மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அவமதிக்கப்பட்டதாக நடிகை நமீதா எழுப்பிய புகார் சமீபத்தில் சர்ச்சையை ஏற்டுத்தியது. அதற்கு சில நாள்களுக்கு முன், மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் புகார் எழுப்பியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நாடு முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகரணங்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 6-ஆம் தேதி தரிசனம் செய்ய வந்த தர்மபுரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் செயற்கை கால்களை அகற்ற கூறி காவல்துறையினரும் கோவில் நிர்வாகத்தினரும் கட்டாயப்படுத்தியதாக அப்பெண் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு அது குறித்து காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் மாற்று மதத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை அழைத்துக்கொண்டு அனைத்து வகை மாற்றத்திறனாளிகளும் மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் புஷ்பராஜ் தலைமையில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் இன்று காலை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தனர்.
காவல்துறையினரின் சோதனைக்குப் பிறகு நகரும் இருக்கைகள் மூலம் கோயில் நிர்வாகத்தினர் மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் சென்றனர். அம்மன் சன்னதிக்கு சென்றபோது உடன் வந்த மாற்று மத மாற்றுத்திறனாளிகள் கொடி மரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாற்றத்தினாளிகள் நல வாரிய உறுப்பினர் புஷ்பராஜ், "மாற்றுத்திறனாளிகளான நாங்கள் சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. இன்று எங்களுக்கு செய்த ஏற்பாட்டைப்போல் மற்ற மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்கு வரும்போதும் செய்ய வேண்டும்.
மேலும், அன்னதான கூடத்தில் மாற்றுத்திறனாளிகள் சென்று சாப்பிடுவதற்கு ஏதுவாக சாய்வு தளத்துடன் தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பெண் மாற்றுத்திறனாளிகள் செயற்கை காலுடன் வரும்போது காவல்துறையினர் அதனை அகற்ற கூறும்போது சிரமத்திற்கு ஆளாகுவதால் பெண்மாற்று திறனாளிகள் செயற்கை கால்களை அகற்ற தனி அறை அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளான நாங்கள் மத வேறுபாடு இன்றி தனி இனம் போல வாழ்ந்துவருகிறோம். ஆனால், எங்களோடு கோயிலுக்கு வந்த மாற்று மத சகோதரிகளை ஒரு குறிப்பிட்ட இடத்தோடு நிறுத்தியது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகளை பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும், மற்ற பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகளை மாற்றுத்திறனாளிகளுக்கு விதிக்க கூடாது" என்றார்.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் புஷ்பராஜூடன், தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சொர்க்கம் ராஜா, மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முத்துக்குமார், கூட்டமைப்பின் காப்பாளர் ஸ்டார் குரு, மாவட்ட தலைவர் சுரேஷ்பாண்டியன், மாவட்ட செயலாளர் ராவியத் ஆகியோர் வந்திருந்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88