தீவிரவாதத்தை ஒழிக்கும் விஷயத்தில் சீனா இரட்டை வேடம் போடுகிறது என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியும் லஷ்கர் இ தொய்பா கமாண்டருமான ஜகியுர் ரகுமான் லக்வியை பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி விடுதலை செய்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் ‘சாம்னா’ பத்திரிகை தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
தீவிரவாதி லக்வியை விடுவித்த பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியது. அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பெரும்பாலான எல்லா நாடுகளும் ஆதரவளித்தன. ஆனால், சீனா மட்டும் எதிர்க்கிறது. ஒரு பக்கம் தன் நாட்டில் தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு சீனா ஒடுக்குகிறது. மறுபக்கம், இந்தியாவில் தீவிரவாதத் தில் ஈடுபடுபவர்களை சீனா ஆதரித்து வருகிறது. இது சீனாவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடு பட்டதாக ஜின்ஜியாங் மாகாணத்தில் சமீபத்தில் 13 முஸ்லிம்களை தூக்கி லிட்டது சீன அரசு. அதற்கு முன்பு கூட சீனாவில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். தன் நாட்டில் இருந்து மட்டும் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டுள்ளது சீனா.
பாகிஸ்தானுக்கு அணு குண்டுகள், ஏவுகணைகள், அணு உலைகள் போன்ற எல்லா உதவிகளையும் சீனா செய்கிறது. ராணுவத்தை தவிர பாகிஸ்தானில் உள்ள எல்லா வெடி பொருட்களும் சீனா வழங்கியது தான். இந்தியாவுக்கு எதிராக இதை சீனா செய்து வருகிறது.
இந்தியாவின் நண்பனாக சீனா எப்போதும் இருக்க முடியாது. அதற்கு லக்வி விடுதலையை கண்டுகொள்ளாமல், பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பது ஒன்றே சிறந்த ஆதாரம். இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும். எனவே, சீனா விஷயத்தில் இந்தியா மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சாம்னா தலையங் கத்தில் கூறப்பட்டுள்ளது.