காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உரை நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, " கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போல் இனி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது. காங்கிரஸ் ஆட்சியில் 2013-ம் ஆண்டு நிர்பயா சம்பவத்தை பெரிதுப்படுத்தினர்.
பிரதமர் செங்கோட்டையிலே கொடி ஏற்றும் போதெல்லாம் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுகிறார். அதற்கான பாதுகாப்பை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கான பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. நிர்பயா நிதி சரியாக செலவழிக்கப்படவில்லை. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார். முதலமைச்சர் அந்நிய முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வர அமெரிக்கா சென்றுள்ளார். உலக நாடுகள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. தமிழகம்தான் தொழில் செய்வதற்கு உகந்த இடம்.
ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதற்காக முதலமைச்சர் முயற்சித்து வருகிறார். பத்தாண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜயும், ராகுல் காந்தியும் சந்தித்தனர். ஆனால், அப்போது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது பற்றி யாருக்கும் தெரியாது. அவர்களை கேட்டால்தான் தெரியும்" என்றார்.