இரண்டாம் உலகப் போர் பல லட்சக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியது. இருந்தாலும் இந்தப் பயங்கர போரால் மூன்று முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தது. இந்தக் கண்டுபிடிப்புகளில் முதன்மையானது நோய்த்தொற்று நுண்ணுயிரிகளை அழித்து உயிர்காக்கும் பென்சிலின் என்ற ஆன்டிபயாட்டிக்.
இரண்டாவது கண்டுபிடிப்பு கண்புரை நோய் அறுவை சிகிச்சையின்போது கண்ணுக்குள் மாட்டப்படும் செயற்கை லென்ஸ்.
அடுத்ததாகப் பருத்தி இழைக்கு மாற்றாகச் செயற்கை இழைகளை உருவாக்கத் தூண்டியதும் இந்தப் போர்தான்.
இதில் செயற்கை லென்ஸ் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
கண்ணில் தூசு விழுந்தால் எப்படி இருக்கும்?
கண் உறுத்தும், கண்ணீராய் கொட்டும். கண் கோவைப் பழமாகச் சிவக்கும். படிப் படியாகக் கண் வீங்க ஆரம்பிக்கும். எப்படியாவது வெளியே எடுக்கத் துடிப்போம்.
கண்ணில் தூசி விழுந்தால் ஏன் உறுத்துகிறது?
நம் உடலுக்கு நோய் எதிர்ப்புத்திறனை உறுதிப்படுத்தும் செல்கள்தான் இதற்கு காரணம்.
கண்ணுக்குள் விழுந்த தூசிகளையும் பிற துகளையும் நோய் எதிர்ப்புச் செல்கள் துரத்தித் துரத்தித் தாக்குகின்றன. இதனால் கண்ணுக்குள் விழுந்த துகள்கள் பலவீனமடைகின்றன. இந்தத் தாக்குதலால் கண்ணில் உள்ள செல்களும் சேதமடைகின்றன. இந்தச் சேதத்தால்தான் கண் கலங்கிச் சிவக்கின்றது, உறுத்துகின்றது. மேலும் கண் வீக்கமாகின்றது. இதனை ஆங்கிலத்தில் inflammation என அழைக்கின்றனர். தமிழில் "அழற்சி" என அழைக்கின்றனர்.
சாதாரண மக்களான நமக்குக் கண்ணில் தூசும் மற்றும் மண் துகள்களும் விழ வாய்ப்புள்ளது. ஆனால் இரண்டாம் உலகப் போர் விமானிகளுக்குக் கண்ணில் கூர்மையான சிறு சிறு பிளாஸ்டிக் துகள்கள் பாய்வது வழக்கமாக இருந்தன.
பிளாஸ்டிக் துகள்கள் எப்படி விமானிகளின் கண்ணிற்குள் பாய்ந்தது?
விமானியின் தலைக்கவசத்தின் முன்னால் உள்ள கண்ணாடியும், விமானத்தின் முன் உள்ள கண்ணாடியும் அக்ரிலிக் என்ற வேதிப் பொருளால் செய்யப்பட்டது. இந்த வேதிப்பொருளைப் பாலிமீதைல் மீதாகிரைலேட் (PolyMethyl Methacrylate (PMMA)) என அழைக்கின்றனர்.
ஒரு துண்டு அக்ரிலிக் பார்க்கச் சாதாரண கண்ணாடி போன்றுதான் இருக்கும். ஒளி எளிதாக இதனில் ஊடுருவும். ஆனால் இது எளிதில் உடையும் கண்ணாடி இல்லை. இதனை அவ்வளவு எளிதில் உடைக்க முடியாது. காரணம் இது மிகவும் வலிமையானது.
1940-களில் போர் விமானங்கள் 850 கிலோமீட்டர் வேகம்வரை சீறிப் பாய்ந்தது. அந்த விமானத்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிமேல் காற்று அதீத அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனைச் சாதாரண கண்ணாடியால் தாங்க முடியாது. அதனால்தான் அதிக வலிமை வாய்ந்த அக்ரீலிக் கண்ணாடி விமானத்தின் முன் இதனைப் பொருத்தியுள்ளனர். ஆனால் விமானத்தைவிடப் பல மடங்கு வேகமாக எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் சீறிப்பாய்ந்து வரும்.
இப்படி வேகமாக வரும் குண்டுகள் விமானத்தின் முன் பகுதியில் உள்ள அக்ரிலிக் கண்ணாடியைத் தாக்க வாய்ப்புள்ளது. அப்போது இந்த அக்ரிலிக் கண்ணாடி உடைந்து சிறு சிறு கூர்மையான துகள்களை உருவாக்கும். இவை படுவேகமாக விமானிகளின் கண்களைப் பதம் பார்த்தன. இரண்டாம் உலகப் போரின்போது இப்படி விமானிகளின் கண்களில் காயங்கள் அடிக்கடி ஏற்பட்டன.
இந்தக் காலகட்டத்தில் ஹெரால்டு ரிட்லி என்ற ஒரு கண் மருத்துவர் இருந்தார். இவர் 1906 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர். இவர் கண் மருத்துவராக இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் பர்மா ஆகிய நாடுகளில் பணியாற்றியவர். விமானிகளின் கண்களில் சொருகி இருக்கும் கூர்மையான அக்ரிலிக் துகள்களை அகற்றி வருவதும் இவரின் முக்கிய வேலைகளில் ஒன்றாக இருந்தது.
மென்மையான தூசு கண்ணில் மெதுவாக வந்து விழுந்தாலும் கண்ணில் எரிச்சலை உண்டுபண்ணுகின்றது. கண் சிவந்து வீங்கத் தொடங்குகிறது. ஆனால் வலிமையான மற்றும் கூர்மையான அக்ரிலிக் துகள்கள் படு வேகமாக வந்து கண்ணுக்குள் விழுந்தாலும் கண்ணில் எரிச்சல் ஏற்படுவதில்லை. கண் கலங்கிச் சிவந்து வீங்குவதும் இல்லை. காரணம் அக்ரிலிக் துகள்களை நம் நோய் எதிர்ப்புச் செல்கள் வேற்றுப் பொருளாகக் கருதவில்லை. அதனால் நோயெதிர்ப்பு செல்கள் இதனை எதிர்த்து தாக்குதல் நடத்தவில்லை. எனவே கண்ணில் உறுத்தல் ஏற்படவில்லை. கண் கலங்கி வீங்கவும் இல்லை... இதனைக் கவனித்த மருத்துவர் ஹெரால்டு ரிட்லி வியந்து போனார்.
மேலும், உடலெங்கும் காயமடைந்த விமானிகள் உயிரிழப்பதும் உண்டு. இப்படி இறந்தவர்கள் கண்களிலும் கூர்மையான அக்ரிலிக் துகள்கள் இருந்தன. இவர்கள் சிலர் உடலெங்கும் காயம் பட்டுப் பல நாள்களுக்குப் பிறகு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டவர்கள். இவர்கள் பல நாள்கள் கண்களில் கொத்துக் கொத்தாகக் கூர்மையான அக்ரிலிக் துகள்கள் சொருகிய நிலையில் மருத்துவ உதவி இன்றித் தவித்தவர்கள் பின்னர் பரிதாபமாக இறந்தார்கள்.
இப்படி இறந்த இவர்களின் உடலை மருத்துவர் ஹெரால்டு ரிட்லி பிரேதப் பரிசோதனை செய்தார். அப்போது இறந்தவர்களின் கண்களில் கூர்மையான அக்ரிலிக் துகள்களைப் பார்த்தார். ஆனால் அவை கண்களில் வீக்கத்தையோ அல்லது கண்களைக் கலங்க வைக்கவோ இல்லை. அதாவது பல நாள்கள் அக்ரிலிக் துகள்கள் கண்ணுக்குள் இருந்தாலும் கண்ணில் அழற்சி ஏற்படவில்லை! இதனைக் கவனித்த ஹெரால்டு ரிட்லி அதிசயத்தில் உறைந்தே போய்விட்டார்.
உடனே. “கண்புரை நோயாளிகளுக்கு இந்த அக்ரிலிக்கை கொண்டு கண்ணாடி தயாரித்து அதனைக் கண்ணுக்குள் பதிந்தால் என்ன?” என ஹெரால்டு ரிட்லிக்கு ஒரு அற்புதமான யோசனை தோன்றியது.
கண்புரை 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வரும் ஒரு நோயாகும். இந்த நோயைக் கட்ராக்டு (Cataract) என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.
புகைப்படக் கருவியின் முன்பு பகுதியில் ஒரு லென்ஸ் உள்ளதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோல நம் கண்ணுக்குள்ளும் ஒரு லென்ஸ் உள்ளது. இந்த லென்ஸ்தான் நாம் பார்க்கும் காட்சியை விழித்திரையில் பதிய வைக்கிறது.
இந்த லென்ஸ் நிறைய நீள் வடிவ செல்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டது. இந்தச் செல்களில் மரபணுக்களான DNA மூலக்கூறுகளுள்ள உட்கரு கிடையாது. மேலும் மைட்டோகாண்டிரியா போன்ற பிற உள்ளுறுப்புகளும் பெருமளவில் இந்தச் செல்களில் இருக்காது. இதனால் இந்தச் செல்கள் ஒளியை மிகவும் நன்றாக ஊடுருவச் செய்யும். அதனால்தான் நாம் கச்சிதமாக இவ்வுலகைப் பார்த்து ரசிக்க முடிகிறது.
கரு உருவாகும்போது தோன்றிய இந்த லென்சில் உள்ள செல்கள் நம் இறுதி நாள்வரை வாழக்கூடியது. மாறாகத் தோல் செல்கள் 30 நாள்களே உயிர் வாழ்கின்றன. அதாவது சென்ற மாதம் நம் உடலைப் போர்த்தி இருந்த தோல் இன்று இல்லை. இன்று நம் உடலில் உள்ள தோல் புதியது ! அதுமாதிரி 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த எலும்பு இன்று நம் உடலில் இல்லை. காரணம் எலும்புச் செல்கள் சுமார் 30 ஆண்டுகள்தான் உயிர் வாழ்கின்றன.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சிலருக்கு இந்த லென்சில் உள்ள செல்கள் தன் ஒளி ஊடுருவும் தன்மையைப் படிப்படியாக இழக்கின்றது. இதனால் கண் பார்வை மங்கத் தொடங்குகிறது. நாளாக நாளாக நிலைமை மோசமாகி இறுதியாகக் கண் தெரியாமல் போகும். இந்த நிலையைத் தான் கண்புரை நோய் என அழைக்கப்படுகின்றது.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், இந்தக் கண்புரை நோய்க்கான அறுவை சிகிச்சை சிக்கல் நிறைந்ததாக இருந்தது. அப்போது நோயாளிகளின் கண்ணில் உள்ள ஒளி ஊடுருவ முடியாத லென்ஸை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தினார்கள். பாதிப்படைந்த லென்சை வெட்டி எடுத்த இடத்தை அப்படியே விட்டு விடுவார்கள்.
இந்த அறுவைச் சிகிச்சை முடிந்து புண் ஆறும் வரைக் காத்திருப்பார்கள். பிறகு நோயாளிகளுக்குக் கண் ஓரளவிற்குத் தெரியும் படி ஒரு சோடா புட்டி கண்ணாடியை மாட்டி விட்டு விடுவார்கள். அந்தக் கண்ணாடியின் உதவியால் உலகத்தைச் சற்று பார்க்க முடியும். அப்படியே சமாளித்து இறுதிக் காலத்தை ஓட்டவேண்டியதாகவே அன்றைய நிலைமை இருந்தது.
இந்த நிலையில், மருத்துவர் ஹெரால்டு ரிட்லி போர் விமானத்தின் முன் கண்ணாடி செய்யப்பட்ட PMMA என்ற அக்ரிலிக் பொருளைக் கொண்டு ஒரு சிறிய லென்ஸ்சை வடிவமைத்தார். இதற்கு 1940 ஆம் ஆண்டு காப்புரிமையும் பெற்றார். மருத்துவர் ஹெரால்டு ரிட்லி இதனைக் கண்புரை நோயாளிகளின் கண்களிலிருந்து அகற்றப்பட்ட லென்ஸ் இருந்த இடத்தில் பொருத்த ஆராய்ச்சி செய்தார். அந்த ஆராய்ச்சி 9 ஆண்டுகள் நீடித்து அமோக வெற்றி பெற்றது.
இதன் தொடர்ச்சியாக 1949 ஆம் ஆண்டு முதல் முறையாக ஹெரால்டு ரிட்லி ஒரு நோயாளிக்கு அக்ரிலிக் கண்ணாடியால் செய்த லென்சைப் பொருத்தினார். இந்த அறுவைச் சிகிச்சை உலகத்தின் மொத்த கண் மருத்துவத்தையும் புரட்டிப் போட்டது.
இப்படிப் பொருத்தப்பட்ட செயற்கை லென்ஸை intraocular lens (IOL) என அழைக்கின்றனர். இந்தச் செயற்கை லென்ஸ் கண்புரை நோய்க்கான அறுவை சிகிச்சையை மிக எளிமையாக்கியது.
மேலும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகளுக்குத் தெளிவான பார்வை விரைவில் கிடைத்தது. இந்தச் சாதனையால் கண் மருத்துவ உலகம் ஹெரால்டு ரிட்லியை கொண்டாடியது. மேலும் இந்தக் கண்டுபிடிப்புக்கான காப்புரிமை இவருக்குப் பெரும் செல்வத்தை ஈட்டித் தந்தது.
மருத்துவ உலகில் தன்னை யாரும் மறக்க முடியாதபடி முத்திரை பதித்த ஹெரால்டு ரிட்லி 2001ஆம் ஆண்டு தன் 95ஆம் வயதில் மறைந்தார்.
“இந்தியாவில் மருத்துவம் பார்ப்பது மற்றும் மருத்துவமனையை நிர்வகிப்பது மட்டுமே மருத்துவர்களின் பணிகளாக உள்ளன. புதிய மருத்துவத்தை உருவாக்கும் பணிகளை செய்வதில்லை" என்று சொல்கிறார்கள்.
ஆனால் வளர்ந்த நாடுகளில் உள்ள மருத்துவப் படிப்புகள், ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையிலேயே திட்டமிடப்பட்டுள்ளன. எனவே வளர்ந்த நாடுகளின் மருத்துவர்களில் ஒரு பகுதியினர் தீவிர மருத்துவ ஆராய்ச்சியில் கவனம் செலுத்துகின்றனர்.
எனவேதான் புதிய மருந்துகளும், புதிய மருத்துவ கருவிகளும் மற்றும் மருத்துவ செய்முறைகளும் வளர்ந்த நாட்டில்தான் உதயமாகின்றன. நாம் அதனை வாங்கி பயன்படுத்தும் நிலையில்தான் இன்றும் இருக்கின்றோம். ஆனால் நிறைய மக்கள் தொகையைக் கொண்ட நம் நாடு மருத்துவ ஆராய்ச்சிக்குத் தலைசிறந்தது. ஆகையால் நம் நாட்டிலும் தீவிர மருத்துவ ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் மருத்துவ படிப்பைச் சீரமைக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.