"சிலை கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கில் பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் உண்மையை கண்டறிய முடியும்.." என்று சி.பி.ஐ தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலை கடத்தல்காரர்களுக்கு உதவியதாக சி.பி.ஐ பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையில் சி.பி.ஐ தரப்பு கடுமையாக எதிர்த்துள்ளது.
பழமையான சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யபட்ட சம்பவத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி காதர் பாட்சா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தன்னை பழிவாங்கும் நோக்கில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக இருந்த பொன் மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்ததாக காதர்பாட்சா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, இந்த புகார் குறித்து சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை நடத்திய சி.பி.ஐ, பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்து, சென்னையிலுள்ள அவர் வீட்டில் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் சி.பி.ஐ தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்திருந்த மனுவில், "சிலை கடத்தல் வழக்கை டி.ஐ.ஜி தகுதிக்கு குறையாத அலுவலரைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், சி.பி.ஐ-யின் எஸ்.பி வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர் வழக்கு பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்ல, சட்டவிரோதமானது. தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றம்தான் முடிவு செய்யும். சி.பி.ஐ என் வீட்டில் நுழைந்து பொருள்களை கைப்பற்றியது சட்டவிரோதமானது. இது என் மீதான நன்மதிப்பை குலைக்கும் விதமாக உள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று இடையீட்டு மனுவை காதர்பாட்சா தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "முன்னாள் ஐ.ஜி-யான மனுதாரர் சிலை கடத்தல் வழக்கை நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற கண்காணிப்பில் நடத்தியுள்ளார். தற்போது இவர் மீது சி.பி.ஐ பொய்யான குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மனுதாரருக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை, எனவே ஜாமீன் வழங்க வேண்டும்' என வாதிட்டார்.
காதர்பாட்சா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பொன் மாணிக்கவேல் இந்த வழக்கு விசாரணையை ஒருதலைபட்சமாக நடத்தி காதர் பாட்சா மீது வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார். அதே நேரம் மற்ற காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். மேலும், சிலை கடத்தல்காரர்களை பாதுகாக்கும் விதத்திலும் செயல்பட்டுள்ளார். எனவே, இவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது" என வாதிட்டார்.
சி.பி.ஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. தமிழகத்திலிருந்து சிலைகள் கடத்தப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிமன்ற கண்காணிப்பில் டி.எஸ்.பி காதர் பாட்சா விசாரித்து வந்த நிலையில், அப்போதைய காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் விசாரணையை எடுத்துக்கொண்டு நடத்தி வந்தார். இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் வகையிலும் விசாரணை அதிகாரியாக இருந்த காதர் பாட்சா மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளார். குறிப்பாக சிலை கடத்தல்கார்களை பாதுகாக்கும் வகையில் பொன் மாணிக்கவேல் செயல்பட்டு உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் முதல் கட்ட விசாரணை முடித்து பொன்மாணிக்கவேல் மீது போதிய முகாந்திரம் இருந்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவரை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் உண்மையை கண்டறிய முடியும். ஏன் பொய்யாக டிஎஸ்பி காதர் பாட்சாவை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும், சிலை கடத்தல்காரர் சுபாஷ் கபூருக்கு எந்த வகையில் இவர் உதவி செய்தார் என்பதையும் முழுமையாக கண்டறிய முடியும். எனவே முன் ஜாமீன் வழங்கக் கூடாது" என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, 'இந்த வழக்கில் சுபாஷ் கபூருக்கு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நேரடியாக உதவி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதா?" என கேள்வி எழுப்பினர்.
அப்போது சி.பி.ஐ தரப்பில் அதற்கான ஆவணங்களை சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி. இன்று இந்த வழக்கில் உத்தரவிடுவார் என்று கூறப்படுகிறது.