தமிழக வெற்றிக் கழகம் என்கிற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், சமீபத்தில் தன்னுடைய கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். இரண்டு சிவப்பு பட்டைகளுக்கு நடுவில் மஞ்சள் பட்டை இடம்பெற்றிருக்கும் அந்தக் கொடியில், வாகைப் பூவும், 28 நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. அதோடு, இரண்டு யானைகளும் கொடியில் இடம்பிடித்துள்ளன. அதில்தான் சர்ச்சை வெடித்திருக்கிறது. யானையை தங்கள் கட்சியின் சின்னமாகவும், கட்சிக் கொடியிலும் வைத்திருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி, விஜய் கட்சியின் கொடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
"எங்கள் கட்சியின் சின்னமாகவும், கட்சிக் கொடியிலும் யானையைத்தான் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். எங்களின் அடையாளமாகவும் யானை மாறிவிட்டது. இந்தச் சூழலில், விஜய் கட்சியின் கொடியில் யானை இடம்பெற்றிருப்பது விதிகளை மீறும் செயல். இதனால், வாக்காளர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்கள் நேரிடும். ஆக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்றுள்ள யானையை நீக்க வேண்டும்" என இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழக ஆணையரிடம் மனு அளித்திருக்கிறார்கள் பகுஜன் சமாஜ் கட்சியினர்.
"பகுஜன் சமாஜ் கட்சி அளித்திருக்கும் இந்த மனுவால், த.வெ.க-வுக்கு நெருக்கடி ஏற்படுமா..?", என்கிற கேள்வியுடன் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்கள் சிலரிடம் பேசினோம்.
"ஒரு அரசியல் கட்சியின் பெயர், சின்னத்திற்குத்தான் விதிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வகுத்திருக்கிறதே தவிர, அரசியல் கட்சிகளின் கொடிகளுக்கு தனி விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை. தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமாக யானை இருக்கிறது. அக்கட்சியின் கொடியிலும் யானை இடம்பெற்றிருக்கிறது. 1997-ல் தேசிய கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி அங்கீகாரம் பெற்றபோது, யானை சின்னத்தை அஸ்ஸாமின் அசோம் கன பரிஷத், பாட்டாளி மக்கள் கட்சி, சிக்கிம் சங்கராம் பரிஷத் ஆகிய கட்சிகளும் பயன்படுத்தி வந்தன. தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றவுடன், 'எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை மாநிலக் கட்சிகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது' என தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தது பகுஜன் சமாஜ் கட்சி. அப்போது இந்திய தேர்தல் ஆணையராக இருந்த கிருஷ்ணமூர்த்தி தான் அந்த மனுவை விசாரித்தார்.
யானை சின்னம் தொடர்பாக கலந்துபேச, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு வரச்சொன்னார் கிருஷ்ணமூர்த்தி. பகுஜன் சமாஜ் கட்சியின் கன்ஷிராம், அசோம் கன பரிஷத்தின் அதுல் போரா, சிக்கிம் சங்கராம் பரிஷத்தின் ராம் தாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலித் எழில்மலை ஆகியோர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது, 'பாண்டிச்சேரியில் பா.ம.க-வும், அஸ்ஸாமில் அசோம் கன பரிஷத்தும், சிக்கிமில் சிக்கிம் சங்கராம் பரிஷத்தும் யானைச் சின்னத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற மாநிலங்களில், அந்தச் சின்னம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்படும்' என முடிவெடுக்கப்பட்டது. 1998-ல் மாம்பழ சின்னத்தையே தங்கள் சின்னமாக பா.ம.க பெற்றுக் கொண்டதால், பிற்பாடு அவர்களுக்கு யானை சின்னம் ஒதுக்கப்படவில்லை. இன்றளவும், அஸ்ஸாமில் அசோம் கன பரிஷத் கட்சிக்கும், சிக்கிமில் சிக்கிம் சங்கராம் பரிஷத் கட்சிக்கும் யானை சின்னம்தான் ஒதுக்கப்படுகிறது. தங்கள் கட்சிக் கொடியிலும் யானையைத்தான் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த இரண்டு மாநிலங்களைத் தவிர, மற்ற எல்லா மாநிலங்களிலும் யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சிக்குத்தான் ஒதுக்கப்படுகிறது.
இந்தச் சூழலில்தான், தன்னுடைய கட்சிக் கொடியில் யானையைப் பயன்படுத்தியிருக்கிறார் நடிகர் விஜய். அதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அவர் கொடியில்தான் யானையைப் பயன்படுத்தி இருக்கிறாரே தவிர, அதை தன் கட்சியின் சின்னமாக அவர் கோரவில்லை. உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள சமாஜ்வாதி கட்சியின் சின்னம் சைக்கிள். தங்களுடைய கொடியிலும் அதைத்தான் வைத்திருப்பார்கள். அதே சின்னம்தான், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களுடைய கட்சிக் கொடியில் தெலுங்கு தேசம் கட்சியினரும் சைக்கிள் சின்னத்தைத்தான் வைத்திருக்கிறார்கள்.
தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கும் 'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்ஸிஸ்ட்)'-க்கு, சுத்தியல் அரிவாள் தான் அடையாளமாக விளங்குகிறது. அக்கட்சியின் சின்னமாகவும் ஒற்றை நட்சத்திரத்துடன் சுத்தியல் அரிவாளைத்தான் வைத்திருக்கிறார்கள். அந்த அடையாளத்துடன் ஒரு டஜன் கட்சிகள் இந்தியாவில் முளைத்துவிட்டன. பீஹாரில், மாநிலக் கட்சி அந்தஸ்த்தைப் பெற்றிருக்கும் 'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேஷன்' என்கிற கட்சியின் கொடியிலும் சுத்தியல் அரிவாள்தான் இடம்பெற்றுள்ளது. அந்த அடையாளத்துடன், 2020 பீஹார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அவர்கள் 12 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றுள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், இரண்டு எம்.பி தொகுதிகளை வென்றுள்ளனர். அவர்களுக்கு தேர்தல் சின்னமாக மூன்று நட்சத்திரங்களுடனான கொடி வழங்கப்பட்டுள்ளது.
ஆக, ஒரு கட்சி பயன்படுத்தும் அடையாளங்கள், நிறங்களை வேறு கட்சிகள் பயன்படுத்த சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை. ஒரு கட்சி பயன்படுத்தும் சின்னத்தைத்தான், வேறு கட்சிகளோ, சுயேட்சை வேட்பாளர்களோ பயன்படுத்த முடியாது. த.வெ.க கட்சிக் கொடியில் யானை இடம்பெற்றிருப்பதில் விதிமீறல்கள் ஏதுமில்லை என்பதால், தேர்தல் ஆணையம் தடை விதிக்க வாய்ப்பில்லை. தவிர, பகுஜன் சமாஜ் கட்சியின் யானை உருவமும், த.வெ.க கொடியிலுள்ள யானை உருவமும் வெவ்வேறு என்பதால், த.வெ.க கொடிக்கு சிக்கல் வர வாய்ப்பில்லை" என்றனர் விரிவாக.
விஜய் கட்சிக் கொடிக்கு, சட்டரீதியாக தடைவிதிக்க வாய்ப்பு இல்லை எனத் தகவல்கள் சொன்னாலும், கடைசி வரை முட்டி மோதிப் பார்ப்பது என முடிவெடுத்திருக்கிறதாம் பகுஜன் சமாஜ் கட்சி வட்டாரம். அதன் முன்னோட்டமாகத்தான், தேர்தல் ஆணையரிடமும் மனு அளிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் அக்கட்சியின் உள்விவரம் அறிந்தவர்கள். ஆனால், இதையெல்லாம் விஜய் சட்டை செய்யவில்லை என்கிறது த.வெ.க வட்டாரம்.
"யானை தொடர்பான பிரச்னை எழுந்தவுடனேயே, தன்னுடைய வழக்கறிஞர்களை அழைத்து விவாதித்தார் விஜய். 'இதில் சட்டச்சிக்கல் ஏதும் எழ வாய்ப்பில்லை' என ஆவணங்களுடன் வழக்கறிஞர்கள் எடுத்துச் சொல்லவும்தான், மாநாடு நடத்த அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்.பி-யிடம் கடிதம் கொடுக்கச் சொன்னார். 'எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்' என்கிற உறுதியுடன் களத்தில் இறங்கிவிட்டார்" என்கிறார்கள் த.வெ.க-வின் சீனியர் நிர்வாகிகள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88