ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். அதனடிப்படையில் நடிகர்கள், இயக்குநர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டு வருகிறது. மலையாள சினிமா கலைஞர்கள் சங்கமான `அம்மா' அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக்-மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து, அவர் `அம்மா' அமைப்பின் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே சினிமா கலைஞர்கள் சங்க தலைவராக இருந்த மோகன்லால் உள்ளிட்டவர்கள் எந்த கருத்தையும் கூறவில்லை. மேலும் மலையாள சினிமா கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மோகன்லால் கூறுகையில், "ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்து பதில் கூறவேண்டியது `அம்மா' அமைப்பு மட்டும் அல்ல. சினிமாத்துறை முழுவதும் பதிலளிக்க வேண்டும். என்ன பிரச்னை என்றாலும் `அம்மா' அமைப்பைக் குற்றம்சாட்டுகின்றனர். அதிகமான கேள்விகள் என்னை நோக்கியும், `அம்மா' அமைப்பை நோக்கியுமே வருகின்றன. வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்துதான் `அம்மா' அமைப்பின் பதவியில் இருந்து விலகினேன். கூகுள் மீட் மூலம் அனைவரது கருத்தையும் கேட்டுத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. `அம்மா' அமைப்பின் உறுப்பினர்களுக்கு பென்ஷன் வழங்குவது, இன்சூரன்ஸ் வழங்குவது, வீடுகள் கட்டிக்கொடுப்பது, மருத்துவ முகாம்கள் நடத்துவது ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. மலையாள சினிமா தொழில் தகர்ந்துபோகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மலையாள சினிமாவை குறிவைத்து இந்த துறையை மொத்தமாக தகர்த்துவிடாதீர்கள்.
மலையாள சினிமாத் துறையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். `அம்மா' அமைப்பின் நிர்வாகிகள் ராஜினாமா செய்தது தோல்வியோ, ஒழிந்து ஓடுவதற்கோ அல்ல. குற்றச்சாட்டுகள் தேவையில்லாமல் எங்களை நோக்கி வருகிறது. ஹேமா கமிட்டி அறிக்கையில் நிறைய அறிவுறுத்தல்கள் உள்ளன. இந்த கமிட்டி நல்ல விஷயத்துக்காகத்தான் எனத் தோன்றுகின்றது. சினிமாத்துறையை நல்ல நிலைக்கு கொண்டுசெல்லும் நல்ல அறிவுறுத்தல்கள் அதில் உள்ளன. ஒரு அமைப்பை மட்டும் சிலுவையில் அறைவது சரியல்ல. பிற மொழி சினிமாக்களிலும் ஹேமா கமிட்டி போன்ற அமைப்பு ஆய்வு செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் உள்ளது. அனைவருக்கும் சமநீதி ஏற்பட வேண்டும். நான் ஒருவன் நினைத்தால் சட்டத்தை மாற்ற முடியாது. இந்த பின்னடைவை சரிசெய்து மலையாள சினிமாத்துறையை புதுப்பித்து எடுக்க வேண்டும். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். `அம்மா' அமைப்பின் தலைவர் என்ற முறையில் அல்ல அதிக காலம் மலையாள சினிமாவில் இருப்பவன் என்ற நிலையில் நான் பேசுகிறேன். எனக்கு மிக அதிகமான வருத்தம் உண்டு. இந்தச் செய்தி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சென்று மலையாள சினிமா தகர்ந்துபோக காரணம் ஆகிவிடக்கூடாது.
என் மனைவியின் அறுவை சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் நான் வெளியூரில் இருந்தேன். அதனால்தான் உங்களிடம் பேசுவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது. சினிமா சமூகத்தின் ஒருபகுதியாகும். மற்ற இடங்களில் நிகழுவது இங்கும் நடக்கிறது. `அம்மா' அமைப்பு தொழிலாளர் யூனியன் அல்ல... உறுப்பினர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட அமைப்பாகும். மலையாள சினிமாத்துறையில் சுமார் 21 அமைப்புகள் உள்ளன. அவைகளிடம் கேள்வி கேட்காமல் `அம்மா' அமைப்பிடம் மட்டுமே கேள்வி எழுப்புவது என்ன விதம் என தெரியவில்லை. சினிமாவில் பவர் குரூப் பற்றி எனக்கு தெரியவில்லை. அப்படி ஒன்று உள்ளதை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நான் சினிமாவுக்கு வந்தபோது எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தது. நிறைய நல்ல மனது உள்ளவர்கள் நிறைந்த துறைதான் இது. அரசும், போலீஸும் குற்றம் செய்தவர்களுக்கு எதிராக உள்ளது. என்னிடம் உங்கள் கேள்விகளுக்கு பதில் இல்லை. இது கோர்ட்டு வரை சென்றுள்ள விஷயத்தில் நான் எப்படி பதில் கூற முடியும். இது போன்ற புகார்கள் இனி ஏற்படாதவகையிலான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். சினிமாவில் உள்ளவர்களின் பாதுகாப்புக்காகத்தான் `அம்மா' அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எங்களை அன்னியப்படுத்தாதீர்கள்" என்றார்.