Doctor Vikatan: மலச்சிக்கலும் மனச்சிக்கலும் இல்லாத மனிதன்தான் ஆரோக்கியமானவன் என என் அப்பா அடிக்கடி சொல்வார். மலச்சிக்கல் இருந்தால் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும் என்பார். சமீபத்தில் நான் கேள்விப்பட்ட தகவல் என் அப்பா சொன்னதை உண்மையாக்கும் வகையில் இருந்தது. மலச்சிக்கல் பிரச்னை மாரடைப்பு ஏற்படவும் காரணமாகலாம் என்று ஒரு செய்தி படித்தேன். அது எந்த அளவுக்கு உண்மை.... மலச்சிக்கலுக்கும் மாரடைப்புக்கும் என்ன சம்பந்தம்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
உங்கள் அப்பா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. மலச்சிக்கல் இல்லாத வாழ்க்கை ஆரோக்கியத்துக்கு அவசியம். மலச்சிக்கலுக்கும் மாரடைப்புக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. அது பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன் மலச்சிக்கல் என்பதற்கான விளக்கத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
மூன்று நாள்களுக்கொரு முறை மலம் கழித்தாலோ, வாரத்துக்கு மூன்று வேளைகள் அல்லது அதற்கும் குறைவாக மலம் கழித்தாலோ, ஒருவருக்கு மலச்சிக்கல் பாதிப்பு இருப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டுதான் மலம் கழிப்பார்கள். அப்படி சிரமப்படும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, இதயநலனும் பாதிக்கப்படும்.
அமெரிக்க பாடகரும் நடிகருமான எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley), கழிவறையில் இருந்தபோதுதான் உயிரிழந்ததாக தகவல்கள் சொல்கின்றன. அதன் பின்னணியில் அவருக்குத் தீவிர மலச்சிக்கல் பிரச்னை இருந்ததாகவும் செய்திக் குறிப்புகள் சொல்கின்றன.
நம்முடைய குடலில் நுண்ணுயிர்கள் (Gut Microbiomes) இருக்கும். அவை ஆரோக்கியமான நுண்ணுயிர்களாக இருக்க வேண்டியது மிக முக்கியம். அப்படி இருந்தால் மலச்சிக்கல் வரும் வாய்ப்புகள் குறைவு.
குடல் நுண்ணுயிர்களுக்கும் மாரடைப்பு ரிஸ்க் அதிகரிப்பதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இது குறித்து நிறைய ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆரோக்கியமற்ற குடல் நுண்ணுயிர்கள் மலச்சிக்கலையும் ஏற்படுத்தி, மாரடைப்பு ரிஸ்க்கையும் அதிகப்படுத்துகின்றன. எனவே, மலச்சிக்கல் பிரச்னையை சாதாரணமானதாக நினைத்து அலட்சியம் செய்யாதீர்கள்.
உங்களுக்கு மலச்சிக்கல் பாதிப்பு இருப்பதாக நினைத்தால் தயங்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுங்கள். வாழ்வியல் மாற்றங்கள், உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள் என எளிய வழிகளின் மூலமே மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து மீள முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.