பெருங்காயம் வெறும் மசாலாப்பொருள் மட்டுமல்ல... அது நம் வீட்டுச் சமையலறைக்குள் இருக்கிற ஆகச்சிறந்த மருந்தும்கூட...
1. நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. பெருங்காயத்தில் தாவரப் பிசின்கள், மாவுப்பொருள், சோப்புக் கட்டி போன்றவைக் கலப்படம் செய்யப்பட்டு சந்தையில் உலா வருகிறது. அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும்.
2. பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டு வைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம்.
3. தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும்.
4. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையையும், தீற்றலாக மாதவிடாய் வரும் பிரச்னையையும் பெருங்காயம் சீர் செய்யும்.
5. சினைப்பையில் நீர்க்கட்டி உள்ள பெண்கள், பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது.
6. அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது.
7. சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றைத் தலா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இரண்டரை கிராம் பெருங்காயத்தை எடுத்துச் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதைச் சாதத்தில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையாகச் சாப்பிடவும். பிறகு சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண் முதலான வாய்வு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும்.
8. இரிடபுள் பௌல் சிண்ட்ரோம் இருப்பவர்களுக்கும் பெருங்காயம் பலன் தரக்கூடியது.
9. குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பப்பையிலிருந்து ஒருவகையான திரவம் (லோசியா - Lochia) வெளிப்படும். அது முழுமையாக வெளியேற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்களுக்குக் காலையில் கொடுப்பது நல்லது.
10. புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில், மார்பகப் புற்று, நுரையீரல் புற்று மற்றும் கல்லீரல் புற்று செல்களின் அசுர வளர்ச்சியைப் பெருங்காயத்தில் உள்ள `பாலிபீனால்கள்' வெகுவாகக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது.