மத்திய நிதி அமைச்சகமானது, கூட்டு வங்கிக் கணக்கைத் தொடங்க LGBTQ சமூகத்தினருக்கு எந்தத் தடையும் இல்லையென குட் நியூஸ் ஒன்றை அறிவித்திருக்கிறது. ஆகஸ்ட் 28-ம் தேதியன்று வெளியான இந்த அறிவிப்பில், ``Queer சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டு வங்கிக் கணக்கைத் திறப்பதற்கும், வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் கணக்கில் இருப்புத் தொகையைப் பெறுவதற்கு Queer உறவில் இருப்பவரை நாமினியாக பரிந்துரைப்பதற்கும் எந்தத் தடையும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Advisory regarding opening joint bank account and nomination thereof by persons of Queer community.#DFS_India pic.twitter.com/rf1ngKsPEa
— DFS (@DFS_India) August 29, 2024
இதன்மூலம், வங்கிகளில் இனி கூட்டு வங்கிக் கணக்கு தொடங்க LGBTQ சமூகத்தினருக்கு எந்தத் தடையும் இல்லை என மத்திய அரசே உறுதிப்படுத்திவிட்டது. இது தொடர்பான விளக்கத்தை அனைத்து வணிக வங்கிகளுக்கும் ஆகஸ்ட் 21-ம் தேதியே ரிசர்வ் வங்கி அனுப்பிவிட்டது. முன்னதாக கடந்த 2015-ல் ரிசர்வ் வாங்கி, மூன்றாம் பாலினத்தவர்கள் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும், அது தொடர்புடைய சேவைகளைப் பெறுவதற்கும் உதவும் வகையில், அனைத்து படிவங்கள் மற்றும் விண்ணப்பங்களிலும் 'மூன்றாம் பாலினம்' என்ற தனி நிரலைச் சேர்க்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து பல வங்கிகள் மூன்றாம் பாலினத்தவருக்கான சேவைகளை வழங்கின. கடந்த 2022-ல், ESAF Small Finance Bank Ltd, மூன்றாம் பாலினத்தவருக்கு பிரத்யேகமாக 'ரெயின்போ சேமிப்புக் கணக்கு' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் டெபிட் கார்டு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. முன்னதாக, 2023-ல் ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தாண்டு ஏப்ரலில், கேபினட் செயலாளரின் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்தக் குழுவின் நேரடி பொறுப்பானது, goods and services-ஐ அணுகுவதில் LGBTQ+ நபர்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இல்லை என்பதை உறுதிசெய்ய எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் LGBTQ+ சமூகம் வன்முறை, துன்புறுத்தல் போன்ற எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்ய எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை ஆய்வு செய்வதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.