது ஆலிஸ், பாரிஸில் லியோ கௌமான்ட் (Leon Gaumont) என்பவரின் செக்ரட்டரியாக இருந்தார். குடும்பப் பொருளாதாரத்துக்கு உதவுவதற்காக டைப்ரைட்டிங்கும், ஸ்டெனோகிராபியும் கற்றுக்கொண்டு ஒரு செக்ரட்டரியாகியிருந்தார்.
ஆனாலும் அவருக்கு புதுமையாக, குறிப்பாகக் கலைத்துறையில் எதையாவது செய்ய வேண்டும் என்கிற தீராத வேட்கை உள்ளுக்குள் சிறு கனல்போலக் கனன்றுகொண்டேயிருந்தது. அவருக்கு வயது 20-ஐ தாண்டியிருந்தது. கௌமான்ட் ஓர் ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர். பல விஞ்ஞானிகளின் முன்மாதிரிகளைக்கொண்டு மோஷன் பிக்சர்ஸுக்கான கேமராக்களைத் தயாரிக்க ஆரம்பித்திருந்தார். அந்த கேமராக்களின் செயல்பாட்டை வாடிக்கையாளர்களுக்கு விவரித்துக் காட்ட வேண்டும். அதற்கு சில உதாரணப் படங்கள் வேண்டும். அவற்றைத் தயாரித்துக்கொண்டிருந்தார் கௌமான்ட். படங்களில் மனிதர்கள் வந்தார்கள், போனார்கள். அருவியில் குளித்தார்கள். நடந்து போனார்கள். சைக்கிளில் போனார்கள். குதிரையில் ஏறி, சிட்டாகப் பறந்தார்கள். இதெல்லாம்தான் காட்சிகளாகியிருந்தனவே தவிர, உயிர் இல்லை.
முதல் முயற்சி
`புதிதாக ஏதாவது செய்யலாமே... நம் கற்பனையையெல்லாம் கூட்டி அற்புதமாக ஒரு சின்னப் படம் எடுக்கலாமே...’ என்று தோன்றியது ஆலிஸுக்கு. கௌமான்ட்டிடம் வந்தார். தன் விருப்பத்தைச் சொன்னார். ``ரொம்ப முட்டாள்தனமா இருக்கு... ஒரு பெண்ணாவது, படம் எடுக்கறதாவது?’’ என்று ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டைபோட்டார் கௌமான்ட். ஆலிஸ் விடவில்லை. திரும்பத் திரும்ப வற்புறுத்தினார், வலியுறுத்தினார். இறங்கி வந்தார் கௌமான்ட். ``சரி, உனக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சுன்னா முயற்சி செஞ்சு பாரு. ஒரு கண்டிஷன்... அதனால ஆபீஸ் வேலை எதுவும் பாதிக்கக் கூடாது...’’
`ஒரு மனிதனுக்குத் தன் தனித்துவமான திறமைமீது நம்பிக்கை இல்லாவிட்டால், அவனால் எதற்கும் நம்பிக்கைக்குரியவனாக இருக்க முடியாது.’ - எழுத்தாளர் கிளாடு மெக்கே (Claude McKay).
The Cabbage Fairy
`அலுவலக நேரம் தவிர்த்து, படம் எடுக்க வேண்டும். பாஸ் ஒப்புதல் கொடுத்துவிட்டார். அது போதும். என்ன செய்யலாம்...’ சீரியஸாக யோசித்தார் ஆலிஸ். வீட்டில் சதா அதே சிந்தனை. ஒரு சின்ன கற்பனை அவருக்குள் கிளர்ந்தெழுந்தது. அதற்கு எழுத்தால் ஒரு வடிவம் கொடுத்தார். அதை எப்படிச் செய்யலாம் என்று மனதுக்குள்ளாகவே ஓர் ஒத்திகை பார்த்தார். ஒரு விடுமுறை நாளில், கேமராமேன், லைட்மேன்கள், நடிகை, நடிகர்கள் புடைசூழ ஷூட்டிங்குக்குப் புறப்பட்டார். 1896-ல் அவர் எடுத்த முதல் படம் அது. பிரெஞ்ச் மொழியில் அவர் எடுத்த அந்தப் படத்துக்கு ஆங்கிலத்தில் `The Cabbage Fairy' என்று பெயர். ஓர் இளம்பெண். அவள் ஒரு மலர் மாலையை அணிந்திருக்கிறாள். அவளைச் சுற்றி முளைத்திருக்கும் முட்டைக்கோஸ்களின் அடியிலிருந்து, அப்போதுதான் பிறந்திருந்த குழந்தைகளை எடுப்பது போன்ற காட்சி. கூடவே அந்தப் பெண்ணின் நடனம் போன்ற அசைவு வேறு. படம் பார்வையாளர்களைத் தீயாகப் பற்றிக்கொண்டது. கொஞ்சமும் தாமதிக்கவிலை கௌமான்ட். தன் நிறுவனத்தில் திரைப்படம் தயாரிக்கும் தலைமைப் பொறுப்பில் ஆலிஸை நியமித்தார். அங்கே நூற்றுக்கணக்கான சிறு படங்களுக்கு ஆலிஸ்தான் மேற்பார்வையாளர். சில படங்களுக்கு இயக்குநர். காஸ்ட்யூம் டிசைனராகக்கூட பணிபுரிந்திருக்கிறார். சினிமா பற்றிய முழுமையான பிரக்ஞை இல்லாத அந்த நாள்களில் அவரின் பணி மகத்துவமானது.
திருமண வாழ்க்கை
1873-ல் பாரிஸில் பிறந்தார் ஆலிஸ். அவருடைய முழுப்பெயர், ஆலிஸ் இடா ஆன்டோய்னெட்டே கி (Alice Ida Antoinette Guy). அப்பாவும் அம்மாவும் தென் அமெரிக்காவில், சிலியில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அப்பா, ஒரு புத்தக விற்பனையாளர். குழந்தை ஆலிஸ், பாட்டியிடம் வளர்வதும், அம்மா அப்பாவிடம் போவதுமாக ஒரு பந்துபோல அலைக்கழிந்துகொண்டிருந்தார். அந்த நினைவெல்லாம், அவரிடம் கதைகளாகப் பொதிந்திருந்தன. 1907-ல் தன்னுடன் பணிபுரிந்த ஹெர்பர்ட் பிளாஷேவைத் (Herbert Blaché) திருமணம் செய்துகொண்டார் ஆலிஸ். கௌமான்ட் நிறுவனத்தில் தான் பொறுப்பேற்றிருந்த தலைமைப் பதவியை ராஜினாமா செய்தார். தன் கணவருடன் அமெரிக்காவுக்குப் போனார். ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து, தன்னுடைய சொந்தப் பட நிறுவனமான `சோலாக்ஸ்’-ஐ தொடங்கினார். எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பது ஆலிஸின் பழக்கம். அதையெல்லாம் அப்படியே உள்வாங்கிக்கொண்டு, தான் எடுக்கும் திரைப்படங்களில் அப்படியே பிரதிபலிப்பார். அவருக்கு எதுவும் இயற்கையாக, யதார்த்தமாக இருக்க வேண்டும். 1912-ல் ஓர் ஆண் குழந்தைக்குத் தாயானார். தன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக, `டூ லிட்டில் ரேஞ்சர்ஸ்’ போன்ற கௌபாய் படமெல்லாம் எடுத்திருக்கிறார் ஆலிஸ்.
`நான் தனித்திறமையை நம்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் சிறப்பு வாய்ந்தவர். தங்களுடைய தனித்திறமையைக் கண்டுபிடித்து, அதைக்கொண்டு வாழ்வது அவரவர் கையில்தான் இருக்கிறது.’ - அமெரிக்கப் பாடகர், பாடலாசிரியர் கிரேஸ் ஜோன்ஸ்.
தன் படங்களில் பெண்களையே முன்னிலைப்படுத்தினார் ஆலிஸ். படத் தயாரிப்பில் அவர் கில்லி. யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கதைக்களம், புதுமை... என அசத்திக்கொண்டிருந்தார். அவர் எடுத்த படங்கள் பார்வையாளர்களிடம் வரவேற்பையும் பெற்றுக்கொண்டிருந்தன. ஆரம்பத்தில் அவருடைய கணவர் ஹெர்பர்ட் பிளாஷேவும் அவருக்குத் தன் ஒத்துழைப்பைக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அவருக்கு நெருக்கடிகள் அதிகமாகின. உடல் ஒத்துழைக்கவில்லை. பொருளாதாரப் பிரச்னைகள். மண வாழ்க்கையில் முறிவு. தொடர்ந்து சினிமா துறையில் ஏற்பட்ட சரிவு. கடன் சுமை. அவருடைய சோலாக்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் ஏலத்துக்கு வந்து நின்றது.
சோதனை மிகுந்த இறுதிக்காலம்
கணவரிடம் விவாகரத்து வாங்கிக்கொண்டு, தன் இரு குழந்தைகளுடன் பிரான்ஸுக்குத் திரும்பினார் ஆலிஸ். பிரான்ஸில் சினிமா வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. உலகப் போர் காரணமா... ஆணாதிக்கம் திரைத்துறையில் கோலோச்சியது காரணமா என்பது தெரியவில்லை. ஆலிஸின் வளர்ச்சி அப்படியே நின்றுபோனது. சினிமா மிகப்பெரும் வணிகமாக உருவெடுத்திருந்த காலம் அது. ஆனால், ஒரு பெண்ணாக ஆலிஸால் அதில் ஒன்ற முடியவேயில்லை. ஒருகட்டத்தில் தன்னிடமிருந்த புத்தகங்களையும், ஓவியங்களையும், பண்ட பாத்திரங்களையும் விற்றுப் பிழைக்கவேண்டிய நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டார் ஆலிஸ்.
பத்திரிகைகளில் கட்டுரைகளும், சிறுவர் கதைகளையும் எழுதி, அதில் கிடைத்த சன்மானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். தன் நினைவுகளை ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார் ஆலிஸ். இன்றைக்கும் அவர் எடுத்த பல படங்களில் அவருடைய பெயர் காணக் கிடைக்காது. தன் முயற்சியை விடாமல், தொடர்ந்து பல பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார் ஆலிஸ். அதற்கு சில அங்கீகாரங்களும் கிடைத்தன. உலக சினிமா முன்னோடிகளில் அவரும் ஒருவர் என்பதைச் சில பத்திரிகைகள் அழுத்தம் திருத்தமாக எழுத ஆரம்பித்திருந்தன. 1968-ல் அவர் இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 94. 2012-ம் ஆண்டுதான், ஃபோர்ட் லீ ஃபிலிம் கமிஷன் என்ற அமைப்பு, அவருடைய கல்லறையில், ஒரு கல்வெட்டைச் செதுக்கிவைத்து மரியாதை செய்தது. அதில் அவர் பிறந்த தேதி, இறந்த தேதி எல்லாம் இடம் பெற்றிருந்தன. திரைத்துறையில் ஆலிஸின் வரலாறு அத்தனை எளிதாக இடது கையால் புறம் தள்ளிவிடக் கூடியதல்ல.
சினிமா இருக்கும் வரை ஆலிஸின் பெயரும் நிலைத்து நிற்கும். தன் வாழ்க்கையைப் பற்றி எழுதும்போது ஆலிஸ் கி பிளாஷே இப்படிக் குறிப்பிடுகிறார்... `என் வாழ்க்கை தோல்வியா, வெற்றியா... எனக்குத் தெரியவில்லை.’ நம்மிடமும் இதற்கு பதில் இல்லை!