இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்:
சிம்புவின் 'மகாராஜா' பாராட்டு!
நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் திரையரங்களில் மட்டுமன்றி ஓ.டி.டியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிய இந்தியப் படங்களில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட திரைப்படங்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இப்போது வரை கோலிவுட், பாலிவுட் என அனைத்துப் பக்கங்களிலிருந்தும் இந்தப் படத்தை பாராட்டி பலர் பேசி வருகிறார்கள். அந்த வகையில் 'மகாராஜா' படத்தை சிம்பு பார்த்துவிட்டு இயக்குநர் நித்திலனை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக நித்திலன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், " உங்களுடனான இந்த அருமையான சந்திப்புக்கு நன்றி சிம்பு சார். மகாராஜா திரைப்படத்தை பற்றியும் சினிமாவை பற்றியும் ஆழமாக கலந்துரையாடினோம். நீங்கள் அனைத்தையும் வெளிப்படையாகப் பேசும் ஒருவர். அதுமட்டுமல்ல மிகவும் எளிமையானவர். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி!" என பதிவிட்டிருக்கிறார்.
யோகி பாபுவின் 'வாழை' விமர்சனம்!
மாரி செல்வராஜ் தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த துயரமிகு சம்பவத்தை மையப்படுத்தி 'வாழை' திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இயக்குநர் மணி ரத்னம், ஷங்கர் தொடங்கி பிரதீப் ரங்கநாதன் வரை பல இயக்குநர்களும் 'வாழை' படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார்கள். நடிகர்கள் பலரும் வாழை படத்தைப் பார்த்துப் பாராட்டியிருக்கிறார்கள். அந்த வரிசையில் யோகி பாபுவும் படத்தைப் பார்த்துவிட்டு வாழ்த்தியிருக்கிறார். அவர், "பரியேறும் பெருமாள் முடிச்சதுக்குப் பிறகு மாரி செல்வராஜ் வாழ்க்கைல நிறைய பிரச்னைகள் இருந்ததுனு தெரிஞ்சது. ஆனா இவ்வளவு வலியும் சோகமும் இருக்குனு மாரி என்கிட்ட சொன்னதே கிடையாது. 'வாழை' படத்தை ரொம்பவே அற்புதமாக பண்ணியிருக்கார்." என்றிருக்கிறார்.
பா. இரஞ்சித் நெக்ஸ்ட்!
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கிற 'தங்கலான்' திரைப்படம் 100 கோடி வசூலை எட்டியிருக்கிறது. இந்தியில் இப்படம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகவிருக்கிறது. 'சார்பட்டா பரம்பரை 2', 'வேட்டுவம்' என பா.இரஞ்சித் இரண்டு படங்களை லைன் அப்பில் வைத்திருக்கிறார். இவை இரண்டும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதுதான். இதில் அவர் அடுத்ததாக 'வேட்டுவம்' படத்தை முதலில் எடுக்கவிருக்கிறாராம். இதில் 'அட்டகத்தி' தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் என்கிறார்கள்.
சீரியஸ் டோனில் சதீஷ்:
சீரியஸ் நடிகர்கள் காமெடி பக்கம் வருவதும், காமெடி நடிகர்கள் சீரியஸ் பக்கம் திரும்புவதும்தான் தற்போதைய டிரெண்ட். தற்போது நடிகர் சதீஷும் 'சட்டம் என் கையில்' படத்தில் ஒரு சீரியஸ் டோன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை 'சிக்ஸர்' படத்தை இயக்கிய சாச்சி இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சங்கமிக்கும் பேன் இந்தியா நடிகர்கள்!
'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கு நாள்களாக படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிற நடிகர்கள் தொடர்பான அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். மலையாளத்திலிருந்து 'குட்டண்ணா' செளபின் சாஹிரை முதல் முறையாக தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் லோகேஷ். இவருக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதன் பிறகு டோலிவுட்டிலிருந்து நடிகர் நாகர்ஜூனா இணைந்திருக்கிறார். இவர் கூடிய விரைவில் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது
ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் ஷ்ருதி ஹாசன் நடிக்கிறார். ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். ரஜினியும் சத்யராஜும் கடைசியாக 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தில் இணைந்து நடித்தார்கள். 38 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து 'கூலி' படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41