குஜராத்தில் கடந்த நான்கு நாள்களாக எப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. குஜராத்தின் செளராஷ்டிரா மற்றும் வதோதரா பகுதிகள் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆயிரக்கணக்கானோர் வெளியில் வர முடியாமல் தவிக்கின்றனர்.
18000 பேரை ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு பத்திரமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திருக்கின்றனர். மோர்பி பகுதியில் காந்தாவதி ஆற்றில் டிராக்டர் ஒன்றை தண்ணீர் அடித்துச்சென்றுவிட்டது. அதில் 8 பேர் இருந்தனர். ஒருவர் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. காந்தி நகர், ஆனந்த், மஹிசாகர், அகமதாபாத், பரூச், ஜாம்நகர் போன்ற மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு இருக்கிறது. 13 பேர் மழை நீரில் மூழ்கி இறந்துபோனார்கள். இதுதவிர வீடு இடிந்துவிழுந்து, மரங்கள் ஒடிந்துவிழுந்தும் சிலர் இறந்துள்ளனர். மொத்தம் 29 பேர் இது வரை இறந்துள்ளனர்.
மீட்புப்பணியில் ராணுவத்தினரும், விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் படகுகளின் துணையோடு மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்திருப்பதால் செளராஷ்டிராவின் ஜாம்நகர் மற்றும் துவாரகா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மழை குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்திருக்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடுகின்றனர்.
துவாரகாவின் கம்பாலியா நகரில் 36 மணி நேரத்தில் 513 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. முப்படைகள் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வதோதராவில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்யாவிட்டாலும் விஷ்வமித்ரி ஆற்றில் அளவுக்கு அதிகமாக ஓடும் தண்ணீர் நகருக்குள் புகுந்துள்ளது.
அஜ்வா, பிரதாப் நீர்த்தேக்கங்களில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்படுவதால்தான் விஷ்வமித்ரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் நகருக்குள் புகுந்துள்ளது.
கடந்த 20 ஆண்டில் இது போன்று மழை வெள்ளம் நகருக்குள் வந்ததில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். வதோதராவின் சில இடங்களில் 10 முதல் 12 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது. பொதுமக்கள் தங்களது வீட்டின் மாடியில் தங்கி இருக்கின்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில்,''நாங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் இருக்கிறோம். யாரும் உதவிக்கு வரவில்லை. எங்களுக்கு சாப்பிடவும் எதுவும் இல்லை. 20 ஆண்டில் இது போன்ற ஒரு நிலையை நான் கண்டதில்லை. இரவு முழுவதும் உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கிறோம். எந்த நிவாரணப்பொருளும் கிடைக்கவில்லை''என்றார்.
அகமதாபாத்தின் மதுமல்தி குடியிருப்பு வளாகத்தில் 10 அடிக்கும் அதிகமாக தண்ணீர் தேங்கியுள்ளது. அதில் சிக்கிக்கொண்ட 72 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக படகு மூலம் மீட்டனர்.
2017-ம் ஆண்டும் இதே போன்ற நிலை ஏற்பட்டது. அப்போதைய முதல்வர் நேரில் வந்து பார்வையிட்டுவிட்டு நிலைமையை சரி செய்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் 7 ஆண்டுகளுக்கு பிறகும் இதே நிலைதான் இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
140 நீர்நிலைகள், 24 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர் புபேந்திர பட்டேலுடன் போனில் பேசி தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.