'96' திரைப்படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'மெய்யழகன்'.
இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் பிரேம் குமாரின் '96' திரைப்படம் குறித்தும் 'மெய்யழகன்' படம் குறித்தும் பேசியிருக்கிறார் நடிகர் கார்த்தி.
இதுகுறித்துப் பேசியிருக்கும் நடிகர் கார்த்தி, "இயக்குநர் பிரேம் குமாரின் '96' திரைப்படம் நம் அனைவரையும் மிகவும் கவர்ந்து, மனதில் நின்ற திரைப்படம். கதை, திரைக்கதை, வசனம், பின்னணி இசை, பாடல்கள், நடிப்பு என அனைத்துமே சிறப்பாக அமைந்த திரைப்படம். படத்தின் வசனத்தில் ஒரு வார்த்தையை மாற்றிப் போட்டிருந்தாலும் படம் வேறுமாதிரியாகியிருக்கும். ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கும். நுணுக்கமாகப் பார்த்துப் பார்த்து அந்தப் படத்தை இயக்கியவர் பிரேம் குமார். அந்தப் படத்தை அவ்வளவு ரசித்திருக்கிறேன் நான்.
ஒருநாள் 'ஜெய்பீம்' பட இருக்குநர் த.செ.ஞானவேல் என்னிடம், ''96' படத்தை எடுத்த பிரேம் குமார் அற்புதமான ஒரு கதையை வைத்துக்கொண்டு உங்களைத் தொடர்புகொள்ளத் தயங்குகிறார்" என்றார். எனக்காக எழுதியக் கதை அது. அதை விட்டுவிடக் கூடாது என்று நானே அவரை அழைத்து கதையைக் கேட்டேன். '96' படத்திற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் பிரேம் எந்தப் படமும் இயக்கவில்லை. பணம், புகழ் பின்னாடி ஓடுபவரல்ல பிரேம். கலைக்குப் பின்னால் ஓடுபவர். அவர் கொடுத்த கதையைப் படிக்கும்போது 6 இடங்களில் என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
பொங்கல், தீபாவளி விடுமுறை என்றால் சென்னையில் இருப்பவர்கள் அவரவர் ஊருக்குப் பறந்து செல்கிறார்கள். ஏனென்றால் சொந்த ஊர், கிராமம் என்றால் எல்லோருக்கும் அவ்வளவு பிடிக்கும். நானும் சிறுவயதில் விடுமுறை என்றால் சொந்த ஊருக்குச் சென்றுவிடுவேன். எனக்கும் சொந்த கிராமம் என்றால் அவ்வளவு பிடிக்கும். அப்படி நம் சொந்த ஊர், கிராமத்திற்குச் சென்று வரும் அற்புதமான அனுபவத்தைத்தான் இந்தப் படம் உங்களுக்குக் கொடுக்கும். '96' படம் எவ்வளவு ஸ்பெஷலானதோ, இந்தப் படமும் அவ்வளவு ஸ்பெஷலாக இருக்கும்" என்று மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU