மணிரத்னத்தின் 'தளபதி'யில் தொடங்கி 'ரோஜா', 'பம்பாய்', 'இந்திரா', 'மின்சார கனவு', 'என் சுவாசக் காற்றே' என பல படங்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் அரவிந்த் சுவாமி.
சமீபத்தில் 'கடல், 'தனி ஒருவன்', 'போகன்', 'செக்கச் சிவந்த வானம்' என வில்லன், கதாநாயகன் என தனது செகண்ட் இன்னிங்ஸில் கலக்கி வருகிறார். தற்போது '96' படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து 'மெய்யழகன்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வெள்ளந்தியான கிராமத்து கதாபாத்திரத்தில் கார்த்தி, டிப் டாப்பாக நகரத்திலிருந்து கிராமம் செல்லும் கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி என இருவரும் கிராமத்துக் கதையில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இதையொட்டி நேற்று இரவு சென்னையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் 'மெய்யழகன்' படம் தன் வாழ்வில் நடந்தக் கதை என்று சஸ்பென்ஸ் வைத்துப் பேசியிருக்கிறார் அரவிந்த் சுவாமி. இதுகுறித்து பேசியிருக்கும் அவர், "ரொம்ப அழகான இந்தக் கதையில் நடிக்கவும், அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் பிரேம் குமாருக்கு நன்றிகள்.
இந்தக் கதையைப் படித்ததும் இது என் வாழ்வில் நடந்த கதை என்று நினைத்தேன். என் வாழ்வில் நடந்த, இன்னும் என்னை பாதித்துக் கொண்டிருக்கும் கதை இது. படம் வெளியானப் பிறகு இதைப் பற்றி நான் விரிவாகப் பேசுகிறேன்.
இந்தப் படத்தில் நான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தேன். கார்த்தியும் நானும் ரொம்ப நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டோம் என்று நம்புகிறேன். என் அண்ணன் கார்த்தி. அந்த அளவிற்கு நாங்கள் இந்தப் படத்தின் மூலம் பழகியிருக்கிறோம். இந்தப் படம் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும் படமாக இருக்கும். என்னைப் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், என்னைப் போல மாப்பிள்ளை வேண்டும் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். என்னைப் பற்றி தெரிந்தால் அவர்கள் அப்படியெல்லாம் சொல்லமாட்டார்கள்" என்று மகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் அரவிந்த் சுவாமி.