`அன்பே சிவம்'. 'நாம் இருவர் நமக்கு இருவர்' உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்தவர் சீரியல் நடிகை தீபா. ஆரம்பத்தில் துணை நடிகையாக இருந்து படிப்படியாக சீரியல் உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.
அதேபோல் அனைத்து முன்னணி சேனல்களிலும் இவர் நடித்த சீரியல்கள் ஒளிபரப்பாகியுள்ளன. விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிற 'ஆடுகளம்' தொடரிலும் நடித்து வருகிறார். சமீபத்திய சில மாதங்களுக்கு முன் குடும்பப் பிரச்னைகளுக்காக மீடியாவில் இவரது பெயர் அடிபட்டது நினைவிருக்கலாம். வரும் வியாழக்கிழமை அதாவது செப்டம்பர் ஐந்தாம் தேதி திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள ஏலூர்பட்டி என்கிற கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காசி விசுவநாதர் கோவில் கும்ப்பாபிஷேகத்தில் கலந்து கொள்கிறார் இவர்.
இந்தப் புதிய கோவில் எழும்பியதன் பின்னணியில் தீபாவின் பங்கும் முக்கியமானதாம். தீபாவிடமே பேசினோம்.
''அடிப்படையில் நான் முருக பக்தை. முருகனைப் பார்க்கணும் போல இருந்தா உடனே அறுபடை வீடுகளுக்கோ அல்லது முருகன் குடியிருக்கிற வேறு தலங்களுக்கோ கிளம்பிப் போயிடுவேன். அதேபோல ஏதாவது சிக்கல், கஷ்டம்னு சூழ்ந்தாலும் அவன் காலடிக்குப் போயிடுவேன். அங்க ரெண்டு மூணு நாள் தங்கியிருந்துட்டு வந்துட்டாலே பாதிப் பிரச்னை தீர்ந்திடும். இதை என் அனுபவப் பூர்வமா உணர்ந்திருக்கேன்.
இந்தச் சூழல்ல ஒரு நாள் மாங்காடு காமாட்சி கோயிலுக்குப் போயிருந்தேன். அங்க பாத்தீங்கன்னா முருகனுடைய நாமமான சுப்ரமணிங்கிற பேர்ல ஒரு சாமியாரைச் சந்திச்சேன். அவர்தான் தொட்டியம் பக்கத்துல காசி விசுவநாதர் கோயில் எழும்பிட்டு வர்றது பத்தி எனக்குச் சொன்னார். காசி விசுவநாதர் ஆலயம்னாலும் உள்ளேயே முருகன் விநாயகர்னு தனித்தனி சன்னதிகளும் அமைய இருக்குனு சொன்னார்.
அவரைப் பார்த்துட்டு வந்த சில நாட்கள்ல என கனவுலயும் ஒரு குரல் வந்து 'முருகனுக்கு கோவில் எழுப்ப நீ அங்க போ'னு சொல்லுச்சு. எனக்கென்னவோ முருகனேதான் என் கனவுல வந்து சொன்ன மாதிரி தோணுச்சு. அவ்ளோதான், அடுத்த நாளே அந்த ஊருக்குக் கிளம்பிப் போயிட்டேன்.
என்னதான் முயற்சிகளை தனி நபர்கள் எடுத்தாலும் கோவில் எழுப்பறதுன்னா சும்மாவா? ஊர்கூடித்தானே தேர் இழுக்கணும்? அதனால அந்த ஊர் மக்கள் சாமியாருக்குத் தெரிஞ்சவங்க எனக்குத் தெரிஞ்சவங்கன்னு எல்லாரும் கை கோர்த்தோம். வேலைகள் எல்லாம் நல்லபடியா முடிஞ்சு இதோ கும்பாபிஷேகம் வந்திடுச்சு.
என் நண்பர்கள் வட்டாரத்துல நடிகைகள் 'மெட்டி ஒலி' வனஜா, கம்பம் மீனா, மின்னல் தீபா, நடிகர் அழகப்பன் ஆகியோருக்கு இந்தக் கோயில் எழும்பியதுல முக்கியப் பங்கிருக்கு. கோயில் குறித்து நான் சொன்னதுமே அவ்வளவு ஆர்வமா எங்கூட தங்களையும் இந்தப் பணியில இணைச்சுக்கிட்டாங்க இவங்க'' என்கிறார் தீபா.